கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 10

ஷெல்டர் என்று பொதுவில் அறியப்பட்ட, காப்பி ஃபில்டர் மாதிரி இருந்த உயரமான கட்டடத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகளாக மக்கள் வந்து சேர்ந்த தினத்தில் ஆண்டிறுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வந்தது. பள்ளியில் சத்துணவுத்திட்டத்தைத் பார்வையிட எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை அனுப்பிவைத்தார். ஆரஞ்சு நிற புடைவையில் அன்றைக்கு அவர் பள்ளி வளாகத்தில் இறங்கியபோது பாண்டுரங்கன் சார் ‘நானும் இன்னிக்கி ஆரஞ்ச் கலர்’ என்று பழனி வாத்தியாரிடம் தன் சட்டையைக் காட்டிச் சொன்னதை ஒட்டுக்கேட்டு கலியமூர்த்தி வகுப்பில் ஒலிபரப்பினான். கவிதை எழுதும் ஆற்றல் படைத்த மோகன சுந்தரம் இது பற்றி எட்டு வரிகள் எழுதி எல்லோருக்கும் காட்டினான். கலர் கொடிகள் கட்டி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தார்கள். பத்மநாபன் தனக்குக் கிடைத்த சாக்லேட்டை வளர்மதியிடம் நீட்ட, அவள் ‘தேங்ஸ் குடுமி, நீ சின்சியரா படிக்க ஆரம்பிச்சிட்டேன்னு கேள்விப்பட்டனே?’ என்று கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை. தீர்மானம் செய்திருந்தான். வளர்மதியைக் கவர அது ஒன்றைத்தவிர வேறு வழியில்லை. நன்றாகப் படிப்பது. எப்படியாவது ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குவது. இடைப்பட்ட காலங்களில் பன்னீர் செல்வத்தைப் பற்றி அவ்வப்போது வளர்மதி தன் தோழிகளிடம் குறிப்பிட்ட சில கருத்துகள் அவன் காதில் விழுந்திருந்தது. பன்னீர் நல்லவன். பன்னீர் கெட்டிக்காரன். பன்னீர் பெரியாள். என்னிக்கானா அவன நான் பீட் பண்ணிக் காட்டுறேன் பாரு. செகண்ட் ரேங்க் வாங்கும் வளர்மதிக்கு அது ஒருவேளை நெருங்கக்கூடிய தொலைவாகவே இருக்கலாம். பத்மநாபனுக்கு ஒரு விருப்பமாக அல்லாமல் வெறியாக அந்த எண்ணம் உருக்கொண்டது. கடைசியில் ஓடும் குதிரை முதலாவதாக வருவது. முடியாதா என்ன?

பன்னீர் வயிறெரிவான் என்கிற மகிழ்ச்சிக்குரிய தகவல் தவிர, வளர்மதி அப்போது தன் காதலை மறுக்கமுடியாமல் போகும். சின்சியரான காதலன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குபவனாகவும் இருப்பது அரிது. மாற்றியும் சொல்லலாம். ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குகிறவர்களைப் பொதுவில் யாரும் காதலிப்பதில்லை. குறிப்பாகப் பன்னீருக்கு அந்த பாக்கியம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்களால் அதிகம் விரும்பப்படும் பையன்களைப் பெண்கள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.

விதிகளை மாற்றுவதென்பது தன்னால் மட்டுமே முடியும். வளர்மதி, காத்திரு. இன்னும் ஒரே மாதம். இறுதித் தேர்வு நெருங்கிவிட்டது. பாடங்களிலும் காதலிலும். பத்தாம் வகுப்பு பி செக்ஷனுக்கு நீயும் நானும் காதலர்களாக உள்ளே நுழைவோம்.

அவன் பேய்போல் உழைக்கத் தொடங்கினான். இங்கிலீஷ் க்ளாஸில் சொல்லிக்கொடுக்கிற அனைத்தையும் வீட்டுக்குப் போய் உடனுக்குடன் எழுதிப்பார்த்தான். அதிகாலை வேளையில் ரெட்டைக்குளத்து புதரோரம் ஒதுங்கி அமரும்போது கையில் ஒரு துண்டுத்தாள் வைத்து கணக்குகளைப் போட்டுப்பார்த்தான். பள்ளிக்குப் போகிற, வருகிற வழியிலெல்லாம் வரலாற்றுப் புத்தக வருஷங்களை உருப்போட்டான். ஞாயிற்றுக்கிழமை பம்ப்செட் திருவிழாவைத் தவிர்த்துவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்று உலவியபடி படிக்கத் தொடங்கினான்.

இதனாலெல்லாம் அவனது அம்மா மிகுந்த கவலைக்கு உள்ளாகி, ‘உடம்புக்கு எதாச்சும் சரியில்லையா பத்து?’ என்று கேட்டாள்.

‘த..சே. அவன சொம்மாவுடு. புள்ள படிக்கறான்ல?’ என்று அப்பா அதற்கு பதில் சொன்னது பெருமிதமாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை அவனொரு திருந்திய மாணவன். ஹெட் மாஸ்டர் அறையில் ஞானம் பெற்றவன். இனி ஒருக்காலும் காதல், கொத்தவரங்காய் என்று போகமாட்டான்.

‘டேய், அழியாத கோலம்னு ஒரு படம் வந்திருக்காம். போவலாமா?’ என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அபூர்வமாக அப்பாவே கேட்க, ‘நீங்க போயிட்டுவாங்கப்பா. நான் படிக்கணும்’ என்று சொன்னான். ராஜலட்சுமி திரையரங்க மண்ணை மிதித்துச் சில வாரங்கள் ஆகியிருந்தன. இடையில் பன்னிரண்டு படங்கள் அங்கு வந்து போய்விட்டன. எந்தப் படமும் மூன்று நாளுக்கு மேல் கிடையாது. தூக்கிவிடுவார்கள். ஒன்றுவிட்டு ஒன்றாவது பார்த்துவிடுவது வழக்கம். இப்படித் தொடர்ந்து புறக்கணித்து சரித்திரமில்லை. சாதித்தாகவேண்டியிருக்கிறது. தியாகங்கள் இல்லாமல் சாதனைகள் இல்லை.

அவனது தோழர்களுக்கு இந்த மாற்றங்கள் முதலில் புலப்படவில்லை. அதே ஆறாவது பெஞ்சில் அமர்ந்திருக்கிற பத்மநாபன். சகஜமாகத்தான் பேசுகிறான். பழகுகிறான். வழக்கம்போலவே அவனது பார்வை எப்போதும் வளர்மதியின்மீது இருக்கிறது. அவ்வப்போது போரடித்தால் பெருமாள் சாமியைத் திரும்பிப் பார்த்து முறைத்துக்கொள்கிறான். ஆனால் அவன் வளர்மதியை அணுகி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது மற்றவர்களின் கவனத்துக்கு வரவில்லை.

நைன்த் பியில் மேலும் சில காதலர்கள் பிறந்தார்கள். கலியமூர்த்தி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் நான்காவது பெண்ணாக காஞ்சனாவைக் காதலிக்கத் தொடங்கி மோகனசுந்தரத்திடம் கவிதை எழுதப் பயிற்சி எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான். பன்னீரும் அவனது குழுவில் இருக்கும் (தேர்ட் ரேங்க்) முத்துக்குமாரும் ராஜாத்தியைக் காதலிக்கலாம் என்று ஒரே சமயத்தில் முடிவு செய்ய, இருவருக்குமான நட்பில் விரிசல் ஏற்பட்டது. ராஜாத்தி முத்துக்குமாரை ‘போடா பன்னாட’ என்று சொல்லிவிட்டதாக ஒரு புரளியை குண்டு கோவிந்தன் கிளப்பிவிட, இருவரும் சத்துணவுக்கூடத்துக்குப் பின்புறம் இருக்கும் திறந்தவெளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டார்கள். ராஜாத்தி இதனைப் பார்த்து ரசித்துப் பாராட்டினாள். அதுநாள் வரை யாரையுமே காதலித்திராத அஞ்சாவது ரேங்க் சிவசுப்பிரமணியன்கூட ஒன்பதாம் வகுப்பு சி செக்ஷனில் இருக்கும் ரேவதியைக் காதலிக்கத் தொடங்கினான்.

இறுதித் தேர்வு நெருங்கிய நேரத்தில் இவ்வாறாக உலகம் இயங்கிக்கொண்டிருக்க, தான் மட்டும் ரகசியமாக ஒரு பெரும் யுத்தத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வது பற்றிய நியாயமான பெருமிதம் பத்மநாபனுக்கு இருந்தது. தொடக்கத்தில் சிரமப்பட்டான் என்றாலும், விடாமல் படிக்கப் படிக்க, புரியாத பாடங்களெல்லாம் புரிய ஆரம்பித்தன. தப்பித்தவறி ஒருவேளை ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிவிடுவோமோ என்று அவனுக்கே அவ்வப்போது சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

இனிப்பாக, சுவையாக இருந்தது அந்த நினைவு. அது மட்டும் சாத்தியமாகிவிட்டால் உலகில் வேறு எதுவுமே சிரமமில்லை. முதல் ரேங்க் மாணவனின் காதலும்கூட முதல்தரமானதாகவே கருதப்படும். அப்பாவைப் பற்றி இனி பிரச்னையில்லை. கௌதம புத்தருக்கு அடுத்தபடியாக பத்மநாபன் தான் என்கிற கருத்தில் மாற்றமே வராது அவருக்கு. வகுப்பிலும் விசேஷ கவனம் உண்டாகும். பன்னீர் பயப்படுவான். மகாலிங்க வாத்தியார் வியப்பில் வாய் பிளப்பார். நீயாடா குடுமி? நீயாடா குடுமி? நீயாடா குடுமி? என்று பார்க்கிற முகங்களெல்லாம் பரவசப்படும்.

அது முக்கியமில்லை. ஐ லவ்யூ குடுமி. வளர்மதி சொல்லவேண்டும். சொல்வாள். கண்டிப்பாகச் சொல்வாள். சொல்லாமல் எங்கே போய்விடுவாள்? அவள் தன்னை வெறுக்கவில்லை என்பதே அவள் விரும்புவதற்கு நிகரானதல்லவா?

இறுதித் தேர்வு தினத்துக்கு ஒருவாரம் முன்னதாக பத்மநாபனுக்கு ஓர் எண்ணம் எழுந்தது. ஒரு தாளை எடுத்து இரண்டு வரி எழுதினான். முழுப்பரீட்சையில் போட்டி உனக்கும் பன்னீருக்கும் அல்ல. எனக்கும் உனக்கும்தான். இப்படிக்கு உன் குடுமிநாதன்.

எழுதிவிட்டு ஒருமுறை சரிபார்த்தான். குடுமிநாதன் என்பதை ஸ்டிராங்காக இரட்டை அடைப்புக்குறிகளுக்குள் திணித்தான். மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். வெகுநேரம் யோசித்து, வளர்மதி வீட்டுக்குப் போய் அதை டோர் டெலிவரி செய்துவிட்டு வரலாம் என்று அவன் முடிவு செய்து கிளம்பியபோது மணி இரவு பத்தாகியிருந்தது.

அவன் இப்போது படிக்கிற பையன் என்பதால் மொட்டைமாடியில் அவனுக்காக அப்பா ஒரு மின்விளக்கு ஏற்பாடு செய்து தந்திருந்தார். குட்டியாக ஒரு மேசை நாற்காலியும் கூட. ஒரு அரைமணிநேரம் அவன் வெளியே போய்விட்டு வருவது இப்போது பெரிய பிரச்னையாகாது. படிக்கிற பையன். ஏதாவது யோசித்தபடி உலவப் போயிருப்பான்.

புறப்பட்டான். சர்ர்ர்ர்ர் என்று நூல் பிடித்தமாதிரி ஓடி, வளர்மதி வீட்டு வாசலில் சென்று நின்றான். மூச்சு விட்டுக்கொண்டான். கதவு மூடியிருந்தது. உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. பொதுவாக உப்பள முதலாளிகள் ஒன்பது மணிக்குமேல் விழித்திருப்பதில்லை. இதனாலேயே ராஜலட்சுமி திரையரங்கில் கூட மாலைக்காட்சியை ஐந்தே முக்காலுக்கு ஆரம்பித்து எட்டே காலுக்கெல்லாம் முடித்துவிடுவார்கள். அதன்பிறகு ஒருமணிநேரம் இடைவெளி விட்டு, விடலைகளுக்கான இரவுக் காட்சியை ஒன்பதரைக்கு சாவகாசமாகத் தொடங்குவார்கள்.

உணர்ச்சி வேகத்தில் புறப்பட்டு வந்தானே தவிர, என்ன செய்வது, எப்படி அவளைப் பார்ப்பது என்றெல்லாம் யோசித்திருக்கவில்லை. எனவே இப்போது யோசித்தான். வீட்டை ஒருமுறை சுற்றி வந்தான். திருடன் என்று யாராவது தன்னைப் பிடித்துவிடுவார்களோ என்றும் பயமாக இருந்தது. கட்டைல போற வீரபத்திரன் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டாம்.

என்ன செய்யலாம்?

வீட்டின் வலப்புறம் இரண்டாவதாக இருந்த ஒரு சன்னல் மட்டும் லேசாகத் திறந்திருப்பதுபோல் தெரிய, அருகே சென்று மெல்லத் தொட்டு இழுத்துப் பார்த்தான். திறந்துதான் இருந்தது. பயமாக இருந்தது. இருட்டில் உள்ளே இருப்பது தெரியக் கொஞ்சம் நேரம் பிடித்தது. பதைப்புடன் கண்ணை பழக்கிக்கொண்டு உள்ளே பார்க்க, சன்னலோரக் கட்டிலில் ஒரு நாய்க்குட்டி பொம்மை மட்டும் இருக்கக்கண்டான்.

சந்தேகமில்லை. இது வளர்மதியின் அறைதான். வகுப்பில் அவள் தன் நாய் பொம்மை குறித்துப் பல சமயம் சொல்லியிருக்கிறாள். அமெரிக்காவிலிருந்து அவளது மாமா வாங்கி வந்து கொடுத்த  புசுபுசு நாய் பொம்மை. அதைக் கட்டிக்கொண்டுதான் வளர்மதி தூங்குவாள்.

ஆனால் கட்டிலில் பொம்மை மட்டுமல்லவா இருக்கிறது? வளர்மதி எங்கே?

துடித்துப் போய்விட்டான். ஒரு முயற்சி வீணானது கூடப் பெரிதில்லை. வளர்மதி இந்த நேரத்தில் எங்கு போயிருப்பாள்? வேறு அறையில் தூங்கியிருப்பாளா? அமெரிக்க நாய்க்குட்டி பொம்மை இல்லாமல் அவளுக்குத் தூக்கம் வராதே?

மறுநாள் அவள் பள்ளிக்கு வராதது மேலும் குழப்பமளித்தது. அடுத்தநாளும். அடுத்த நாளும்.

வளர்மதிக்கு என்னவோ ஆகிவிட்டது. கடவுளே, என்ன அது?

அவ்வளவுதான். படிப்பைப் பையில்போட்டு எடுத்து வைத்தான். தன் மானசீகத்தில் அழ ஆரம்பித்தான்.

[தொடரும்]
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி