ஓர் [அபாய] அறிவிப்பு

நாட்டில் இன்னும் கதை படிக்கிற நல்லவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. தமிழ் சமூகம் தனது வாசிப்பு விருப்பத்தைக் கதையல்லாத எழுத்துப் பக்கம் திருப்பிக்கொண்டு பல காலமாகிவிட்டது என்பது என் கருத்து. இதைப் பலமுறை இந்தப் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கிறேன். புனைவு என்பது இப்போது பெரிய மற்றும் சிறிய திரைகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற சிறுகதை, நாவல் முயற்சிகள், அவற்றுக்குரிய நியாயமான கவனிப்பைப் பெறுவதில்லை என்னும் வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. மாதாந்திர அவஸ்தைக் கழிவுகளை நான் இவ்வகையில் சேர்க்கவில்லை.

இந்த வருத்தம், அவசர வாழ்வுசார் ஆயத்த எழுத்துகள், மண்டையிடி ஆய்வுகளைக் கோரும் புத்தக வேலைகள், இன்னபிற ஈடுபாடுகள் அனைத்தையும் தாண்டி ஒரு பெரிய கதைக்கான கருவும் களமும் புத்தியில் வந்து இப்போது உட்கார்ந்திருக்கின்றன. விட்டேனா பார் என்று பிடித்துப் பேயாட்டம் ஆடுகிறது. கதை என்று என்ன தோன்றினாலும் இனி சினிமாவுக்கான வடிவில் மட்டுமே எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தமிழில் அங்கேதான் புனைவு தழைக்கப்போகிறது என்று சிவல்புரி சிங்காரத்தின் ஒன்றுவிட்ட கொள்ளுத்தாத்தா சொல்லியிருக்கிறார்.

ஆனால் எழுதிப் பார்த்தபோது திருப்தி வரவில்லை. பாரம்பரிய வடிவிலேயே முதலில் எழுதிவிடலாம் என்று தோன்றியது. என்ன இப்போது? எல்லாம் ஒழுங்காக முடிந்தால் இன்னொரு வடிவத்துக்குப் பிறகு மாற்றிக்கொள்ளலாம். இப்போதைக்கு இதைக் கீழே இறக்கியாகவேண்டும்.

எனவே வாசக நண்பர்களே, விரைவில் இங்கே ஒரு  கதாசாகர பிரவாகப் பெருவெள்ளம் சூழப்போகிறது. நான் ரொம்ப நல்லவன் என்பதாலும், இலக்கியவாதி இல்லை என்பதனாலும் இந்த முன்னெச்சரிக்கை. கதை அலர்ஜி உள்ளவர்கள் பின்னங்கால் பிடறியில் பட ஓடியே போய்விடவும். எப்பேர்ப்பட்ட பிரம்ம ராட்சசனையும் எதிர்த்து நிற்கும் துணிவுள்ளவர்களுக்கு நல்வரவு. நீங்கள் கமெண்ட் போட்டாலும் போடாவிட்டாலும் கச்சாமுச்சாவென்று கத்தினாலும் கதறினாலும் அழுதாலும் தொழுதாலும் பாராட்டினாலும் புகழ்ந்தாலும் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடினாலும் தூக்கிக் கடாசி உருட்டி விளையாடினாலும் – என்ன செய்தாலும் இது தொடரும்.

பத்திரிகைகள் எதிலும் தொடராக வராத, வரப்போகாத, புத்தகமாக வர வாய்ப்பில்லாத, வருவதை நான் விரும்பாத இந்தப் பெருநீள் கதைக்குத் தலைப்பு – நீலக்காகம்.

Share

30 comments

  • நீலக்காகம்… பெரு நீள’காகமாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • வாழ்த்துக்கள் பாரா. உங்களுடைய நிஜமான திறமை கதை எழுதுவதில்தான் இருக்கிறது என்பது என்னைப்போல் பலபேருடைய கருத்து. அலகிலா விளையாட்டு, மெல்லினம் போன்ற நாவல்களைப் படித்து பிரம்மித்திருக்கிறேன். விடாபிடியாக அவற்றின்பின் நாவல் எழுதாமல் அரசியல் புத்தகங்களையே எழுதிக்கொண்டிருந்த தாங்கள் மீண்டும் நாவல் எழுத முடிவு செய்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இனைய வாசகர்கள் இருகரம் தட்டி வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

  • எப்போது ஆரம்பிக்கிறீர்கள் என்பதைச் சொல்லவில்லையே? வாராவாரம் வருமா? தினமும் எழுதுவீர்களா? புத்தகமாக வராது என்று ஏன் இப்போதே சொல்கிறீர்கள்? கிழக்கு கூட வெளியிடாதா? 😉 அத்தனை மோசமான நாவலா எழுதப்போகிறீர்கள்!

  • விரைவில் தொடங்கிவிடுவேன். இன்னும் ஒரு சில தினங்களுக்குள். தினசரி எழுதுவேனா என்று தெரியவில்லை. மூடைப் பொறுத்தது. இது புத்தகமாக வர வாய்ப்பில்லை என்று சொல்லக்காரணம், இதன் அளவு. நிச்சயமாக கைக்கடக்கமாக இருக்க வாய்ப்பில்லை. பெரிய நாவல்களை – அதுவும் ஒரு அ-இலக்கியவாதியின் நாவலை வெளியிடும் உத்தேசம் இப்போது கிழக்குக்கு இல்லை. மற்றபடி இது மோசமான நாவலா என்று இப்போதே சொல்ல முடியாது. எழுத எழுதத்தான் எனக்கே தெரியும். இது ஒரு மோசமான நாவல் என்று ஒருவேளை எனக்கு முதலில் தோன்றிதெரிந்துவிட்டால் நானே அதற்கொரு அறிவிப்பும் வெளியிட்டுவிடுகிறேன். அதன்பின் நீங்கள் படிப்பதைத் தவிர்த்துவிடலாம்.

  • பஞ்சாங்கம் வாசிக்கும்போது கன்னி ராசிக்கு சனி உச்சம் என்றார்கள். அப்போ நம்பலை.

  • //எழுந்து நின்று வரவேற்கிறேன்!//

    இவர் ஓடப் பார்க்கிறார், கட்டிப் போடுங்க.

  • அப்பப்போ ஃபிக்‌ஷண்ஸும் எழுதணும், தப்பில்லை.. ஃபிக்‌ஷண்கள்ளே நிறைய செல்ஃப் டெவலப்மெண்ட் விஷயங்கள் சொல்லலாம்ன்னு ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் நிரூபிச்சிருக்காங்க. உங்களாலயும் முடியும்

    http://kgjawarlal.wordpress.com

  • /செல்ஃப் டெவலப்மெண்ட் விஷயங்கள்/

    எம்பெருமானே, என்னைக் காப்பாற்று.

  • Wow… after my few comments, you starting writing fiction.. Its good to know, we really welcome this. Whatever you have written in non fiction section, tell me from your heart… nothing is yours. You just closed all the doors and copy the content from many books and internet sources. That, anybody can do so. They are just simple translation kind of books. In fact, we can read them better if I read the original sources where you have taken. I am not toally against it, becoz you have added values to that specially your way of writting and they are in TAMIL.

  • இதற்கு தான் காத்திருந்தோம் பா ரா , தினமும் எழுத வேண்டி,விரும்பி, சோமங்களம் சொக்கநாதனை பிராத்திக்கிறேன்

  • /– தமிழ் சமூகம் தனது வாசிப்பு விருப்பத்தைக் கதையல்லாத எழுத்துப் பக்கம் திருப்பிக்கொண்டு பல காலமாகிவிட்டது –/

    அப்படியொன்றும் சொல்வதற்கில்லை ராகவன். தேடிக் கண்டுபிடித்து வாசிப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். எழுத்தாளர்களின் உள் அரசியல், புத்தகப் பரிந்துரையிலும் எதிரொலிப்பதுதான் இந்த மாயைக்குக் காரணம் என்று நினைக்கிறேன். இரண்டெழுத்து ஆளுமைகள் யாராவது வளர்ந்து வரும் எழுத்தாளர்களை பாராட்டி எழுதுகிறார்களா? உலக இலக்கியம் என்ற பெயரில் ரஷிய, லட்டின், கிரேக்க, மேற்கத்திய எழுத்துக்களைத் தானே மெச்சுகிறார்கள். அப்படியே எழுதினாலும் தான் சார்ந்த பதிப்பகத்தின் எழுத்தாளர்களைத் தானே பரிந்துரைக்கிறார்கள்.

    ஒரு நாவலுக்கான அனுபம் தரக் கூடியதாக இருப்பதால்தான் கிழக்கின் வரலாற்றுப் புத்தகங்கள் அதிகம் வாசிக்கப்படுகின்றன என்பது என்னுடைய அசைக்க முடியாத எண்ணம்.

    சமீபத்தில் வெளிவந்த ‘அலகிலா விளையாட்டின்’ ஒரு பிரதியை, ஏதேனும் ஒரு புத்தகக் கடையில் இந்த நாளில் உங்களால் வாங்கித் தர முடியுமா?

    “ஐம் சாரி… புக்ஸ் ஆர் சோல்ட் அவுட்” என்றால் உங்களுடைய கருத்தில் மாற்றம் தேவை என்று நினைக்கிறேன்.

    மற்றபடி உங்களின் புனைவு முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது.

  • twitter இல் உங்களை follow செய்தாலும், உங்கள் வலைக்கு தினமும் வந்து ஏமாந்து செல்கிறேன். எப்படியோ தினம் எதையாவது சுவாரசியமா எழுதினால் சரி. தங்களுக்கு இலக்கியம் வராது என்பதால் என் உயிருக்கு ஆபத்து இல்லை. வாழ்த்துக்கள் சார்.

  • பதிவுலக / பதிப்புலக, நகர பின் புலனை கொண்டிருந்தால் “பிராப்தி அஸ்து” 🙂 !!!

    இல்லாட்டி பொன்னியின் செல்வனின் காவியம் படைக்கபோவதாய் இருந்தாலும் சரி !!!

    உங்கள் மனவோட்டத்தை 🙂 நெருங்க முடியவில்லை இருந்தாலும் அட்டெம்ப்ட்!

  • உங்களுக்கும் அந்த (si-fi,முன்,பின் நடு நவீனதத்துவம்:)) கிறுக்குதனம் வந்திரிச்சா? நீங்க எப்படி? கதை-கட்டுரைகள் 3015 காலத்திலா இல்ல ஸ்ரீமத் பாகவதகாலத்திலிருந்தா?(ஸ்ரீமத் பாகவத்மும் ஒரு அற்வியல் புனைவுதானே:))
    கலி முத்திபோச்ச்சு:} ந்டட்த்துங்க!!
    அப்படியே கொஞ்சாம் தமிழ் பேப்பரையும் கவனியுங்க! ஏதோ மாதிரி இருக்கு! ஒங்க பழய சரக்க்கோ அல்லது சுப்புடு கட்டுரையோ போட்டு கொஞ்சம் ஆக்ஸிஸன் கொடுங்க

  • இன்றைய இணைய வழி படித்தலில் – தொடர்கதையோ/ நாவலோ படிப்பது அச்சு புத்தகத்தில் ஒரே சமயத்தில் படிப்பது போல் சுவாரஸ்யமாக இல்லை.
    ஒரு அத்தியாயத்தை இரண்டு நிமிடத்தில் படித்து விட்டு அடுத்த அத்.யை உடனே படிக்காவிடில் குறையாகவே இருக்கிறது.
    ஒன்று – முன்பே எழுதி தினம் ஒரு அத். வெளியிடுங்கள். அல்லது ஒரே முறையாக ஐந்து அத். களாக வெளியிடுங்கள். புண்ணியமாப் போகும்.
    -ஜெகன்

  • இதே ம‌ன‌நிலையில் கேரளாவில் புக‌ழ்பெற்றிருக்கும் இன்னொரு எழுத்தாளரும் இருப்ப‌தாக‌ கேள்வி. விரைவில் நீங்களும் ஆர்மோனிய‌ம் வாசிக்க‌ வாழ்த்துக‌ள்.

  • பாரா,
    இது என்ன நெகட்டிவ் பப்ளிசிட்டி முயற்சியா?

    நீங்கள் கல்கியில் துவங்கிய போது உங்கள் கதைகளுக்காகத்தான் அதிகம் கவனிக்கப் பட்டீர்கள்..அலகிலா விளையாட்டு போன்ற சிந்தனைக்குள் சுழிக்கும் கதையைப் படைத்தவருக்கு ஏதோ புதிய காரியத்தில் ஈடுபடப் போவதான அவதானம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

    உங்கள் மற்ற புத்தகங்களை விட உங்களது அலகிலா விளையாட்டு போன்ற நாவல்களுக்காகத்தான் நீங்கள் நினைக்கப் படுவீர்கள் என்பது என் எண்ணம்.

    ப்ரிஸ்க்காக துவங்குங்கள்.

  • >>>செல்ஃப் டெவலப்மெண்ட்<<<

    இன்னைய எழுத்ஸ்கள் எழுதும் சைசை வைத்து shelf டெவலப்மண்ட் பற்றி இப்போதே சிந்தித்திருக்கும் அருமை அண்ணல் ஜவஹர் அவர்களின் தொலைநோக்கு (அப்ப நேக்கு?) பார்வையை (அண்ணாருக்கு சாலேச்சுவரம்னு நான் சொல்லலை) நீங்கள் கருத்தில் நிறுத்தியே ஆகவேண்டும்!

    🙂

  • //கதை என்று என்ன தோன்றினாலும் இனி சினிமாவுக்கான வடிவில் மட்டுமே எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தமிழில் அங்கேதான் புனைவு தழைக்கப்போகிறது என்று சிவல்புரி சிங்காரத்தின் ஒன்றுவிட்ட கொள்ளுத்தாத்தா சொல்லியிருக்கிறார்.//

    அதே சிவ‌ல்புரி சிங்கார‌ம், பாரா விரைவில் த‌யாரிப்பாள‌ர் அவ‌தார‌ம் எடுப்பார் என்று கூறிய‌தை விட்டுவிட்டீர்க‌ளே…. :):(

  • //கதை என்று என்ன தோன்றினாலும் இனி சினிமாவுக்கான வடிவில் மட்டுமே எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.//

    ஜெமோவை தாக்கும் நுண்அர‌சிய‌ல் ஏதேனும் இந்த‌ வாக்கிய‌த்தில் உண்டா? 🙂

  • சில முதல் பல ஆயிரம் பக்கங்களில் நாவல்கள் எழுதுகிறார்கள்.அவர்களுக்கு போட்டியாக நீங்களுமா.
    புனைவை புத்தகமாகப் போடுங்கள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவ்சம் என்று அறிவித்து நன்றாக விற்கும் உங்கள் புத்தகங்களுடன் புனைவினை cd யில் PDF ஆக கொடுத்துவிடலாம்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி