நீங்கள் ஒரு சரித்திரக் கதை எழுதுவீர்களா என்னும் வினாவை இதுவரை குறைந்தது பத்து முறையேனும் பேட்டிகளில் எதிர்கொண்டிருப்பேன். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வாசகர்கள் கேட்டதைச் சேர்த்தால் குறைந்தது நூறு முறை. ஆனால் ஒவ்வொரு முறையும் மாட்டேன் என்பதற்கு அப்பால் இன்னொரு பதிலைச் சொன்ன நினைவில்லை.
என்னால் ஒரு சரித்திரக் கதையை எழுத முடியும் என்று இன்றுவரை நான் நம்பவில்லை. புழக்கத்தில் உள்ள பல சரித்திர நாவல்களைப் படித்திருக்கிறேன். பெரும்பாலும் அவை சரித்திரமும் அல்லாத, நாவலும் அல்லாத நீள் கதைகளாக இருக்கும். காரணம் அத்தகைய கதைகள் மன்னர்களைச் சுற்றிப் பின்னப்பட்டவையாக இருக்கும். உருப் பெருக்கிக் காட்டும் தன்மையே முதன்மையாக விளங்கும். ஆனால் சரித்திரம் என்பது மக்களுடையதல்லவா. அவர்களுடைய வாழ்க்கை அல்லவா. அவர்கள் பட்ட பாடுகளின் கதையல்லவா.
உரி ஓர் எண்ணமாக மட்டும் தோன்றிய நாள்களில் இது ஒரு சரித்திரக் கதையாக வரக்கூடுமோ என்கிற ஐயம் எனக்கிருந்தது. ஏனெனில் கதை நடக்கும் காலமென்பது பெரிய கோயில் கட்டப்படத் தொடங்கும் ராஜராஜனின் பத்தொன்பதாவது ஆட்சியாண்டில் ஆரம்பித்து, கோயில் குடமுழுக்கு நடக்கும் அவனது இருபத்தைந்தாவது ஆட்சியாண்டில் நிறையும். மிக நிச்சயமாகக் கதைக்குள் ராஜராஜன் வருவான், அவனது அமைச்சர் பெருமக்களும் சேனாதிபதிகளும் சிற்பக்கலை விற்பன்னர்களும் வருவார்கள் என்று அப்போது நினைத்தேன்.
நான் எழுத எண்ணியிருந்த நாவல் கோயிலைப் பற்றியதோ, மன்னனைப் பற்றியதோ அல்ல எனினும் இந்தக் கூறுகள் உள்ளே நுழைந்துவிடுமானால் தன்னியல்பாக அது சரித்திர நாவலின் தோற்றம் கொண்டுவிடுமென்று தோன்றியது. நீலகண்ட சாஸ்திரி தொடங்கி மன்னர் மன்னன் வரை சோழர் கால ஆராய்ச்சியாளர்களின் அத்தனை ஆய்வு நூல்களையும், பொன்னியின் செல்வன் தொடங்கி உடையார் வரை எழுதப்பட்ட சரித்திர நாவல்களையும் ஒன்று விடாமல் படித்து முடித்த பிறகுதான் நான் எழுத நினைத்திருப்பதற்கும் இவற்றுக்கும் சிறு தொடர்பும் இல்லை என்பது புலப்பட்டது. எனவே, அவற்றுடன் தொடர்பற்ற ஒன்று சரித்திர நாவலாக உருப்பெற இயலாது என்கிற தெளிவும் ஏற்பட்டது.
சோழர் காலத்தில் நடக்கும் கதை ஆயினும் இது சோழர்களின் கதையல்ல. பெரியார் என்கிற ஒரு மனிதரின் வரவுக்குப் பிறகு நாத்திகம் என்னும் கருத்தாக்கம் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளின் ஓரங்கமாக உருப்பெற்றதும் ஏற்கப்பட்டதும் தொடங்கி, நாத்திகர்களே நீடித்து ஆண்ட மாநிலமாகத் தமிழ்நாடு எவ்வாறு விளங்கியது என்று எப்போதும் எண்ணிப் பார்ப்பேன். பெரியார் வழி வந்தோரும் பெருகி, பக்தி இயக்கங்களின் வழி வந்தோரும் பெருகி ஒன்றிணைந்து எவ்வாறு வாழ முடிந்திருக்கும்? தேர்தல்களில் நின்றவர்கள் நாத்திகர்களே ஆனாலும் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தோர் ஆத்திகர்கள் அல்லவா? கடவுளை நம்புவோரை எது நாத்திகர்களையும் நம்பத் தூண்டியிருக்கும்? ஆண்டவன் மீது பக்தியையும் ஆள்பவர் மீது நம்பிக்கையையும் வைக்கச் செய்த காரணி எது?
இவ்வினாவின் மீதுதான் உரியைக் கட்டத் தொடங்கினேன். அவ்வகையில் இது சரித்திர காலத்தில் காலூன்றிய சமூக-ஆன்மிக நாவலாகவே உருக்கொண்டது. மருந்துக்கும் சரித்திர நாவலின் வாசனை வந்துவிடவில்லை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த ஆசுவாசம் அளித்தது. அதைவிடப் பெரிய நிம்மதி, இம்மாபெரும் நாவலை முற்றிலும் ஒரு மாயாஜால காமிக்ஸ் கதை வடிவத்தில் சொல்ல முடிந்தது. புனைவெழுத்து வழங்கும் சுதந்தரம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. பறவைகளுக்குக் கூடச் சிறகுகள் இரண்டுதான். புனைவெழுதத் தொடங்கும்போதெல்லாம் ஆயிரம் பல்லாயிரம் சிறகுகள் முளைத்துவிடுகின்றன. நிலம் தொடங்கி வான்வரை உள்ள வெளியனைத்தும் நம் வசமாகிவிடுகின்றன. புலப்படாத அதலங்களிலும் கால் பதித்து நிற்க முடிகிறது. என்ன சொல்கிறோம் என்பதினும் எப்படிச் சொல்கிறோம் என்பதில் உண்டாகும் நிறைவும் பரவசமும் நிகரே சொல்ல முடியாத பெரும் போதை.
உரியை ஒரு சாதாரண மனிதனும் சர்வ வல்லமை பொருந்திய சித்தர் ஒருவரும் சாகா வரம் பெற்ற ஓர் அதிமானுடனும் கட்டியிழுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இதில் கோயில் எங்கே, குடமுழுக்கெங்கே, ராஜராஜன் எங்கே, அவனது பரிவாரங்கள் எங்கே?
ஆயிரம் பல்லாயிரம் சிறகுகளுடன் பறந்துகொண்டிருப்பதாகச் சொன்னேன். சுற்றிச் சுற்றித் தஞ்சப்புரியைத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறேன். இதுவரை அவர்கள் யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை.


