இன்றைய மதிய உணவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘சோலையில் சஞ்சீவனம்’ என்னும் மெடிமிக்ஸ் நிறுவனத்தின் உணவகத்தில் அமைந்தது. அலுவலக நண்பர்களுடன் உணவகத்தினுள் நுழைந்தபோது தோன்றிய எண்ணம் : புத்தருக்கு போதி மரம். நம்மாழ்வாருக்குப் புளியமரம். நமக்கு சஞ்சீவனம்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் இதே உணவகத்தில் சாப்பிட நேர்ந்தபோதுதான் உடல் நலம் குறித்தும் டயட் குறித்தும் முதல் விழிப்புணர்வு உண்டானது.
சஞ்சீவனம், முற்றிலும் ‘நேச்சுரோபதி’ என்னும் மருத்துவ நெறிக்கு உட்பட்டு இயங்குவது. இருபத்தியாறு விதமான உணவுப்பொருள்கள் இங்கு பரிமாறப்படுகின்றன.
உட்கார்ந்ததும் முதலில் நேந்திரம் பழத்துண்டு இரண்டில் ஒரு ஸ்பூன் தேங்காய்ப்பூ தூவித் தருவார்கள். அதைச் சாப்பிட்டு முடித்ததும் ஐந்து விதமான பானங்கள்.
ஏதேனுமொரு காய்கறிச் சாறு, புதினா அரைத்துவிட்ட மோர், கொட்டைச்சாறு, பழச்சாறு.
இதனை ஒரு குறிப்பிட்ட வரிசையில் அருந்தி முடித்ததும் பச்சைக் காய்கறிகள் ஐந்து வகை வரும். அதன்பின் பாதி வெந்த காய்கறிகள் இன்னும் ஐந்து. அது முடிந்ததும் முழுக்க வெந்த காய்கறிகள் மேலும் ஐந்துவிதம் [இதில் ஒரு கீரை இருக்கும்.]
உண்மையில் உணவு இவ்வளவுதான். பொதுவாக யாரும் இதில் திருப்தியுற மாட்டார்கள் என்பதால் சிவப்பு அரிசிச் சோறும் பருப்பும் – கேட்பவர்களுக்கு சாம்பார் ரசமும் பரிமாறப்படுகிறது. இறுதியில் ஒரு கப் பாயசம், ஒரு தேக்கரண்டி தேன் [ஜீரணத்துக்கு]. பீடா உண்டு. உள்ளே பாக்கு, சுண்ணாம்பு இருக்காது. பதிலுக்கு அங்கும் காய்கறிகள்.
இந்த உணவகத்தில் எண்ணெய், சிவப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, புளி போன்ற பொருள்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஓரிலைச் சாப்பாடு 1040 கலோரி கொண்டது என்று மேற்பார்வையாளர் சொல்கிறார். சராசரியாக ஒரு மனிதன் ஒருவேளை உட்கொள்ளவேண்டிய அளவுதான். ஆனால் முழுவதையும் சாப்பிட்டு முடித்தபிறகும் வயிறு இலேசாகவே இருக்கும்.
ஒரு மாறுதலுக்கு இம்மாதிரி யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுப் பார்க்கலாம். பிடித்திருந்தால் [முடிந்தவரை] தொடரலாம். சஞ்சீவனத்தில் ஒரு சாப்பாட்டின் விலை 110 ரூபாய்.
என்ன பிரச்னை என்றால், இங்கு சாப்பிட்டுவிட்டு டயட் கடைப்பிடிக்கத் தொடங்கியபிறகு என்னுடைய ஒவ்வொரு நாள் டயட்டின் விலையும் 150 ரூபாய்க்கு மேல் ஆகிறது!
ஆயினும் பரவாயில்லை. ஆறு மாதங்களில் இருபது கிலோ குறைத்துவிட முடிந்திருக்கிறதே.