சுகம் பிரம்மாஸ்மி – 6
அரைகுறைப் படிப்பு, கலவையான ஆர்வங்கள், எதிலும் முழுத்தேர்ச்சி இன்மை, மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு, கேளிக்கைகளில் மிகுவிருப்பம், வீட்டுக்கோ, நட்புகளுக்கோ, உறவுகளுக்கோ, எனக்கேகூட உபயோகமின்மை, நேர்மையின்மை, வசதிக்கு – தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை வளைக்கும் அல்லது ஒடிக்கும் இயல்பு, எதையாவது பெரிதாகச் செய்துவிடவேண்டுமென்கிற வெறி அல்லது வேட்கை, ஆனால் எதையும் செய்யத் துப்பில்லாத மொக்கை புத்தி – இன்னும் நிறைய அடுக்கலாம். யாருமே விரும்பமாட்டாத இத்தனை கல்யாண குணங்களுடனும் நான் அப்போது இருந்தேன்.
எனக்குத் தெரிந்த வட்டங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் என்னை மிகவும் வெறுக்கவும் முதுகுக்குப் பின்னால் இழித்துப் பேசவும் தொடங்கியிருந்த சமயத்திலும் என் கடவுள் என்னை வெறுக்கவோ, கைவிடவோ இல்லை என்பது எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. மனத்துக்குள் கேட்கும் அவனது குரல் எப்போதும் அதே அன்புடனேயே ஒலிக்கும். பரவாயில்லை ராகவா. யாரும் செய்யாத தவறுகளை நீ செய்யவில்லை. இதெல்லாம் இந்த வயதில் இயல்பு. என்ன, ஒரு படி மேலே போனாய். கல்லூரிக் கூத்துகளுக்குப் பிறகும், வேலைக்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றி வீட்டை ஏமாற்றினாய். அவ்வளவுதானே. கல்யாணப் பரிசு தங்கவேலு கதை. ஒன்றும் பிரச்னையில்லை. பின்னாளில் நீ நினைத்துச் சிரிக்க ஒரு அனுபவம். விடு, மறந்துவிடு. அடுத்து என்ன? அதை யோசி.Read More »சுகம் பிரம்மாஸ்மி – 6