ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26

எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும்  சென்னையில் நான் கண்ட ஒரு காட்சி எக்காலத்திலும் தமிழகத்தின் வேறு எந்த ஊரிலும் நடந்திருக்க வாய்ப்பில்லை. சென்னையிலேயே கூட சமீப காலமாக இந்தக் கலாசாரம் அநேகமாக வழக்கொழிந்துவிட்டது என்று நினைக்கிறேன். அது, சினிமா வாய்ப்புக் கேட்டு கம்பெனிகளை முற்றுகையிடுவது.

படம் எடுப்பவர்கள், முதலீடு செய்பவர்கள், நடிப்பவர்கள், மற்ற தொழில்நுட்ப வல்லுனர்களைப் போலவே வாய்ப்புக் கேட்டு அலைபவர்களையும் நான் ‘சினிமாக்காரர்கள்’ என்னும் பொது அடையாளத்துக்கு உட்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் அன்று வாய்ப்புக் கேட்டு அலைந்துகொண்டிருந்தவர்களில் பலருக்கு சினிமாவுக்குள் இருப்பவர்கள் அளவுக்கே அந்தத் துறை சார்ந்த அறிவும் ஆற்றலும் இருந்தது. வாய்ப்பு அமையாமல் இருந்தது மட்டும்தான் வித்தியாசம்.

சென்னையில் சினிமா வாய்ப்புக்காக அலைபவர்களை இரண்டு பிரிவுகளுக்கு உட்படுத்தலாம். வாய்ப்புத் தேடும் சென்னைக்காரர்கள். சென்னைக்கு வந்து வாய்ப்புத் தேடும் வெளியூர்க்காரர்கள். இவர்களுக்குள் ஒரு வித்தியாசம் உண்டு. சினிமா வாய்ப்புத் தேடும் சென்னைக்காரர்களுக்கு அதுவே முழு நேர வேலையாக இருக்கும். வெளியூரில் இருந்து வந்து இங்கே தங்கிக்கொண்டு வாய்ப்புத் தேடுவோருக்குக் குறைந்த பட்சம் தங்கவும் உண்ணவும் ஒரு தொகை தேவைப்படும். அதற்காக அவர்கள் எங்கேனும் வேலை பார்ப்பார்கள். சிறிய வேலைகள்தாம். உணவகங்களில், துணிக்கடைகளில், பாத்திரக் கடைகளில் இந்த மாதிரி. ஓர் அறை எடுத்துக்கொண்டு ஏழெட்டுப் பேராக மொத்தமாகத் தங்கி வாய்ப்புத் தேடுவோர் சுழற்சி முறையில் வேலை பார்ப்பதும் உண்டு.

1988ம் ஆண்டு முதல்முதலில் இயக்குநர் கே. பாலசந்தரைச் சந்திப்பதற்காக அனுமதி கேட்டுக் கடிதம் எழுதி, பார்க்கப் போயிருந்தேன். அப்போது அவரது மனதில் உறுதி வேண்டும் வெளியாகி பெரிய வெற்றி கண்டிருந்தது. அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்த விவேக் அடிக்கடி அவரது கற்பகாம்பாள் நகர் அலுவலகத்துக்கு வருவார். அந்த அலுவலகத்தின் வாசலில் வாய்ப்புக் கேட்டுக் காத்திருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் விவேக் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். நாளை நாமும் இந்தப் பையனைப் போல் ஒரு வாய்ப்புக் கிடைத்து சினிமாவுக்குள் நுழைந்துவிடுவோம் என்று நம்பிக்கையுடன் பேசிக்கொள்வார்கள். இயக்குநர் வெளியே வந்தால் ஓடிச் சென்று முன்னால் நின்று வணக்கம் சொல்வார்கள். சில சமயம் அவர் பதில் வணக்கம் சொல்வார். சில சமயம் வேறு ஏதோ யோசனையில் உள்ளவரைப் போல கவனிக்காமல் போய்விடுவார். அபூர்வமாக ஒரு சில சமயம் நின்று அவர்களுடன் பேசவும் செய்வார். யார் யார் என்னென்ன வாய்ப்புக் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று விசாரிப்பார். பெரும்பாலும் உதவி இயக்குநராகும் கனவுடன் வந்திருப்பவர்களே அதிகம் பேர் இருப்பார்கள்.

‘ரெண்டு பேருக்கு மேல வெச்சிக்கறதில்லைய்யா. இப்படி மொத்தமா இருவது பேர் வந்து கேட்டிங்கன்னா நான் என்ன பண்ணுவேன்?’ என்று செல்லமாக அலுத்துக்கொள்வார். அப்போது வஸந்த் அங்கே மூத்த உதவி இயக்குநராக இருந்தார் என்று நினைக்கிறேன். சரண் இருந்தார். அசோக் என்று ஒருவர் இருந்தார். பாலசந்தருடன் எப்போதும் இருக்கும் அனந்து அப்போதும் இருந்தார். கவிதாலயாவுக்குள் வேலை பார்ப்பவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி அறிவார்களோ, அதே அளவு இந்த வாய்ப்புக் கேட்டு வரும் இளைஞர்களையும் அவர்கள் நன்கு அறிவார்கள். தனித்தனியாகவும் மொத்தமாகவும் இயக்குநரையும் அவரது குழுவினரையும் அணுகி வாய்ப்புக் கேட்டு விண்ணப்பித்துக்கொண்டு, அவர்கள் அங்கிருந்து நேரே காமதேனு திரையரங்கத்துக்கு எதிரே இருந்த விவேக் சித்ரா அலுவலகத்துக்குச் செல்வார்கள். அங்கு ஏதாவது வாய்ப்புள்ளதா என்று விசாரித்துக்கொண்டு கிளம்பினால் அடுத்த நிறுத்தம், வீனஸ் காலனி மணி ரத்னம் அலுவலகம். அங்கே அரை மணி நேரம் செலவிட்டுவிட்டு, அங்கிருந்து ஜெமினிக்குச் சென்று பார்சன் காம்ப்ளக்ஸில் பாரதி ராஜா அலுவலகம்.

பாலசந்தர் பத்து மணிக்கு அலுவலகம் வருவார். பாரதி ராஜா பன்னிரண்டு மணி சுமாருக்குத்தான் வருவார். அந்த நேரத்தைக் கணக்கிட்டுக்கொண்டு அவர்கள் திட்டத்தை வகுத்துக்கொள்வார்கள். இயக்குநர்கள் அலுவலகம் வந்து இறங்கும்போது முதல் நபராக ஓடிச் சென்று எதிரே நின்று மலர்ந்த முகத்துடன் வணக்கம் சொல்வதை ஒரு கடமையாக நினைப்பார்கள்.

எழுதத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் எனக்கு சினிமா ஆசை கட்டுக்கடங்காமல் இருந்தது. புராதனமான மேற்சொன்ன வாய்ப்புத் தேடும் முறையில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. சேர்ந்தால் பாலசந்தரிடம் மட்டுமே சேரவேண்டும் என்று நினைத்தேன். அதனால் தொடர்ந்து அவருக்குக் கடிதம் எழுதிச் சித்திரவதை செய்துகொண்டிருந்தேன். அது பொறுக்கமாட்டாமல்தான் ஒருநாள் என்னை அவர் நேரில் வரச் சொன்னார். இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதை நேரில் அழைத்துச் சொல்லும் நாகரிகம் மிக்கவராக அவர் இருந்தார்.

‘இதே மாதிரி இன்னொரு நாள் என்னை நீங்களே வரச் சொல்லுவிங்க சார். அன்னிக்கு வந்து சேந்துடுன்னு சொல்லுவிங்க. நடக்குதா இல்லியா பாருங்க’ என்று உணர்ச்சிமயமாகச் சொல்லிவிட்டு வந்தது நினைவிருக்கிறது. (பின்னாளில் அவர் ‘கல்கி’ படம் தொடங்கியபோது அது நடந்தது. ஆனால் நன்றியுடன் மறுத்துவிட்டேன்.)

பாலசந்தரிடம் சேர வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகுதான் அந்த வாய்ப்புத் தேடி அலையும் குழுவை வேடிக்கை பார்ப்பவனாக அவர்களோடு செல்ல ஆரம்பித்தேன். அப்போது அறிமுகமான நண்பர்களுள் ஒருவர் இன்றும் தொடர்பில் இருக்கிறார். அவர் பெயர் தீனதயாளன். சினிமா தொடர்பாக நிறையப் புத்தகங்கள் எழுதியவர். கர்ச்சிப்பில் பவுடர் போட்டு மடித்து எடுத்து வருவார். இயக்குநர் வரும் நேரம் முகம் துடைத்து, பவுடர் போட்டுக்கொண்டு புத்துணர்ச்சியுடன் எதிரே சென்று நிற்பார். எனக்குத் தெரிந்து அந்நாளில் சினிமாவுக்கு உள்ளே இருந்தவர்களைக் காட்டிலும் அதிகமாக சினிமாவை அறிந்தவர் அவர். ஒரு வாய்ப்புக் கிடைத்திருந்தால் பெரிய உயரங்களுக்குச் சென்றிருப்பார். ஏனோ அப்படி அமையவில்லை.

இன்னொரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ரங்கசாமி. ரங்கசாமியை நான் பார்சன் காம்ப்ளக்ஸில் இருந்த பாரதி ராஜாவின் அலுவலக வாசலில் முதலில் சந்தித்தேன். கும்மிடிப்பூண்டியில் வசதியான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஒரு சிறிய அறையில் ஆறு நண்பர்களுடன் தங்கி இருந்து வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார். நானாவது கதை எழுதலாம் என்று வெறுமனே எண்ணியிருந்தேன். ரங்கசாமி அப்போதே பத்திரிகைகளில் ஏழெட்டுக் கதைகள் எழுதிப் பிரசுரம் பார்த்திருந்தார். தவிர, சினிமாவுக்கென்றும் இரண்டு கதைகள் எழுதி வைத்திருந்தார்.

அது புது வசந்தம் திரைப்படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்ட காலம். சினிமாவில் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடி அலைந்துகொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் நான்கு நண்பர்களின் கதை ஒன்று இருந்தது. ரங்கசாமி சொன்ன கதை நான்கு நண்பர்களுடையது அல்ல. நான்கு பெண்கள் ஒரே கதாநாயகனைக் காதலிக்கும் கதை. என்ன விசேடமென்றால் அந்த நான்கு பெண்களும் கடைசி வரை ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள். கதாநாயகன் மட்டும் நான்கு பேரையும் வேறு வேறு களங்களில் எதிர்கொள்வான். நால்வரில் அவன் யாருடைய காதலை ஏற்பான் என்ற வினாவுடன் நகரும் திரைக்கதை, இறுதியில் யாருமே எதிர்பார்க்க முடியாத ஒரு திடுக்கிடும் திருப்பத்துடன் முடிவுறும்.

இந்தக் கதையை எப்படியாவது பாரதி ராஜாவிடம் சொல்லிவிட வேண்டும் என்பது அவரது விருப்பம். இயக்குநர் அலுவலகத்துக்கு வரும்போதும் கிளம்பும்போதும் ஓடிச் சென்று எதிரே நின்று வணக்கம் சொல்லி, ரங்கசாமி தனக்கொரு வாய்ப்புத் தரும்படிக் கேட்பார். பல நாள் இது நடந்தது. ஒருநாள் பாரதி ராஜா, ‘சரி ஒண்ணு பண்ணு. உள்ள ஜேப்பி இருக்கான். அவன்கிட்ட கதைய சொல்லு. நான் கேட்டுக்கறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அன்று ரங்கசாமிக்கு வீரத் திலகம் வைக்காத குறையாக வாழ்த்துச் சொல்லி, அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குப் போனேன். மறுநாள் சந்தித்தபோது என்ன ஆயிற்று என்று கேட்டேன். ‘சொல்லிட்டேன்’ என்று சொன்னார். ஆனால் இயக்குநர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பிறகும் ஓரிரு முறை ரங்கசாமி உள்ளே சென்று கதை சொன்னார். அந்த அலுவலகத்தில் ஜேப்பி, லிவிங்ஸ்டன், ரகு என்று பலரிடம் அவர் கதை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் முதலில் சொன்ன கதையையேதான் சொன்னார் என்பதுதான் இதில் முக்கியமானது. இது ஏற்கெனவே சொன்ன கதை ஆயிற்றே என்றுகூட அவர்கள் கேட்கவில்லை என்று சொல்லி வருத்தப்படுவார்.

‘அப்புறம் எதுக்குப் போய் சொல்றிங்க?’

‘நான் கதை சொல்றப்ப ஒரே ஒரு வரி டைரக்டர் காதுல விழுந்துட்டா போதும். என்னை அவர் விடவே மாட்டாரு’ என்று சொல்வார்.

96ம் ஆண்டு வரை ரங்கசாமியுடன் எனக்குத் தொடர்பு இருந்தது. கல்கியில் அவருடைய சில சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறேன். பத்திரிகைகளுக்கு எழுதிக்கொண்டு மறுபுறம் சினிமாவிலும் விடாமல் முயற்சி செய்து பார்த்துவிட்டு, ஏதோ ஒரு கட்டத்தில் சலித்துப் போனார். கும்மிடிப்பூண்டிக்கே திரும்பிப் போய்விட்டார்.

88லிருந்து 92ம் ஆண்டு வரை இதுபோல சுமார் முப்பது ரங்கசாமிகளைச் சந்தித்திருப்பேன். சினிமாவுக்காக எதையும் இழக்கலாம் என்று பஞ்சம் பசியுடன் முட்டி மோதிக்கொண்டிருந்தவர்கள். தொலைக்காட்சித் தொடர்கள் வர ஆரம்பித்த பின்பு இவர்களில் பலருக்கு அங்கே வாய்ப்புக் கிடைத்துப் போனார்கள். என்ன ஆனாலும் சினிமாதான் என்று இருந்தவர்களுள் ஒரு சிலர் மட்டுமே சினிமாவுக்குள் நுழைந்தார்கள். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!