கொள்ளை கொள்ளும் பூமி

பண்பலை வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம், மொபைல் அனைத்திலிருந்தும் நான்கு நாள்கள் விடுதலை பெற்று குடும்பத்துடன் கன்யாகுமரிக்குச் சென்றிருந்தேன். நானறிந்த உலகில் குமரியைக் காட்டிலும் மன எழுச்சியும் பரவசமும் அளிக்கக்கூடிய மண் வேறில்லை.

கன்யாகுமரி என்னும் தென் முனையை ஒட்டிய சிறு நகரம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி. சென்னையைக் காட்டிலும் மோசமான பிராந்தியம் அது. அந்தச் சில கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு வெளியே மாவட்டம் முழுதும் எம்பெருமான் மரங்களாலும் மலைகளாலும் எழுதிய மரபுக் கவிதைகளே என் விருப்பம். தனியாக எத்தனையோ முறை போய் சுற்றியிருக்கிறேன். அங்கே உள்ள என் நண்பர்களுக்குக் கூடச் சொல்லாமல், நியமித்துக்கொண்ட அநாதையாகத் திரிந்து மகிழ்ந்திருக்கிறேன். சுந்தர ராமசாமி உயிருடன் இருந்த காலத்தில் ஒரு சமயம் அவர் வீட்டு முன்னால் போய் வெறுமனே சில மணிநேரம் நின்று பார்த்திருந்துவிட்டு அவரைச் சந்திக்காமலே திரும்பியிருக்கிறேன். விவேகானந்த கேந்திரத்தின் பரிசுத்தத்திலும் அமைதியிலும் எழிலிலும் நெக்குருகி, பித்தாகி நின்றிருக்கிறேன். ஒரு சர்ப்பம்போல் சுற்றி வளைத்து ஓடும் நதியின் நடுவே பிரம்மாண்டமாக, ஓர் உயிருள்ள மனிதனைப் போலவே படுத்திருக்கும் ஆதிகேசவப் பெருமாளின் முன்னால் அடித்துப் போட்டாற்போல் கிடந்திருக்கிறேன். திற்பரப்பும் உதயகிரியும் திருவனந்தபுரம் போகும் சாலையும் களியக்காவிளையைச் சுற்றிய பகுதிகளின் கொட்டிக் குவித்த பேரெழிலும் மனித மனத்தின் அத்தனை ஆணவங்களையும் அடித்து நொறுக்கிவிடவல்லவை என்பது என் எண்ணம். இயற்கையைக் காட்டிலும் பெரியது ஒன்றில்லை. குமரியைக் காட்டிலும் அதை முற்றிலும் ஏந்தியிருக்கும் பகுதி வேறில்லை.

பாரதத்தின் கடைசி ரயில்வே ஸ்டேஷன்

இந்தப் பயணத்தின் நோக்கம் என் மகளுக்கு இவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான். எளிமையாக, உதயகிரிக் கோட்டையிலிருந்து ஆரம்பித்தேன். கானகம் அவள் கண்டிராதது. கதைகளில் மட்டுமே அவளுக்குக் காடு தெரியும். அதிக சிரமம் தராத எளிய, சிறிய காட்டிலிருந்து அவளுக்கு ஆரம்பிக்க நினைத்ததற்கு உதயகிரி மிகப் பொருத்தமாக இருந்தது. மரங்கள் அடர்ந்த கானகத்தின் வினோதமான மொழி, வெறும் சப்தரூபங்களாகச் செவியில் சொட்டிக்கொண்டிருக்க, முதுகில் மாட்டிய டோரா பேக்-பேக்குடன் தன்னை அவள் டோராவாகவே கருதிக்கொண்டு பக்கவாட்டில் பார்த்தபடியே முழுத் தொலைவையும் நடந்து கடந்தாள். காசு கொடுத்து வாங்கவேண்டிய பொருள்கள் என அவள் மனத்தில் பதிந்திருந்த பல காய்களும் கனிகளும் எடுப்பாரற்று உதிர்ந்து கிடந்த காட்சி நிச்சயமாக ஓர் அற்புதம். வாழைக் குலைகளும் எலுமிச்சை, புளியங்காய்களும் அன்னாசியும் மாங்காயும் தேங்காயும் நுங்கும் இன்னபிறவும் காய்க்கிற பொருள்கள் என்பதைத் தெரிந்துகொள்ள எழுநூறு கிலோமீட்டர் போகவேண்டியிருப்பது சென்னைவாசிகளின் விதி.

ரப்பர் தோட்டங்களைக் கடந்து செல்லும்போது ரப்பர் பால் எடுக்கும் விதத்தைச் சொல்லி, ஓரிடத்தில் பெரிய பெரிய தோலாக ரப்பர் எடுத்துச் செல்லப்படுவதைக் காட்டி அது உருப்பெறும் கதையை விவரித்தபோது மிகுந்த பரவசமாகிவிட்டாள். அந்தப் பரவசத்தை அப்படியே தேக்கி வைத்து மாத்தூர் பாலத்தில் அவிழச் செய்தேன். இரு பெரும் மலைகளை இணைக்கும் உயரமான, மிக நீண்ட பாலம். கீழே மல்லாக்கப் படுத்த பெண்ணைப் போல் ஒரு நதி. கண் படும் தொலைவெல்லாம் பச்சையின் பல்வேறு நிறங்கள். இயற்கை, என் மகளின் பரவசத்தைப் போலவே பேரழகானது.

திற்பரப்பில் சுகமாகக் குளித்தோம். காற்றில் ஆடி உலரும் பத்தாறு வேஷ்டி மாதிரி அடக்கமான அருவி. கொஞ்ச நாள் முன்னால்தான் ஒரு பெரிய இலக்கிய கோஷ்டி வந்து குளித்துவிட்டுப் போயிருக்கிறது என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. குமரியில் கொஞ்சம் மழை பெய்துகொண்டிருந்தபடியால் அருவியில் தண்ணீர் அமர்க்களமாக வந்தது. பச்சைக் குதிரை தாண்டுவதற்கு ஆயத்தமாக நிற்பதுபோலத் தலையைக் குனிந்து முதுகு காட்டி நின்றுவிட்டால் போதும். தொம்தொம்மென்று நீராற்றல் மிதித்துவிடுவது பரம சுகமான அனுபவம். [என் கூந்தலின் இருப்பு கருதி, தண்ணீருக்குத் தலை கொடுப்பதைக் கொஞ்சம் குறைத்தேன் என்பது இங்கே உள்ளுரை பாடம்.] கண் எரியும்வரை குளித்துவிட்டு சுடச்சுட ஒரு தேநீர்.

திற்பரப்பு அருவி

நியாயமாக ஒரு ஹோட்டலைத் தேடியிருக்கவேண்டும். அன்று காலை டிபனுக்குப் பிறகு ஒன்றுமே சாப்பிட்டிருக்கவில்லை. சாப்பிடத் தோன்றவில்லை என்பதுதான் விஷயம். பத்மநாபபுரம் அரண்மனையில் இரண்டாயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய டைனிங் ஹாலையும் கல்லால் செய்யப்பட்ட பிரம்மாண்டமான சாம்பார் அண்டாக்களையும் நூறு பேருக்கு ஏககாலத்தில் சட்னி அரைக்கக்கூடிய உரல்களையும் பார்த்ததிலேயே பசி போய்விட்டிருந்தது. ‘ரெண்டாயிரம் பேருக்கு சாப்பாடு போடுவார்னா ராஜா எவ்ளோப்பா சம்பாதிச்சிருப்பார்?’ என்று என் மகள் கேட்டாள். ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி என்று ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை.

இரவு நடை சாத்தும் நேரத்தில் திருவட்டார் போய்ச் சேர்ந்தோம். கோயிலில் கூட்டமில்லை. குளுமையும் இருளும் பெயரறியா வண்டுகளின் சத்தமும் கோயிலின் பிரம்மாண்டமும் ஆதிகேசவன் இன்னும் பத்தடி தொலைவில் படுத்திருக்கிறான் என்னும் எண்ணம் உண்டாக்கிய கிளர்ச்சியும் அபாரமான நிசப்தமும் விவரிக்க முடியாத பரவசத்தை அளித்தன. என் மகளுக்கு விஷ்ணுபுரத்தின் ஒருவரிக் கதையைச் சொன்னேன். மிகுந்த ஆர்வமாகிவிட்டாள்.

‘பெருமாள் புரண்டு படுப்பாரா?’

‘ஆமா. ஒரு யுகம் முடியும்போது புரண்டு அந்தப்பக்கம் திரும்பிப் படுத்துப்பார்.’

‘அப்பொ என்ன ஆகும்?’

‘பிரளயம் வரும்.’

‘பிரளயம்னா நோவா தாத்தா இருந்தபோது வந்த மாதிரியா?’

ஆதிகேசவன் கதைக்கு முன்னால் அவளுக்கு நோவாவின் கதை தெரியும் என்பதை ஒரு கணம் மறந்திருந்தேன். இதைக் கண்டிப்பாக என் நண்பர் அரவிந்தன் நீலகண்டனிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவர் கொதித்துக் குமுறுவதைப் பார்ப்பது, என் குழந்தையின் குதூகலத்தைப் பார்ப்பதற்கு நிகரானதொரு அனுபவம்.

கோயிலிலிருந்து புறப்படும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. என் சகோதரியின் நண்பர் தங்ககுமார் முட்டத்தில் அவர் வீட்டுக்கு இரவு உணவுக்கு வரவேண்டுமென்று சொல்லியிருந்தார். பத்து மணிக்குமேல் முட்டம் சென்று அடைந்தோம். அலைந்த களைப்பு, குளித்த களைப்பு எல்லாம் சேர்ந்து கண்ணை அழுத்த ஆரம்பித்திருந்தது. ஆப்பமும் இடியாப்பமும் செவ்வாழையும் நன்னாரி சர்பத்தும் ததும்பும் அன்புமாக இரவு உணவை முடித்து விடைபெற்று அறைக்குச் சென்று சேர்ந்து விழுந்தபோது நேரம் என்ன ஆகியிருந்தது என்று தெரியவில்லை.

மறுநாள் காலை தங்கியிருந்த ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு விவேகானந்த கேந்திரத்துக்கு இடம் பெயர்ந்தேன். மூன்று நாள்களுக்கு முன்பதிவு செய்யச் சொல்லி மூன்று மாதங்கள் முன்னரே அநீயிடம் கேட்டிருந்தேன். ஏதோ பாகவத கோஷ்டி மொத்தமாக அறைகளை எடுத்துக்கொண்டு என்னை ஒரு நாள் வெளியே தள்ளிவிட்டது. உண்மையில் கன்யாகுமரி என்பது எனக்கு விவேகானந்த கேந்திரத்தில்தான் தொடங்குகிறது. அந்த இடத்தின் சான்னித்தியம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. எருமைகளையும் பன்றிகளையும் மட்டுமே சாலையில் கண்டு பழகிய சென்னைவாசிக்கு மான்களும் மயில்களும் உலவும் கேந்திரச் சூழல் நிச்சயமாகப் பரவசம் தரக்கூடியது. பல்லாண்டுகளுக்கு முன்னால் முதல் முதலாக என் நண்பன் ஆர். வெங்கடேஷுடன் கேந்திரத்துக்குச் சென்று ஒரு வார காலம் தங்கினேன். அப்போது இருவரும் ஒரு நாவல் எழுதும் பொருட்டு அங்கே போயிருந்தோம். அதன்பின் கன்யாகுமரியும் கேந்திரமும் என் நிரந்தரக் கனவுகளில் ஒன்றாகிவிட்டன.

என் மகளுக்குப் பார்த்த மாத்திரத்திலேயே விவேகானந்த கேந்திரத்தைப் பிடித்துவிட்டது. அதிகாலை தட்டியெழுப்பி சூரிய உதயத்துக்கு அழைத்ததும் சட்டென்று எழுந்து கூலிங் கிளாஸ் ஒன்றை மாட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள். மரங்களும் குடில்களும் உடன்வர, வளைந்து வளைந்து சென்ற பாதையெங்கும் குதித்தாடியபடியே வந்தாள். கடல் நீரில் கால் நனைய நின்று திகட்டத் திகட்ட சந்தோஷப்பட்டாள். அன்றுதான் பாறைக்கும் அழைத்துச் சென்றேன். பாறையில் விவேகானந்தருக்கு மண்டபம் எழுப்ப ஏக்நாத் ரானடே எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் கதையாகச் சொல்லிக்கொண்டு வந்தேன். பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடத்துக்கு [கங்கோத்ரி] அழைத்துச் சென்றேன்.

ஏக்நாத் ரானடே ஒரு மராட்டியர். தமிழ் தெரியாது அவருக்கு. கன்யாகுமரியில் ஹிந்து நாடார்கள் உதவியுடன்தான் அவரால் நூறு ஏக்கர் நிலத்தை வாங்கி கேந்திரத்தை நிறுவ முடிந்திருக்கிறது. காங்கிரஸ் முதல்வர் பக்தவத்சலம் எதிர்த்தாலும், நாத்திகரான திமுக தலைவர் அண்ணாத்துரையின் உதவியைப் பெற்று பாறையில் விவேகானந்தருக்கு ஒரு நினைவாலயம் எழுப்ப முடிந்திருக்கிறது. இடதுசாரித் தலைவர்களைக்கூட இந்த ஆன்மிகப் பணியில் இழுத்துவிடக்கூடிய சாமர்த்தியம் அவரிடம் இருந்திருக்கிறது. இதெல்லாமே மத மாற்றச் சம்பவங்களுக்குத் தடுப்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே என்பது அனைவருக்கும் தெரியும். அவரது இம்முயற்சி வெற்றி கண்டாலும் குமரியில் மத மாற்றங்களுக்கும் இன்றுவரை குறைவில்லை என்பது ஒரு விசித்திரம்.

ஒரு ஆட்டோவில் ஏறி நூறடி போவதற்குள் கண்டிப்பாக இரண்டு தேவாலயங்களாவது தென்பட்டுவிடுகின்றன. ஊரில் ஓடுகிற ஒவ்வொரு ஆட்டோவிலும் டாக்சியிலும் சிலுவைச் சின்னம் தொங்குகிறது. கண்ணில் படும் கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் கிறித்தவ நிறுவனங்களாகவே இருக்கின்றன. அத்தனை டீக்கடைகளிலும் இயேசுநாதர் போட்டோ இருக்கிறது. ஒரு சுவர் மிச்சமில்லாமல் இயேசு அழைத்துக்கொண்டிருக்கிறார். இவை இயல்பாக இல்லாமல் ஒரு குழந்தையின் கவனத்தையும் ஈர்க்கும்படி இருப்பதுதான் முக்கியம். ‘இது கிறிஸ்டியன் ஊராப்பா?’ என்று என் மகள் கேட்டாள். ஓடிக்கொண்டிருந்த டாக்சியை ஓட்டிக்கொண்டிருந்தவர் ஒரு கிறித்தவர். எனவே, அந்தக் கணத்தில் அவள் வினாக்களை நிறுத்த கே. பாலசந்தர் பாணியில் ஒரு பதிலளித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன் என்றாலும் எதற்காக இவர்கள் இப்படி கோககோலா, பெப்சி மாதிரி பிராண்டிங்கில் இத்தனை தீவிரம் செலுத்துகிறார்கள் என்று யோசிக்காமல் இருக்கமுடியவில்லை.

அன்று மாலை குமரி முனையிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள கோவளம் என்னும் இடத்துக்கு சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்காகச் சென்றோம். அருமையாக வெங்காயம், மிளகாய்ப்பொடி, மாங்காய்த் தூளெல்லாம் போட்டு சுடச்சுட வேகவைத்த வேர்க்கடலை கிடைத்தது. உதயத்தைக் காட்டிலும் அஸ்தமனம் இன்னும் கவித்துவமாக இருக்கிறது. ஒரு கிழக்கு லோகோ நிறத்தில் பந்தாகக் கடலில் இறங்கும் சூரியன், குளித்து முழுகி அந்தப் பக்கம் மறுநாள் காலை எழுந்திருக்கும்போது எப்படியோ இருபது சதவீதம் கூடுதலாக மஞ்சளும் பதினைந்து சதவீத சியானும் சேர்த்துக்கொண்டுவிடுகிறது. வானமும் கடலும் நிகழ்த்தும் வர்ணஜாலங்கள் ஃபோட்டோஷாப் அறியாதவை.

‘காவி’ ய நாயகன் அநீ

பயணத்தின் கடைசி நாளில் அதிகம் சுற்ற முடியவில்லை. முன்னர் நடந்த களைப்பும் கால் வலியும் அடித்துப் போட்டுவிட்டன. சும்மா ஒப்புக்கு வட்டக்கோட்டைக்கு மட்டும் போய் கொஞ்சம் போட்டோ எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டேன். புறப்படும் முன்னர் அரவிந்தன் வந்தார். காவி டிஷர்ட்டும் காதில் செல்போனுமாக மிகவும் பிசியாக இருந்தார். கொஞ்சநேரம் உலக விஷயம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டுவிட்டோம்.

மாலை ரயில் ஏறியபோது மழை தூற ஆரம்பித்தது. ஆரல்வாய்மொழியைத் தாண்டியதும் ரயில் ஜன்னல்களில் ஊசிபோல் மழைச்சாறல் விழத் தொடங்கியது. ‘அப்பா, மழை!’ என்றாள் என் மகள். சற்று இடைவெளிவிட்டு, ‘ஜவஹர் வித்யாலயாவ கன்யாகுமரிக்கு மாத்தமுடியுமாப்பா?’ என்று கேட்டாள்.

Share

45 comments

 • /தண்ணீருக்குத் தலை கொடுப்பதைக் கொஞ்சம் குறைத்தேன்//

  அருவி தண்ணீருக்கே உள்ள அரிய குணம் பாறையில் பட்டு தெறிப்பது அதை குறை கூறுதல் முறையோ?! 🙂

  //ஜவஹர் வித்யாலயாவ கன்யாகுமரிக்கு மாத்தமுடியுமாப்பா?//

  ஆஹா அப்ப சோழமண்டலம் பக்கம் ஒரு விசிட் அடிச்சா என்ன பதில் வருமோ? 🙂

 • //முதுகில் மாட்டிய டோரா பேக்-பேக்குடன் தன்னை அவள் டோராவாகவே கருதிக்கொண்டு பக்கவாட்டில் பார்த்தபடியே முழுத் தொலைவையும் நடந்து கடந்தாள். காசு கொடுத்து வாங்கவேண்டிய பொருள்கள் என அவள் மனத்தில் பதிந்திருந்த பல காய்களும் கனிகளும் எடுப்பாரற்று உதிர்ந்து கிடந்த காட்சி நிச்சயமாக ஓர் அற்புதம்.//
  அருமை.
  //வாழைக் குலைகளும் எலுமிச்சை, புளியங்காய்களும் அன்னாசியும் மாங்காயும் தேங்காயும் நுங்கும் இன்னபிறவும் காய்க்கிற பொருள்கள் என்பதைத் தெரிந்துகொள்ள எழுநூறு கிலோமீட்டர் போகவேண்டியிருப்பது சென்னைவாசிகளின் விதி.//
  ஆனா இந்த வரிகளில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. 700 கி.மீ கட்டாயமில்லை. 300 கி.மீ லயே பசுமை கண்ணை வந்து அறையும். சமீபத்துல கனிவமுதனை எங்க ஊருக்கு கூட்டிப் போன போது முழிச்சிருந்த நேரம் பூராவும் கார் சீட்டில் நின்னுகிட்டேதான் இருந்தார். அவர் ஹைட்டுக்கு எழுந்து நின்னாதானே ஜன்னல் வழியா நல்லா வேடிக்கை பாக்க முடியும். அவ்வளவு பச்சைய கண்ணால பாக்கற பரவசம் அவன் முகத்துல ததும்பியது பார்க்க கண் கொள்ளா காட்சி. கூட வந்த ராமநாதபுரத்துக்காரர் ஒருத்தருக்கும் அதே அனுபவம்தான். :)))

 • அருமை. உங்கள் கூடவே பயணித்தது போல இருந்தது.

 • நான் கூட மாத்தூர் தொட்டி பலத்தை விட்டு இறங்கும் வழியில் அன்னாசி பழங்களை செடிகளில் பார்த்து பரவசப்பட்டவன் தான்.
  கட்டுரை மிகவும் அருமை!!!

 • பரவசம் கேள்விப்பட்டு இருக்கிறேன் , படித்தால் பரவசம் வரும் இன்று இந்த கட்டுரையை படித்தவுடன் உணர்கிறேன்.

 • நாமும் எழுதவேண்டும் என்று அவ்வப்போது ஆசை எழும். இந்தப் பதிவினை வாசித்ததும் இன்னும் நூறு பிறவி எடுத்தாலும் நமக்கு இப்படி எழுதவராது என்று தோன்றியது. ஒரு ஒளிப்பதிவாளர் செய்யக்கூடிய பணியினை நீங்கள் எழுத்தில் புரிந்திருக்கிறீர்கள். எப்படி பாராட்டுவது என்றே புரியவில்லை! நீங்கள் குறிப்பிடும் திற்பரப்பு அருவி உங்கள் எழுத்திலேயே இருக்கிறது. வாழ்த்துக்கள்.

 • ரெண்டாயிரம் பேருக்கு சாப்பாடு போடுவார்னா ராஜா எவ்ளோப்பா சம்பாதிச்சிருப்பார்?’ என்று என் மகள் கேட்டாள். ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி சார் இதைவிட சிறப்பாக யாராலையும் விமர்சனம் பண்ண முடியாது

 • குமரிக்காட்சியை தாங்கள் வர்ணித்த விதம பரவசம்! நான் எத்தனையோமுறை சுற்றுலாஉந்து ஓட்டுனராய் சென்றபோதிலும் தங்கள் எழுத்தில் சொன்னவிதம் மீண்டும் பயணியாய் ஒரு தரம் போக தோன்றுகிறது! நன்றிகள் !

 • குமரி முனையில் நின்று கொண்டு கடல்கள் கூடும் அந்த சங்கமத்தை பார்ப்பதும் சூரிய உதயம் அல்லது அஸ்தமனத்தை பார்ப்பதும் ஒரு உணர்ச்சி பூர்வமான அனுபவம் தான். நாட்டின் தென்கோடியில் நிற்கிறோம் என்ற எண்ணம் ஒரு விதமான அற்புதமான உணர்வு. ஆமாம் கன்யாகுமரி அம்மனை தரிசிக்கவில்லையா என்ன?

  கிறிஸ்தவ ஆக்கிரமிப்பை தெரிந்து கொள்ள கன்யாகுமரி வரை செல்ல வேண்டாம். சென்னையை சுற்றியுள்ள கிராமங்களிலேயே வெளிப்படையாகத் தெரியும்.

 • மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்களுடன் கூடவே பயணித்தது போன்ற ஒரு உணர்வு.

 • கலக்கல்… கலக்கலான விவரணை!

  நான் போயிருந்தா சுண்டல் பத்தி மட்டுமே சிலாகித்து எழுதியிருப்பேன்! :)))

 • “”சிந்தனைதான் காவிஎன்றால் சட்டையுமா?”” என்று அநீ யைப்பற்றி ஒரு கமெண்ட் போட்டிருந்தேன்
  சில மாதங்களுக்கு முன்பு.பிரசுரம் ஆகவேயில்லை.
  இப்போது நீங்களே “காவி” ய நாயகர் என்று
  விளிப்பதினை எவ்வாறு புரிந்துகொள்வது?

  • பஷீர்: இந்தத் தளத்தில் கெட்ட வார்த்தைகள் கொண்ட கமெண்டுகள் மட்டுமே டெலீட் செய்யப்படுகின்றன. மற்ற அனைத்து வாசகர் கருத்துகளும் பிரசுரமாகாமல் இருப்பதில்லை. உங்கள் முந்தைய கமெண்ட் வரவில்லையென்றால் ஏதாவது தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக மட்டுமே இருக்கமுடியும்.

 • ஏற்கெனவே கன்னியாக்குமரி பற்றி நீங்கள் எழுதியவற்றைப் படித்துள்ளேன். இந்தக் கட்டுரை முந்தைய பதிவுகளையெல்லாம் மிஞ்சிவிட்டது. ஒவ்வொருமுறை போய்வரும்போதும் உங்களுக்கு அந்த ஊர் புதுப்புது தோற்றங்களை அளித்துக்கொண்டே இருக்கிறது போலும். ஊட்டி, கொடைக்கானல் என்று பிள்ளைகளை ஜாலியான இடங்களுக்கு அழைத்துச் செல்வதைவிட இம்மாதிரியான இடங்களுக்கு அழைத்துச் சென்று சரித்திர விவரங்களை இளம் வயதிலேயே விளக்கி சொல்வது நல்லதுதான். கிருத்தவ மத பிரச்சாரம் பற்றிய உங்கள் பதிவும் உண்மையே. ஆனால் இது கன்னியாக்குமரியில் மட்டும் நடப்பதல்ல. கடலோர பகுதிகள் அனைத்திலும் இதுபோன்ற தீவிர பிரச்சாரம் இருக்கவே செய்கிறது. படிப்பறிவில்லாத மீனவ குடும்பங்களை எளிதாகக் கவர்ந்து மதம் மாற்றிவிடுகிறார்கள். பிறகு அவர்களுக்கு படிப்பும் சொல்லிக்கொடுத்து, மாறியது சரியே என நினைக்க செய்துவிடுகிறார்கள். போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து மாநிலம் விடுப்பட்டால்தான் இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும். எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்று இருக்குமானால் யாரும் மதம் மாற முன்வரமாட்டார்கள்.

 • ஒங்களோட எழுத்த பாராட்டி ௨ வரி எழுத முடில என்னால எங்க போனாலும் எழுத்து ஒதைக்குது. எடையில கொததனார் வாத்தியாரு வேற வராரு. தப்பாயிடுமோனு பயம். நீங்கல்லாம் எப்படிதான் எழுதறீங்களோ. பிரமாதம் சார். புதுப்பொலிவோட அழகா இருக்கு ப்ளாக். ஒங்க பொண்ணு டோரா னா புஜ்ஜி யாருன்னு நான் கேக்க மாட்டேன்.

 • //ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி என்று ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை//

  எங்க வந்து யாருக்கு விழுவுது பாரு குத்து !!

  ஹஹஅஹஹா !

  சஹ்ரிதயன்

 • அருமையான விவரணை, பாரா. இம்மாதிரி பயணங்கள் ஒருவருக்கு அவசியம். இப்ப தான் புரியுது, நீலக்காகம் ஏன் உட்கார்ந்து விட்டது என்று 🙂 சீக்கிரம் பறக்க விடவும்.

 • //திற்பரப்பில் சுகமாகக் குளித்தோம். காற்றில் ஆடி உலரும் பத்தாறு வேஷ்டி மாதிரி அடக்கமான அருவி. கொஞ்ச நாள் முன்னால்தான் ஒரு பெரிய இலக்கிய கோஷ்டி வந்து குளித்துவிட்டுப் போயிருக்கிறது என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை//

  ஹஹ , நாங்க மிச்சம் வைச்ச தண்ணிதான் உங்களுக்கு .

  //ஆதிகேசவன் கதைக்கு முன்னால் அவளுக்கு நோவாவின் கதை தெரியும் என்பதை ஒரு கணம் மறந்திருந்தேன். இதைக் கண்டிப்பாக என் நண்பர் அரவிந்தன் நீலகண்டனிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவர் கொதித்துக் குமுறுவதைப் பார்ப்பது, //

  சொல்லித்தராமைக்கு அநீ கிட்ட சொல்லி ரெண்டுநாள் பட்டினி போட்டிருக்கலாம் ,

  போனவாரம் விஜயவாடா போனபோதும் இந்த கிருத்துவபிராண்டிங் கேள்வி எனக்கும் தோன்றியது .

 • நீண்ட நாட்களுக்குப் பிறகு வரிக்கு வரி சிலாகித்துப் படித்த பதிவு….

  குறிப்பாய்… இந்த பாரா :>

  //முதுகில் மாட்டிய டோரா பேக்-பேக்குடன் தன்னை அவள் டோராவாகவே கருதிக்கொண்டு பக்கவாட்டில் பார்த்தபடியே முழுத் தொலைவையும் நடந்து கடந்தாள். காசு கொடுத்து வாங்கவேண்டிய பொருள்கள் என அவள் மனத்தில் பதிந்திருந்த பல காய்களும் கனிகளும் எடுப்பாரற்று உதிர்ந்து கிடந்த காட்சி நிச்சயமாக ஓர் அற்புதம். வாழைக் குலைகளும் எலுமிச்சை, புளியங்காய்களும் அன்னாசியும் மாங்காயும் தேங்காயும் நுங்கும் இன்னபிறவும் காய்க்கிற பொருள்கள் என்பதைத் தெரிந்துகொள்ள எழுநூறு கிலோமீட்டர் போகவேண்டியிருப்பது சென்னைவாசிகளின் விதி//

 • கன்னியாகுமரிக்கு உடனே கிளம்ப தூண்டியது உங்கள் கட்டுரை…….. அருமையோ அருமை.

 • இந்த ஆண்டு ஆன்மிகத்திற்கான Nobel Prize பெறுவதற்கு கடும் போட்டி!
  சாய்பாபா கடவுள் இல்லை என்று பல தமிழ் விஞ்ஞானிகள்(உங்க பாஸ் உட்பட) தங்கள் ப்ளாகில் பதிவு செய்துவிட்டார்கள்.நீங்க சும்மா இருந்தா எப்படி? உங்க பங்குக்கும் எதாச்சும் எடுத்து விட வேண்டியதுதானே!
  பி.கு;புது வீடு வெகு ஜோர்! வாழ்த்துக்கள்

 • //.ஒரு லட்சத்து எழுவத்தி ஆறாயிரம் கோடி என ஏன் சொன்னேன் என தெரியவில்லை.//

  இந்த வரியில் லயித்து அடுத்த வரிக்கு போக ஐந்து நிமிடங்கள் ஏன் எடுத்துக்கொண்டேன் என எனக்கே தெரியவில்லை.

 • எம் மண்ணை பற்றி அழகான கட்டுரை

  //எனவே, அந்தக் கணத்தில் அவள் வினாக்களை நிறுத்த கே. பாலசந்தர் பாணியில் ஒரு பதிலளித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன்
  தைரியமாக பேசி இருக்கலாம்.. எந்த மதத்தையும் விட அகிம்சையையும், மன்னிப்பையும் அதிகமாகவே போதிக்கிறது கிறிஸ்தவம்..
  எங்கள் ஊரில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அ நீ போன்ற ஆட்களிடம் தான்….அவர் சார்ந்த ஆர்எஸ்எஸ்-காரர்களிடமும் தான்.

 • //////கன்யாகுமரிக்குச் சென்றிருந்தேன். நானறிந்த உலகில் குமரியைக் காட்டிலும் மன எழுச்சியும் பரவசமும் அளிக்கக்கூடிய மண் வேறில்லை.

  கன்யாகுமரி என்னும் தென் முனையை ஒட்டிய சிறு நகரம் .

  ‘ஜவஹர் வித்யாலயாவ கன்யாகுமரிக்கு மாத்தமுடியுமாப்பா?’ என்று கேட்டாள்./////

  கன்யாகுமரி பெயர்க்காரணம் கூறமுடியுமா ? அது கன்னியாகுமரி இல்லையா?

  சிகப்பு பின்னனியில் உங்கள் புகைப்படம், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா போல உள்ளது.

  • நண்பர் காத்தவராயன்!

   //சிகப்பு பின்னணியில் உங்கள் புகைப்படம்// – இப்படியொரு அபாயகரமான விமரிசனம் வரும் என்று முன்பே நினைத்தேன். என் சகல தொழில்நுட்பச் சிற்றறிவையும் பயன்படுத்திப் பார்த்தும் அந்த நோட்டீஸ் போர்டின் நிறத்தை மாற்றமுடியவில்லை. இந்த டெம்ப்ளேட்டையே மாற்றுவதுதான் ஒரே வழி. அதுசரி, சிவப்பு என்றால் கம்யூனிசம்தானா? செவ்வாழை, மாதுளை, குங்குமப்பொட்டு, மருதாணி வைத்த விரல், கோலத்தில் கொட்டிய நலங்கு நீர், அழகான உதடு போன்றவையெல்லாமும் நினைவுக்கு வரலாமே? நல்லதை நினைக்கப் பழகவும் :>

 • மிக்க நன்றி அப்படிதான் இருக்க வேண்டும்.
  ## அதுசரி, சிவப்பு என்றால் கம்யூனிசம்தானா? செவ்வாழை, மாதுளை, குங்குமப்பொட்டு, மருதாணி வைத்த விரல், கோலத்தில் கொட்டிய நலங்கு நீர், அழகான உதடு போன்றவையெல்லாமும் நினைவுக்கு வரலாமே? நல்லதை நினைக்கப் பழகவும் ##
  அப்படியானால் கம்யுனிசம் கெட்டது என்கிறீர்கள்.

  • பஷீர்: சேச்சே. நான் குறிப்பிட்டவையெல்லாம் நல்லவை என்று மட்டும்தான் சொன்னேன்.

 • அழகழகா வசீகரமா எழுதி, நாங்களும் பாக்கணும்னு ஆசைய கெளப்பி உட்டுட்டீங்க, நல்ல்ல்லா இருங்க. மருதநிலத்துக்காரங்கிறதால, இயற்கைய விட்டு ரொம்ப விலகி இல்ல, இளமைப்பருவத்துல. காவிரி, வயல்வெளி-ன்னு அந்த விஷயத்துல கொஞ்சம் கொடுத்து வச்சவன்.

  அதுசரி …

  கம்யூனிசம்-னா நினைவுக்கு வரக்கூடாத அளவுக்கு அவ்ளோ பயங்கரமான விஷயமா ? 🙂

  இல்ல, மெய்யாலுமே தெரியாமத்தான் கேக்குறேன்.

  அன்புடன்
  முத்து

 • உங்கள் மகளுக்கு விவேகானந்தர் பாரைக்கு அருகிலிருக்கும் வள்ளுவர் பாரை புலப்பாடாமற் போனது வியப்பானதுதான். அதையும் அறிமுகம் செய்திருந்தால் உங்கள் பயணம் முழுமையடைந்திருக்கக் கூடும்
  பாண்டியன்ஜி verhal.blogspot.com

  • பாண்டியன் ஜி, எனக்கு வள்ளுவர் விரோதமில்லை. பராமரிப்பு மற்றும் அலைச்சீற்றம் காரணத்தால் வள்ளுவர் சிலைக்குப் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனால் இம்முறை போகமுடியவில்லை. ஆனாலென்ன, என் மகளுக்கு வள்ளுவர் சிலையையும் கட்டினேன், அதன் பின்னால் இன்னொருவருக்காகக் காத்திருக்கும் மற்றொரு குட்டிப் பாறையையும் காட்டிவிட்டேன் 😉

 • அற்புதமான வாசிப்பு அனுபவம் அளித்த கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி பாரா. நான் கன்னியாகுமரிக்குச் சென்றதில்லை. செல்லத் தூண்டும்படி எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சென்ற இடங்களின் அழகு முழுக்க உங்கள் எழுத்தில் வந்து உட்கார்ந்துவிட்டது இந்த கட்டுரையில். பாராட்ட வார்த்தை இல்லை.

 • 1431 பயோரியா பல்பொடி கம்பெனியார் ‘ பாரா’ வை மாடலாக உபயோகித்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன்.

  போட்டோ சூப்பர்

 • அட இவரா அ.நீ? நான் தாடி வைத்து, வெள்ளை அல்லது காவி ஜிப்பா ஆசாமியை உருவகப்படுத்தி வைத்திருந்தேன். டீ சர்ட் (காவி கலரானாலும் ஹூ, ஹூம்) செல்போன் சே, சே 🙂

 • //எங்கள் ஊரில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அ நீ போன்ற ஆட்களிடம் தான்….அவர் சார்ந்த ஆர்எஸ்எஸ்-காரர்களிடமும் தான்.//

  ஆம், எது உண்மை என்பதை சொல்லித் தந்துவிடுவார்கள். ரொம்ப மோசம்.

 • எங்கள் பசுமையான கன்னியாகுமரி மாவட்டத்தின் விளைநிலங்கள் கேரளாவின் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் வளைகுடா நாட்டு பணத்தினால் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை சமீபத்தில் நான் ஊருக்கு சென்ற பொழுது கண்டேன். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெல் களஞ்சியமான நாஞ்சில் நாட்டில் பசுமை அழிந்து வருகிறது. சுங்கான்கடை அருகே உள்ள பசுமையான மலைகள் கிறித்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தொழில்நுட்ப கல்லூரி கட்டப்பட்டு சூழலியலுக்கு விரோதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய உயர் அதிகாரிகளாக கிறித்தவர்கள் நுழைந்து இந்து விரோத போக்கு கடைபிடிக்கபட்டு வருகிறது . சமீபத்தில் கன்னியாகுமரியில் அமையவிருந்த வீர அனுமான் சிலை நிர்மாணம் கிறித்தவர்களின் எதிர்பால் தடைபட்டது. ஆனால் சின்னஞ்சிறு சந்துகளிலும், தெருக்களிலும் ஜெபகூடங்களும் தேவாலயங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருவதை மாவட்டத்தில் உயர் பதவிகளில் இருக்கும் கிறித்தவ அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக மாறி விடுவார்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கிறித்தவ மதவெறி பிடித்த அந்நிய நாட்டு அடிமை கைக்கூலிகளின் கயமை தனத்தை கண்டு…ஞானசித்தர் ஏசுவே இவர்களின் பாவத்தை மன்னிக்க மாட்டார். நாஞ்சில் சுதீந்த்ரர்

 • ஒவ்வொரு முறையும் ஏக்கமாய் வந்து திரும்புவதை இந்த முறை மொத்த ஏக்கத்தையும் தீர்த்து விட்டீங்க. இந்த படைப்பை வேறொருவருக்கு சமர்பித்து அவரை வரவழைக்கின்றேன்.

 • I too agreed with Nangil Suseendharan; I am a native of Vadasery, Nagercoil; Previously for several kilometers at the back side of our Huse was seen with debth green paddy fields; these green lands and many more acres of green paddy lands oppposite to the Catherene Booth MISSION hospital in Putheri were bought by a recent politician of the district and aRe being conveted as housing plots; a PIL aginst this was also defeated by using the politial power; rcently, when I had been to my native vilage “Thazhiyalmahadevacoil Gramam” and when I saw such pitiable situation I shed tears in fact;
  Suppamani

 • கேந்திரம் பற்றிய உங்கள் கருத்து முழுக்க சரி..
  நல்ல பயணக் கட்டுரை..

  ||அதன் பின்னால் இன்னொருவருக்காகக் காத்திருக்கும் மற்றொரு குட்டிப் பாறையையும் காட்டிவிட்டேன் ;-)||

  இவ்வளவு நம்பிக்கை நல்லதல்ல ..:))

  • அறிவன்: அந்தக் குட்டிப்பாறை விஷயத்தில் நான் வெளிப்படுத்த விரும்புவது என் அச்சத்தை மட்டுமே! ஆனால் நான் அச்சப்படும் விஷயங்கள் பல சமயம் நடந்திருக்கின்றன. அதனாலேயே இப்பாறை மேலும் அச்சமூட்டுகிறது. அந்தப் பாறையில் செல்யூகஸ் நிகேடர் வந்து உட்கார்ந்து தோசை சுட்டு சாப்பிட்டார் என்று யாரேனும் இப்போதே ஒரு கதை கிளப்பிவிட்டால்கூடப் பெரிதும் மகிழ்வேன்.

 • ||ஆனால் நான் அச்சப்படும் விஷயங்கள் பல சமயம் நடந்திருக்கின்றன. அதனாலேயே இப்பாறை மேலும் அச்சமூட்டுகிறது. அந்தப் பாறையில் செல்யூகஸ் நிகேடர் வந்து உட்கார்ந்து தோசை சுட்டு சாப்பிட்டார் என்று யாரேனும் இப்போதே ஒரு கதை கிளப்பிவிட்டால்கூடப் பெரிதும் மகிழ்வேன்.||

  வாய் விட்டுச் சிரித்தேன் !

  சம்பந்தப் பட்டவர்களுக்கு அவ்வளவு கலை தாகம் எல்லாம் கிடையாது.. முக்கிய வாரிசிடம் ஒருவர் பிறந்த நாள் அன்று பார்க்கர் விலையுயர்ந்த ஃபௌண்டன் பேனா பரிசளித்ததாகவும்,உடனடியாக அதை உபயோகித்து தன் கையெழுத்தை இட்டுப் பார்த்த அவர்(இது அவர் மானரிசமாம்!) என்னய்யா இப்படி இன்ங் தண்ணியா கொட்டுது என்றாராம்.இத உசந்த பேனான்னு சொல்ற என்றும் கேட்டதாகத் தகவல்

  எழுதிக் குவித்தவர்களின் வாரிசுகளுக்கு ஃபௌண்டன் பேனா பிடித்து எழுதியே பழக்கமில்லை என்றறிந்த பரிசளிப்பாளர் நொந்து கொண்டாராம்..

  பாறையில் போய் முக்தி அடையும் சாத்தியங்கள் குறைவு..எனவே பயமில்லை !

 • ஒரு தடவை தஞ்சைக்கு வந்து போங்களேன் கண்டிப்பாக ஒரு புத்தகம் எழுதணும்னு தோணும். (புத்தக தலைப்பு கூட நான் தாரேன் “சோழர் நிலம்” எப்பூடி) அப்படியே 50 கிமீ தொலைவிலுள்ள திருவாரூருக்கும் வந்து போங்களேன். ரெண்டு ஊருக்கும் என்ன சிறப்புன்னு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை !! (அப்படியே 16 கிமீ பக்கத்திலுள்ள எங்க ஊருக்கும் வாங்கன்னு சொல்ல ஆசையா இருக்கு) வேணாம் வந்தா அப்புறம் சென்னைக்கு போக மனசு வராது. ஏன்னா மரம், மட்டை, குளம், குட்டை, வாய்க்கால் வயல் வரப்பு, ஆறு, பச்சை பசேல் இது தான் எங்க கிராமம்.

 • KK is a lot better than Thanjavur Dt in many ways. The landscape , free air & water make the difference

By Para

Recent Posts

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி