பயண இலக்கியம்

குலசேகரபுர க்ஷேத்திரமென்னும் குரோம்பேட்டையிலிருந்து தெற்கே பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள காட்டாங்குளத்தூர் என்னும் தலத்துக்கு, பாலிய சிநேகிதன் ஒருவனது குமாரத்தியினுடைய கலியாண நிமித்தம் சென்று வர வேண்டியிருந்தது. முன்னொரு காலத்தில் வேதாசலபுரமென்றும் பின்னொரு காலத்தில் மறைமலை நகரென்றும் அழைக்கப்பட்ட காட்டாங்குளத்தூருக்கு சாலை மார்க்கமாக அல்லாமல் மின்சார இரயில் வண்டி மார்க்கமாகப் பயணப்பட முடிவு செய்தேன்.

இந்நாள்களில் புறநகர் இரயிற் பயணங்களை மேற்கொள்வதென்பதே எனக்கு அரிதாகிப் போய்விட்டது. எங்கு செல்வதென்றாலும் இரு சக்கர வாகனத்திலோ ப்ளெசரிலோ செல்லும் வழக்கம் உண்டான பின்பு புறநகர் இரயிற் பயணம் நினைவை விட்டே அகன்றுவிட்டிருந்தது. ‘நீங்கள் அவ்வாறு இருத்தல் ஆகாது. மக்களோடு மக்களாகப் பயணஞ்செய்து திரும்புவதன் சந்தோஷத்தினை இழக்கின்றீர்கள். தவிர பிரயாண நெரிசலில் சிக்காது சென்று வரவும் அதுவே சரியான உபாயமுமாகும்’ என்று மனையாளும் பரிந்துரைத்தபடியினாலே காட்டாங்குளத்தூர் கலியாண வைபவத்துக்கு இரயில் பயணம் மேற்கொள்வதென்று தீர்மானஞ் செய்துகொண்டேன்.

விடிகாலை சூர்யோதயத்துக்கு மிகவும் முன்னால் ஐந்து மணி அளவிலேயே எழுந்து ஸ்நானபானஞ்செய்து, ஐந்தே முக்காலுக்குத் தயாரானேன். என் மனையாளே இரு சக்கர வாகனத்தில் என்னை ஏற்றிச் சென்று இரயிலடியில் இறக்கிவிட்டார். முன்னொரு காலத்திலே நான் குரோம்பேட்டை என்னும் குலசேகரபுரத்தின் இரயிலடிக்கு நாடோறும் படியேறி இறங்குபவனாக இருந்ததெல்லாம் நினைவைக் கவ்வி ஆக்கிரமித்துக் குதியாட்டம் போடத் தொடங்கியது. மூன்று பத்தாண்டுகள் கழிந்த பிற்பாடும் ரயிலடியின் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதைக் காண அதிசயமாயிருந்தது. இடப்புறமொன்றும் வலப்புறமொன்றுமாக இரண்டு நடைமேடைகள் புதிதாக எழுப்பப்பட்டிருந்தன. ஜனங்கள் விண்ணளாவிய படிகளில் ஏறி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவதிப்படாதிருக்கும் பொருட்டு சர்க்கார் எப்போதோ தானியங்கி மின்சாரப் படிக்கட்டுகளைக் கட்டுவித்திருக்க வேண்டும். அதை நமது கலாசாரப்படிப் பயன்கொள்ளத் தகாததாக உருமாற்றிக் கழட்டி வைத்திருந்தனர். நான் நீண்ட பெரும் படிகளேறி மேலே சென்று பயணச் சீட்டு வாங்குமிடத்தை அடைந்தேன்.

காட்டாங்குளத்தூருக்குச் சென்று திரும்பும் விதமான சீட்டொன்றைக் கோரி, நூறு உரூபாத் தாளினைச் சீட்டுப் பணியாளரிடம் நீட்டியபோது, ‘சில்லறையாக இருபது உரூபா இருந்தால் கொடுங்கள்’ என்று சொன்னார். இது எனக்குச் சிறிது வியப்பையும் மேலதிகக் குழப்பத்தையும் விளைவித்து, ‘எத்தனை உரூபா?’ என்று கேட்டு உறுதி செய்துகொள்ளப் பார்த்தேன்.

‘போகப் பத்தும் திரும்பி வருவதற்குப் பத்துமென ஆக மொத்தம் இருபது உரூபா’ என்று சீட்டுப் பணியாளர் மீண்டும் சொல்லவே, இருபது உரூபாக்களை எண்ணிக் கொடுத்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இரயில் வண்டி வந்து நிற்கும் நடைமேடையை நோக்கி இறங்கத் தொடங்கினேன்.

கால மாற்றத்தில் விலைவாசி எல்லாம் ஆகாசத் தொலைவினை நோக்கிச் சென்றுவிட்டிருந்தாலும் சாமானிய மக்கள் செலவுச் சுமையின்றிப் பயணஞ் செய்வதன் பொருட்டு இரயிற்பாதைக் கட்டணத்தை மட்டும் பெரிய அளவினிலே உயர்த்தாது விட்டு வைத்திருக்கும் சர்க்காரின் பெரிய மனத்தினை எண்ணிச் சிலாகித்த வண்ணம் இரயில் வருவதற்காகக் காத்திருக்கலானேன்.

சில மணித்துளிகளில் சென்னை கடற்கரையிலிருந்து திருக்கச்சி மாநகர் வரை செல்லும் இரயில் வண்டியொன்று வந்து நின்றது. ஏறியதும் சன்னலோர இருக்கை சித்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இவ்வாறு சன்னலோர இருக்கையில் அமர்ந்து இரயிற் பிரயாணஞ்செய்து நெடுங்காலமாகிவிட்டதை நினைத்துக்கொண்டேன். காலைச் சூரியனின் முதற் கிரணங்கள் படரத் தொடங்கிவிட்டிருந்தன. புள்ளினங்கள் வானில் விரைய, சில்லென்ற காற்று மேனியில் மோத, இரயிற் பயணம் ஆரம்பமானது.

வண்டி சானடோரியம், தாம்பரம் என்கிற இரண்டு நிறுத்தங்களைக் கடந்து பயணப்படத் தொடங்கியபோது, காலை நேர ஆரோக்கிய உணவெனச் சொல்லி அவித்த நிலக்கடலை விற்றுக்கொண்டு வந்தார் ஒரு நாரி. முன்பெல்லாம் பழைய செய்தித் தாளில் பொட்டணம் மடித்துத் தருவார்கள். இன்றோவெனில் காகிதக் கிண்ணத்தில் அவித்த நிலக்கடலையைக் குவித்துத் தருகிறார்கள். அந்த விடிகாலைப் பொழுதினிலும் அவித்த கடலையை விரும்பி உண்ணும் மக்கள் இருப்பதைக் கண்டு மனத்தின்கண் குறித்துக்கொண்டேன். அவ்வண்ணமே புஷ்பங்கள் விற்கும் பெண்களும் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்குப் பயன்படும் பென்சில், பேனாக்களை விற்போரும் கூவி விற்றுச் சென்றதைக் கண்டேன். அவர்களைப் பொருட்படுத்தாது, பெட்டியிலிருந்தோர் அவரவர் கைப்பேசியில் கண்ணுங்கருத்துமா யிருந்ததையுங் கண்டேன்.

இரயில் வண்டி பெருங்களத்தூர் நிறுத்தத்தை நெருங்கியது. பண்டொரு காலத்தில் பிற்காலப் பல்லவர்களுக்கும் மிச்சம் மீதமிருந்த பிற்காலச் சோழர்களுக்கும் யுத்தம் மூண்டபோது அது நிகழ்ந்த பெரும் களமாக இருந்தபடியினாலே அந்தத் தலத்துக்குப் பெரும் களத்தூர் என்ற பெயர் உண்டானது. (இதனைத் திரித்து, சோழர்கள் ஆண்ட காலத்திலே பெரிய குளமொன்று இந்த இடத்தினில் இருந்தபடியினாலே இது பெருங்குளத்தூர் என அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அது மருவி பெருங்களத்தூரானதாகவும் சொல்வர். ஆயினும் அதற்கு சரித்திர சாட்சியங்கள் கிடையா. சரிதான், பல்லவ-சோழ யுத்த களேபரத்துக்கேனும் சரித்திர சாட்சியம் உண்டாவென்பீரானால் அதுவும் கிடையா.) ஆனால் இந்த ஊரினையும் கமலகாசன் என்னும் கலாவிற்பன்னர் உருக்கொண்ட களத்தூரினையும் போட்டுக் குழப்பிக்கொள்ளல் ஆகாது. வெறும் களத்தூர், முதுகளத்தூர், பெருங்களத்தூர், சிறுகளத்தூர் என மாகாணமெங்கும் பல போர்களின் நினைவாகக் களப்பெயர் பூண்ட தலங்கள் உண்டு.

பெருங்களத்தூரினின்று புறப்பட்ட இரயில் வண்டி அடுத்தபடியாக வண்டலூர் நிறுத்தத்தில் நின்றது. சுற்றிலும் வனம் அடர்ந்த மலைகளும் சிறியதொரு நதியும் ஓடிய பிராந்தியமாகப் பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் இத்தலம் திகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு வனம் சுருங்கி, மலைகள் நாலாபுறமும் பெயர்க்கப்பட்டு, நதி சேர்த்த வண்டலெல்லாம் கட்டுமானப் பணிகளுக்கென்று எடுத்துச் செல்லப்பட்ட பின்பு, நதியும் தீர்ந்துபோய் விடவே, சிறியதொரு கானுள்ள பிராந்தியமாகச் சுருக்கி வடிவமைக்கப்பட்டது. கால மாற்றத்தில் இவையெல்லாம் தவிர்க்க இயலாததன்றோ? இருப்பினும் நமது சரித்திரம் வேர் கொண்ட புவியியலினை முற்றிலுமாக மறந்துவிடுதல் தகாதென்ற எண்ணத்தில் சர்க்கார் இந்தத் தலத்தினிலே கானுயிர்களுக்கென ஒரு பூங்கா அமைத்துச் செம்மையாகப் பராமரித்து வருகின்றார்கள். சிங்கம், புலி போன்ற கொடுமிருகங்களிலிருந்து நாய் பூனை போன்ற மென்மிருகங்கள் ஈறான ஐயறிவினங்கள் இந்தப் பூங்காவிலே சௌக்கியமாக வாசஞ்செய்து வருகின்றன.

வண்டலூர் நிறுத்தத்தினை அடுத்து வந்தது ஊரப்பாக்கம் இரயில் வண்டி நிறுத்தம். இது காலத்தால் மிகவும் பிற்பட்ட குடியிருப்புப் பிராந்தியமென அறியப்படுவது. மக்கட்தொகைப் பெருக்கம் மிகத் தொடங்கி, வடக்கே சென்னை மாநகரமும் தெற்கே செங்கற்பட்டு மாநகரமும் இடுப்பூதிப் போக ஆரம்பித்தபோது இரு பெரும் நகரங்களுக்கு இடைப்பட்ட மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பரப்பும் கானிழந்து ஆங்காங்கே மேகத் திட்டுகளைப் போலே கான்கிரீட்டெனும் கவின்மிகு கற்கோலம் பூணத் தொடங்கியதன் விளைவாக உற்பத்தியான நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இதனையடுத்த கூடுவாஞ்சேரி என்கிற இரயில் நிறுத்தப் பிராந்தியமும் அப்படியே உருவானது என்பதும் நினைவிற் கொள்ளத் தக்கது. இப்புதிய நகரங்களின் இறுதியொட்டாக வருகின்ற பாக்கம், சேரி போன்ற பதங்களைக் கூர்த்து நோக்குவோமானால் ஆதியிலே இவ்விடங்கள் எவ்விதமாக இருந்தனவென்பது தெள்ளெனப் புலப்படும்.

ஏழு மணி ஆவதற்கு எட்டு மணித்துளிகள் இருந்தபோது ஒரு வழியாக இரயில் வண்டி காட்டாங்குளதூர் நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தது.

இறங்கும்போதே காட்டாங்கொளத்தூர் என்ற பிழைபட்ட பெயர்ப்பலகை கண்ணில் தென்படவே, சிரித்துக்கொள்ளும்படியானது. பெருங்களத்தூரைப் பெருங்குளத்தூராக்கியதைப் போலவே காட்டாங்குளத்தூரைக் காட்டாங்கொளத்தூராக்கிவிட்டிருக்கின்றார்கள்!

முன்னொரு காலத்தில் இந்த ஊரின் சிறப்பைச் சொல்வதற்குச் சிவானந்த குருகுலம் எனும் ஓர் ஆசிரமம் இருந்தது. ஆசிரமம் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பெருங்காடாக மட்டுமே இருக்கும். மாலைப் பொழுதில் நரிகளைப் பார்வையிடலாம். சற்று உள்ளடங்கிச் சென்றால் வேறு சில காட்டு மிருகங்களும் காணக் கிடைக்கும் என்றாலும் மிருகங்களைத் துன்பப்படுத்தலாகாது என்னும் எண்ணத்தில் நான் சென்றதில்லை. பிற்பாடு மக்கள் இங்கெல்லாம் குடியேறத் தொடங்கிய பின்பு வீடுகளும் சாலைகளும் விளக்குகளும் வணிக வளாகங்களும் கலாசாலைகளும் இதர நவீனங்களும் ஆமைபோலப் புகுந்து நிறைந்துவிட்டிருக்கின்றன. மிருகங்கள் இருந்த இடமும் தெரியாமல், சென்ற இடமும் தெரியாமல் போய்விட்டன.

காணாத காட்சியெல்லாம் கண்டு ரசித்த வண்ணம் இரயில் நிலையத்தினின்றும் வெளியேறிச் சாலையை அடைந்தேன்.

கண்ணெட்டும் தொலைவிலேயே நான் போகவிருந்த கலியாண மண்டபம் இருந்தது. மகிழ்ச்சியுடன் அதனை எட்டிப் பிடித்து, வைபவத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு, பாலிய நண்பர்களையெல்லாம் சந்தித்துச் சிறிது நேரம் சல்லாபித்துக்கொண்டிருந்தேன். பிரிய மனமின்றிப் பிரிந்து மீண்டும் காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதாகியிருந்தது. செங்கற்பட்டிலிருந்து சென்னைக் கடற்கரை நோக்கிச் செல்லும் இரயில் வண்டி வந்ததும் ஏறிக்கொண்டேன்.

ஒன்றரை நாழிகைப் பொழுதுக்குள் குரோம்பேட்டை இரயில் நிலையத்தை வந்தடைந்துவிட முடிந்தது. பேசி வைத்திருந்தாற்போலே மனையாள் மீண்டும் இரு சக்கர வாகனத்துடன் இரயிலடிக்கு வந்து காத்திருந்தாள். எனவே அதிலேறி இல்லம் வந்தடைந்து, சென்று வந்த சங்கதிகளையும் க்ஷேமலாபங்களையும் அவளிடம் சொல்லிக் களித்தேன். குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு அவளொரு முத்தாய்ப்பு வைத்தாள். அதுவாவது:-

‘இருவது ரூவாய்ல மேட்டர் முடிஞ்சதுல கிளுகிளுப்பாகி இவ்ள பேசுற. இதே கார் வெச்சிகிட்டுப் போயிருந்தேன்னா ஆயிர்ருவா பழுத்திருக்கும். அப்ப இந்த வாயி திறக்கும்?’

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading