தமிழே, தப்பிச்சுக்கோ!

நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன். அவரது தொடக்ககாலப் பாடல்கள் முதல் நேற்றைக்கு வெளியானதுவரை அநேகமாக எதையும் தவறவிட்டதில்லை என்று நினைக்கிறேன். தியானமாகக் கொள்ளத்தக்க இசை வடிவங்களை வழங்கிய சில இசை வல்லுநர்களுள் அவர் ஒருவர். சுயம்பு, குழம்பு என்றெல்லாம் என்னால் சிலிர்க்கமுடியாது. கண்டிப்பாக மூழ்கி எடுக்கவேண்டிய முத்தைத்தான் அவர் எடுத்திருக்கிறார். கடும் பயிற்சியும் சிந்தனை ஒழுக்கமும் அர்ப்பணிப்புணர்வும் அவரது இசைக்குத் தனியொரு அந்தஸ்து அளிக்கிறது. மேதை என்று நிச்சயம் சொல்வேன். இந்திய இசை உலகில் அவரது தரத்துக்கு நெருக்கமான மேதைகள் என்று உடனே யாரையும் எனக்குச் சொல்லத் தோன்றாது.

மேதைகளுக்கு பலவீனம் இராதா என்ன? இளையராஜாவுக்குச் செய்யுள்.

அவர் ஏன் எழுத விரும்புகிறார் என்கிற கேள்விக்கு பதில் கிடைப்பது சிரமம். ஆனால் அதை ஏன் எல்லோரும் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பது புரியவில்லை. வாழ்நாளெல்லாம் புகழ்ந்து தீர்க்க அவருடைய இசை இருக்கிறது. போதாதா? எதற்காக அவரைக் கொம்பு சீவி விட்டு வெண்பாவும் விருத்தமும் எழுத அல்ல – யாக்க வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நேற்றைக்குச் சென்றிருந்தேன். இளையராஜாவின் இரண்டு புத்தகங்களுக்கு வெளியீட்டு விழா. ஆய்வுக் கோவை என்று ஒன்று. அடியார் அடியொற்றி என்று இன்னொன்று. ஆய்வுக்கோவை, அவரைப் பற்றிப் பல கல்வியாளர்களும் கவிஞர்களும் சேர்ந்து எழுதியது. அடியார் அடியொற்றி, அவரே யாத்தது.

இளையராஜாவின் எழுத்துத் தாக்குதல்கள் இதற்கு முன்பும் வெளிவந்திருக்கின்றன. சில அனுபவக் கட்டுரைகள் அவற்றின் விஷயத்துக்காகப் பொருட்படுத்தக்கூடியவையாக இருக்கும். புதுக்கவிதை மாதிரி சிலவும் மரபுக்கவிதையின் வாசனையில் டி.ராஜேந்தர்பாணி மோனைகள் மிக்க உரை வீச்சுகள் சிலவும் எழுதியிருக்கிறார். அவை நூலாகவும் வந்துள்ளன. மௌனம், மரணம், தவம், மனிதன், ஆத்மா, உள்ளே, வெளியே, வானம், வெட்டவெளி, அறிந்தவை, அறியாதவை, விடுதலை, வேள்வி என்று வரிசையாக நூறு சொற்களை இந்த ரகத்தில் எடுத்து வைத்துக்கொண்டு பெர்முடேஷன் காம்பினேஷனில் தொகுத்தால் கிடைக்கக்கூடிய கவியுருவங்கள் அவருடையவை.

சரி, நான் பாக்குப் போடுகிறேன், இளையராஜா கவிதை எழுதுகிறார் என்றுதான் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நேற்றைய விழாவில் அவரை மாணிக்கவாசகராகவும் சுந்தர மூர்த்தி நாயனாராகவும் பத்ரகிரியாராகவும் பட்டினத்தாராகவும் உருவகப்படுத்தி (ஒரு அம்மாள் – அவர் ஒரு புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், பெயர் மறந்துவிட்டது. அறுபத்தி நாலாவது நாயன்மார் என்றே அடித்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.) பேசிய தமிழறிஞர்களின் வீர உரைகளைக் கேட்டபோது அடிவயிறு கலங்கிவிட்டது. சுகி. சிவமும் தெ.ஞானசுந்தரமும் இளையராஜாவைக் காட்டிலும் சிறந்த புலவரே இல்லை என்று பேசுவதைக் கேட்டால், இத்தனை காலம் இவர்கள் வாயாரப் புகழ்ந்த கம்பனும் பாரதியும் அரை டிரவுசர் அணிந்து ராஜாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து யாப்பிலக்கணமும் இன்னபிறவும் படிக்கவேண்டுமென்று சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது.

அத்தனாம்பெரிய தமிழறிஞர்களெல்லாம் புகழ்கிறார்களே என்று அவரும் தம்பங்குக்கு எம்பாவாய், எம்பாவாய் என்று வம்படியாக த் திருவெம்பாவை ஸ்டைலில் பா, பாவாகப் பாடிப் பொழிந்து தீர்க்கிறார். மாணிக்கவாசகருக்குக் கூடக் கொஞ்சம் மீட்டர் பிரச்னை வருமோ என்னமோ. இளையராஜாவுக்குச் செய்யுள் என்பது சர்க்கரை வியாதிக்காரருக்குச் சிறுநீர்போல் தங்குதடையற்றுப் பொழிந்துகொண்டே இருக்கிறது. இதன் அபாயம் என்பது சர்க்கரை வியாதியின் அபாயமேதான் என்பது ஏன் அவருக்குப் புரியவில்லை என்று தெரியவில்லை.

புகழ்பெற்ற சந்தங்களை வைத்துக்கொண்டு பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்பி இன்னொரு பா புனைவது பெரிய தொழில்நுட்பமோ, கலையோ அல்ல. இதற்கு தியானமெல்லாம் வேண்டாம். மனம் குவிந்து, கண்கள் மூடி, நெஞ்சு நெகிழ, அவனருளாலே அவன் தாள் வணங்கித்தான் ஆரம்பிக்கவேண்டுமென்பதுமில்லை. மிக எளிய குழந்தை விளையாட்டு போன்றதுதான். யாரால் வேண்டுமானாலும் எளிதில் செய்துவிட முடியும். மொழிப்பயிற்சி மட்டும் கொஞ்சம் இருந்தால் போதுமானது. இணையத்தில் அறிமுகமான நண்பர், கவிஞர் ஹரி கிருஷ்ணனுடன் (மரபிலக்கியம்) மெசஞ்சரில் உரையாடும்போதெல்லாம் தவறாமல் இந்த விளையாட்டை விளையாடுவேன்.

ஏதோ ஒரு தேர்தல் சமயம் நடிகை ரம்பா பிரசாரத்துக்குப் போகவிருக்கிறார் என்று செய்தி வர, அந்தச் சமயம் ஹரி லைனில் வந்தார்.  கம்பராமாயணம் தொடர்பான ஒரு புத்தக முயற்சியில் அவர் இருந்த சமயம் அது. சும்மா சீண்டிப்பார்ப்பதற்காக

கொம்பா இது கொடியா வெறும் அம்பாவென எண்ணி
ரம்பாவெனும் விண்மீனினை ரசியாதொரு கூட்டம்
அம்போவென அவரேறிட அம்பாசிட ரீந்து
லம்போதரன் துணையோடொரு தேர்தல் பணி தந்தார்.

என்று ஆரம்பித்தேன். நியாயமாக என்னை அவர் கொலையே செய்திருக்கலாம். உருப்படமாட்டீர் என்பதுடன் நிறுத்திக்கொண்டார். மாறாக, கம்பனிடம் சந்தம் இருந்தாலும் நுட்பம் குறைவு; அது உங்களிடம் மிகுந்திருக்கிறது என்று ஆரம்பித்து அரை மணிநேரம் பேசியிருப்பாரேயானால் என்ன நினைப்போம்?

அப்படித்தான் இருந்தது நேற்றைய விழாவில் இளையராஜாவின் பாப்புலமையை வியந்து சிலாகித்த தமிழறிஞர்களின் பேருரைகள்.

வாஜ்பாயி, அப்துல் கலாம், இளையராஜா போன்றோரையெல்லாம் அவர்களது உண்மையான திறமை புதைந்துகிடக்கும் இடத்தைக் குறிப்பிட்டு பாராட்டினாலோ, மதிப்புரை வழங்கினாலோ, விமரிசித்தாலோ அவர்களது துறையில் அவர்களுக்கு உபயோகமாகவும் தனிப்பட்ட முறையில் ஊக்கமளிப்பதாகவும் உத்வேகம் தரத்தக்கதாகவும் இருக்கும். இவர்களையெல்லாம் கவிஞர்கள், புலவர்கள் என்று அங்கீகரித்து, கிரீடம் சூட்டிவிட்டால் தாளுக்கும் மைக்கும்தான் கேடு.

இசையில் இளையராஜா தொட்ட உயரங்கள் அதிகம். என்னால் ரசிக்கவும் வியக்கவும் மட்டுமே முடியும். ஆனால் பா விஷயத்தில் அவர் அடிக்கிற கூத்துகள் அதிர்ச்சிகரமாகவே உள்ளன. இன்றைக்கு மாணிக்கவாசகரை வேஷ்டி உருவி ஓடவிட்டதுபோல நாளைக்கு யார் இவரிடம் அகப்படுவார்களோ என்று உள்ளம் பதறுகிறது. அப்பர், சம்பந்தர், ஆழ்வார்கள் பன்னிருவர், அடுத்த வரிசை ஆசாமிகளெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். ஏற்கெனவே பாரதியாருக்குக் குறிவைத்து ஏதோ ஒரு காரியம் செய்திருக்கிறார் போலிருக்கிறது. வெளிவரவிருக்கும் ‘அஜந்தா’ என்கிற படத்தில் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தெரியாமல் தானே ஏதோ ஒரு பாடல் அல்லது செய்யுள் ‘யாத்து’ பாடி இணைத்துவிட்டதாகப் பேசும்போது குறிப்பிட்டார். அது பாரதியாருக்கு என்னவோ ஒரு பதில் சொல்கிறதாம்.

கண்டிப்பாக மேற்படி தமிழறிஞர்கள் அதற்கொரு விழா வைத்துப் பழிவாங்காமல் விடப்போவதில்லை. இசைத்தாயின் தலைமகன், தமிழ்த்தாயைப் படுத்தாமல் விடுவது தமிழ்கூறும் நல்லுலகுக்கு அவர் செய்யும் பேருபகாரமாக இருக்கும் என்பது திண்ணம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி