விருட்சம் பேட்டி

விருட்சம் 112வது இதழில் (மார்ச் 2020) வெளியாகியுள்ள எனது பேட்டி இது.  அழகியசிங்கர் யதி வாசித்து முடித்ததன் விளைவு எனக் கொள்ளலாம்.

எழுத வேண்டுமென்று எப்போது தோன்றியது? அந்தச் சமயத்தில் உங்கள் வயதென்ன?

ஆறாம் வகுப்பில் இருந்தபோது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் சிறுவர் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எழுத ஆரம்பித்தேன். அவரது சந்தங்களை அடியொற்றியே எழுதினேன். அவரே அவற்றை கோகுலத்திலும் பிரசுரம் செய்தார். ஆரம்பம் அதுதான். என் தந்தை ஓர் எழுத்தாளராக இருந்தது பல விதங்களில் அப்போது எனக்கு வசதியாக இருந்தது. பத்திரிகை, கதைப் புத்தக வாசிப்பை வீட்டில் விமரிசிக்கவோ, தடுக்கவோ மாட்டார்கள் என்பது அதில் முக்கியமானது. பத்தாம் வகுப்பு விடுமுறையின்போது தீவிரமாகப் படிக்கத் தொடங்கினேன். என்னால் எழுத முடியும் என்ற எண்ணம் வந்தபோதே, என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமும் சேர்ந்து வந்தது. அப்படித்தான் வாழ்க்கை இப்போதும் இருக்கிறது.

எழுதுவது அலுக்கவில்லையா?

நிச்சயமாக இல்லை. என் விருப்பத்துக்கு எழுதுவது தவிர, நான் தொழிலாகக் கொண்டிருப்பதும் ஏராளமாக எழுதிக் குவிக்க வேண்டிய ஒரு துறையே. எப்போதும் அலுப்படைந்ததில்லை. சரியாகச் சொல்வதென்றால் எழுதும்போது மட்டும்தான் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். மற்ற நேரங்களில் ஒரு எருமை மாட்டைப் போலத்தான் இருப்பேன்.

ஒரு நாவலை எழுத எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்கிறீர்கள்?

அப்படிச் சொல்லத் தெரியவில்லை. யதி எழுத இரண்டு வருடங்கள் ஆயின. பூனைக்கதையை ஏழெட்டு மாதங்களில் எழுதினேன். இறவான் மூன்று மாதங்கள். எழுதும்போதே எடிட் செய்யும் குணம் உள்ளவன் நான். ஒவ்வொரு வரி எழுதியதும் திரும்பப் படித்துப் பார்ப்பேன். ஒவ்வொரு பத்தி முடிந்ததும் திரும்பப் படிப்பேன். தேவையான எடிட்டிங்கை அப்போதே செய்துவிடுவேன். முழுக்க எழுதி முடித்துவிட்டு மீண்டும் படித்தாலும் எடிட்டிங் அவசியம் அப்போது பெரும்பாலும் இராது. நான் ஒரு சாது எழுத்தாளன். ஆனால் மிகக் கொடூரமான எடிட்டர். இருபது முப்பது பக்கங்கள் எழுதிவிட்டு அப்படியே வெட்டி வீசுவதுண்டு. எழுதும்போது விமரிசனம் இல்லாமல் எழுதவும், எடிட் செய்யும்போது விமரிசகனாக மட்டுமே இருக்கவும் பழகியிருக்கிறது. கணக்குப் போட்டுப் பார்த்தால் எழுத எடுத்துக்கொள்ளும் நேரம் குறைவு. எடிட் செய்யத்தான் அதிக நேரம் பிடிக்கிறது.

இலக்கியத் தரமான எழுத்தையே நம்பி ஒருவர் இந்தக் காலத்தில் வாழ முடியுமா?

எனக்கு இந்த இலக்கியத் தரம் – வணிகத் தரம் என்ற சாதிப் பிரிவினையில் என்றுமே நம்பிக்கை இல்லை. நல்ல எழுத்து என்றும் நிற்கும். நான் நல்ல எழுத்தாளன். நான் வாழ்கிறேனே?

யதி என்ற நாவல் எப்படி உருவானது?

ஜாபால உபநிடதம் என்ற நூலில் துறவொழுக்கம் குறித்துச் சிறிது வாசிக்க வாய்த்தது. அதன் தொடர்ச்சியாக ராமானுஜரின் பூர்வாசிரம குருவும் பின்னாளைய சீடருமான யாதவப் பிரகாசரின் யதி தரும சமுச்சயத்தை முழுதாகப் படித்தேன். துறவு நிலை சார்ந்த பெரும் புரிதல் இதில் எனக்கு நிகழ்ந்தது. முன்னொரு காலத்தில் துறவியாகிவிட வேண்டும் என்ற கட்டுக்கடங்காத வெறியில் (ஆம். வெறிதான்.) எங்கெங்கோ அலைந்து திரிந்திருக்கிறேன். ஞானமடைந்துவிட வேண்டும் என்கிற வேட்கை தலைக்கேறி பல மடங்கள், சாதுக்கள், சன்னியாசிகளின் பின்னால் திரிந்திருக்கிறேன். இது குறித்து யதியின் முன்னுரையிலேயே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். மயிலை ராமகிருஷ்ண மடத்தின் அப்போதைய தலைவராக இருந்த சுவாமி தபஸ்யானந்தா அப்போது என்னை நெறிப்படுத்தினார். எனக்கு சன்னியாசம் சேராது என்று புரியவைத்துத் திருப்பி அனுப்பியவர் அவர்தான். தீவிரமாக எழுதத் தொடங்கியது முதலே யதியைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டு இருந்தேன். அது வடிவம் பெறப் பதினைந்து ஆண்டுகள் பிடித்தன. யதியில் வரும் நான்கு விதமான சன்னியாசிகளிலும் குறிப்பிட்ட சதவீதம் நான் இருக்கிறேன். அந்த நால்வரில் யார் ஒருவனைப் போலவும் நான் நூறு சதம் இல்லை என்பதை இதனை எழுதி முடித்த பின்புதான் உணர்ந்தேன். தபஸ்யானந்தா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார் என்பது அப்போது புரிந்தது!

1000 பக்கங்கள் கொண்ட யதி நாவலை எழுதி உள்ளீர்களே? அதை ஒருவர் எப்படி படிக்க முடியும்?

நீங்கள் எப்படிப் படித்தீர்களோ அப்படித்தான். உண்மையில் இந்நாவல் இத்தனைப் பக்கங்கள் வரும் என்று நான் நினைக்கவில்லை. பக்க அளவு என்றில்லை; எழுதும்போது வேறு எதைக் குறித்தும் நான் நினைப்பதில்லை. அன்றன்றைக்கு எழுதுகிற வரிகள் எனக்குப் பிடிக்கிறதா என்பதில் மட்டுமே என் கவனம் இருக்கும். எழுதி முடிக்கும்வரை என் எழுத்து எனக்கானது மட்டுமே. புத்தகமான பிறகு அது வாசகர்களுடையதாகிவிடுகிறது. ஆனால், யதிக்குக் கிடைத்த கவனம், மதிப்புரைகள் (சுமார் முப்பது மதிப்புரைகள் வந்தன. அவற்றைத் தொகுத்து ஒரு மின்நூலாகவும் வெளியிட்டிருக்கிறேன்.) விற்பனை – மறு பதிப்பு சாத்தியம் இவையெல்லாம் வாசகர்களுக்குப் பக்க அளவு ஒரு பொருட்டல்ல என்பதையே எனக்குச் சுட்டுகின்றன. வாசித்து முடிக்கும்போது ஒரு படைப்பு தரவேண்டிய திருப்தி பூரணமாகக் கிடைத்துவிடுமானால் வேறு எதுவுமே பொருட்டல்ல.

நீங்கள் இதுவரை எழுதிய புத்தகங்கள் எண்ணிக்கை என்ன?

பன்னிரண்டு நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. இறவான், சமீபத்தில் வெளியாகியிருக்கும் நாவல். பத்திரிகையாளனாக – ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எழுதிய அபுனைவு நூல்கள் ஐம்பதுக்கும் மேல்.

ஒரு எழுத்தாளன் தனக்கு மட்டுமல்ல மற்றப் படைப்பாளர்களுக்கு வாசகனாக இருக்க வேண்டுமென்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஓரெல்லை வரை இது சரி. நமக்கு முன்னால் எழுதிய முக்கியமான எழுத்தாளர்கள் அனைவரையும் விடாமல் படித்துவிட வேண்டும். நான் அப்படித்தான் செய்தேன். ஆனால் என் சமகால எழுத்தாளர்களை அவ்வளவு அக்கறையுடன் நான் வாசிக்கவில்லை. கூடாது என்பதல்ல. தேர்ந்தெடுத்துப் படித்தால் போதும் என்று நினைக்கிறேன்.

இப்போது உள்ள இலக்கியச்சூழல் எப்படி உள்ளது? ஆரோக்கியமாக இருக்கிறதா?

இலக்கியச் சூழல் என்று நீங்கள் சொல்வதும் நான் எடுத்துக்கொள்வதும் வேறு வேறு. என்னைப் பொருத்தவரை இலக்கியச் சூழல் என்பது எழுதுபவனுக்கும் வாசகர்களுக்குமான உறவு மட்டுமே. எழுதுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் அல்லது எழுதுபவர்களுக்கும் விமரிசகர்களுக்குமானதை இலக்கியச் சூழல் என்று நான் கருதவில்லை. நான் எந்தக் குழுவிலும் இல்லை. என் புத்தகங்களை யாருக்கும் மதிப்புரைக்கு அனுப்புவதில்லை. பெரும்பாலும் கூட்டங்களைத் தவிர்த்துவிடுகிறேன். என் நெருங்கிய நண்பர் வட்டத்தில் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. அநேகமாக இல்லை என்பேன். இப்படி இருப்பதே எனக்கு சௌகரியமாக இருக்கிறது. என் சந்தோஷத்துக்காக மட்டுமே நான் எழுதும்போது சூழலைப் பொருட்படுத்துவதில்லை. நான் எழுதுவது வாசகர்களுக்கும் அதே மகிழ்ச்சியை அளிக்கும்போது நான் திருப்தியடைந்துவிடுகிறேன். அந்த விதத்தில் சூழல் எனக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.

அச்சுப் புத்தகம் இனி வராது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். உண்மையாக இருக்குமா?

வராமல் போகாது. ஆனால் விற்பனை குறையும். கிண்டில் மின் புத்தகங்களின் வாசகர் எண்ணிக்கை ஏறி வருகிறது. இடப் பிரச்னையை அது இல்லாமல் செய்துவிடுகிறது என்பது தவிர புத்தகம் வாங்கும் செலவைக் குறைந்தது ஐம்பது சதவீதம் குறைக்கிறது. ஒரு மொபைல் போன் இருந்தால் போதும்; எத்தனை ஆயிரம் பக்கங்களை வேண்டுமானாலும் எளிதாகப் படிக்கலாம் என்பது எப்பேர்ப்பட்ட தொழில்நுட்ப வசதி! கால மாற்றத்துக்கேற்ப வாசகர்கள் மாறுவது தவிர்க்க முடியாது. எதிர்கால வாசகர்கள் மொபைலில்தான் படிப்பார்கள். ஆனால் படிப்பார்கள்; அதில் சந்தேகமில்லை.

நவீன விருடம் இதழ் 112

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter