பல வருடங்களுக்கு முன்பு குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் உணவின் வரலாறை ஒரு தொடராக எழுதினேன். மனிதன் முதல் முதலில் தேனை ருசித்துப் பார்த்த காலம் முதல் நவீன மனிதன் பீட்ஸா, பர்க்கரிடம் சரணடைந்த காலம் வரையிலான கதை. உணவைப் பற்றிப் பேச இவ்வளவு இருக்கிறதா என்று கேட்டார்கள். அந்தத் தொடர் கண்ட வெற்றி, பிறகு அது ஒரு தொலைக்காட்சி ஆவணப் படத் தொடராக மறு பிறப்பெடுக்க வழி செய்தது. சென்ற வருடம் தி இந்துவின் ஆசிரியர்...
ருசியியல் – 42
இதனை எழுதத் தொடங்கும் இந்தக் கணத்தில் என் அறைக்கு வெளியே மிதமான வேகத்தில் மழை பெய்ய ஆரம்பிக்கிறது. அதன் சத்தம் கேட்டு, எழுதுவதைச் சற்று ஒத்திப் போட்டுவிட்டு எழுந்து வெளியே வருகிறேன். பால்கனியில் நின்று சிறிது நேரம் மழையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெளியே காடென வளர்ந்திருக்கும் செவ்வரளிச் செடிகளின் இலைகளின்மீது மழைத்துளிகள் மோதித் தெறிக்கின்றன. சட்டென்று ஓர் இடிச் சத்தம். மழை மேலும் வலுக்கிறது...
ருசியியல் – 41
உலகத் தரத்தில் பொரித்தெடுக்கப்பட்ட ஒரு கீரை வடையை நான் முதல் முதலில் ருசி பார்த்த அன்று சென்னையை ஒரு கடும் புயல் தாக்கியிருந்தது. நகரமே சுருக்கம் கண்டாற்போல் ஈரத்தில் ஊறி ஒடுங்கியிருந்தது. ஆங்காங்கே நிறைய மரங்கள் விழுந்திருந்தன. சாலைகளில் வெள்ள நீர் பெருகி, சந்து பொந்தெல்லாம் குளங்களாகியிருந்தன. பேருந்துகள் நின்றுவிட்டன. ரயில் போக்குவரத்து இல்லை என்று சொன்னார்கள். ஆட்டோக்களெல்லாம் எங்கே போயின...
ருசியியல் – 40
கொஞ்ச நாள் முன்னால் இந்தப் பக்கத்தில் மேற்கு வங்காளத்து மிஷ்டி தோய் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா? அந்த இனிப்புத் தயிரின் கொள்ளுத் தாத்தா எங்கிருந்து வந்தார் என்று சமீபத்தில் கண்டுபிடித்தேன். சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் பிரேசில் ஆதிவாசிகளிடையே தயிர் ஒரு பணக்கார உணவாக இருந்திருக்கிறது. நல்ல கெட்டித் தயிரில் தேனை ஊற்றி, உலர்ந்த பழங்களைப் போட்டு ஊறவைத்து எடுத்து வைத்துவிடுவார்கள்...
ருசியியல் – 39
காலம், கஷ்டகாலம். ஊர் உலகமெல்லாம் நிலவேம்புக் கஷாயத்தைக் குடித்துவிட்டு உவ்வே உவ்வே என்று கசப்பின் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. படாத பாடுபட்டு ஒரு தம்ளர் நிலவேம்பு குடித்துவிட்டேன்; எனக்கு இந்த ஜென்மத்தில் இனிமேல் டெங்கு வராதில்லையா? என்று அப்பாவித்தனமாகக் கேட்கிற பிரகஸ்பதிகளைப் பார்க்கிறேன். ஆறுதலாக அவர்களுக்கு என்னவாவது சொல்லலாம்தான். ஆனால், ‘நிலவேம்பின் கசப்பு உலகத்தர...
ருசியியல் – 38
சொன்னால் நம்ப வேண்டும். சமையல் துறையில் எனக்கு இருந்த ஒரே தேர்ச்சி, சாப்பிடுவது மட்டும்தான். தமிழக, கேரள, கர்நாடக, ஆந்திர பாணி சமையலானாலும் சரி, பெரிய வித்தியாசங்கள் இல்லாத வடக்கத்திய சமையலானாலும் சரி, அப்படிப் பொத்தாம்பொது ஆகாது; எங்களுக்கென்று தனித்துவம் உண்டு என்று காட்டிக்கொள்வதற்காகவே சகலமான காரப் பலகாரங்களிலும் கண்ணராவியாக நாலு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து வைக்கிற குஜராத்தி, ராஜஸ்தானி...
ருசியியல் – 37
ஒரு மனிதன் எதற்கெல்லாம் கவலைப்படுவான் என்பதற்குக் கணக்கே கிடையாது. ஒவ்வொருத்தனது பிரத்தியேகக் கவலையானது அடுத்தவருக்கு சமயத்தில் வினோதமாக இருக்கும். புரியாது. கிறுக்குப்பயல் என்று நினைத்துவிடுவார்கள். இதெல்லாம் கருதிக் கருதிக் கவலைப்படுகிற ஜென்மம் என்று சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிற கெட்ட பேருலகில் வசிக்கவே நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். என்ன செய்ய? வாழ்ந்துதான் தீரவேண்டும்.
ருசியியல் – 36
நீரும் நெருப்பும் இன்றிச் சமைப்பதில் வல்லவனாக அறியப்பட்ட நளன், தனது அடுத்தடுத்த பிறப்புகளில் என்னவாக இருந்தான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜான் லெனன் தனது உலகப் புகழ்பெற்ற ‘இமேஜின்’ ஆல்பத்தை வெளியிட்ட தினத்தன்று நிகழ்ந்த அவனது பிறப்பொன்றில் அவன் பாராகவனாக அறியப்படுவான் என்று சுவேத வராக கல்ப காலத் தொடக்கத்தில் செதுக்கப்பட்ட குகைக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது – என்றால் உடனே...
ருசியியல் – 35
திடீரென்று ஒருநாள் சமைத்துப் பார்த்தால் என்னவென்று தோன்றியது. ருசி இயலில் சாப்பிடுவது என்ற ஒன்று மட்டுமே அதுவரை நான் அறிந்தது. சமைப்பது என்றொரு முன் தயாரிப்பு உண்டு என்று தெரியும். ஆனால் அதெல்லாம் கலைஞனின் பணியல்ல என்று சாய்ஸில் விட்டிருந்தேன். எம்பெருமான் என்ன நினைத்தானோ, போன வருஷம் இதே செப்டெம்பரில் திருப்பூரில் நடைபெற்ற பேலியோ மாநாட்டுக்கு என்னை அழைத்துச் சென்று ஒரு நாள் பூரா தங்கவைத்தான்...
ருசியியல் – 34
என் சிறு வயதுகளில் நான் மிக அதிகம் வெறுத்த பண்டமாக வடைகறி ஏன் இருந்தது என்பதைச் சொல்வதற்கு முன்னால் ராமசாமி ஐயங்கார் எனக்குச் செய்த துரோகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்த ராமசாமி ஐயங்காரை உங்களுக்குத் தெரியாது. இருபதாம் நூற்றாண்டின் எண்பதாவது வருடங்கள் வரைக்கும் சென்னை சைதாப்பேட்டையில் இவர் ஒரு முக்கியப் புள்ளி. தொளதொளத்த ஜிப்பாவும் எப்போதும் தாளமிடும் விரல்களும் பட்டணம் பொடி வாசனையுமாகப்...
ருசியியல் – 33
என்ன பேசிக்கொண்டிருந்தோம்? ஆம், அந்தக் கையேந்தி விருந்து. ரசனை மிக்க அந்தத் தயாரிப்பாளர் அன்றைய விருந்தின் மெனுவை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டிருந்தார். எல்லா கையேந்தி பார்ட்டிகளிலும் எப்போதும் இடம் பிடிக்கும் ஐட்டங்களாக அல்லாமல் புது விதமாக அவர் யோசித்திருக்கிறார் என்பது புரிந்தது. அன்று அங்கே சூப் இல்லை. மாறாக இரண்டு இஞ்ச் உயரமுள்ள கண்ணாடிக் குப்பிகளில் பச்சை, ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறங்களில்...
ருசியியல் – 32
வசமாக மாட்டினீர்கள். இம்முறை நான் எந்த உணவைப் பற்றியும் எழுதப் போவதில்லை. கதறவைக்கும் ஒரு கண்ணீர்க் காவியத்துக்குத் தயாராக வேண்டியது உங்கள் ஊழ். எப்பப்பார் உணவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் உண்பதைப் பற்றி வேறு எப்போது பேசுவது? அதுவும் எம்பெருமான் யாருக்கு, எந்த இடத்தில், எம்மாதிரியான தங்க ஆப்பு தயாரித்து வைப்பான் என்பது தெரியாது. இந்த, கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பார்களே, அதைச்...
ருசியியல் – 31
இரு வாரங்களுக்கு முன்னர் என் தந்தை காலமாகிப் போனார். நல்ல மனிதர். எனக்கு நிறைய செய்தவர். அதில் தலையாயது, என்னை முழுச் சுதந்தரத்துடன் வளரவிட்டது. யோசித்துப் பார்த்தால் நான் செய்த எதையுமே அவர் மறுத்ததோ நிராகரித்ததோ இல்லை. இதைச் செய்யாதே என்று சொன்னதும் இல்லை. எத்தனை பேருக்கு அப்படியொரு அப்பா கிடைப்பார் என்று தெரியவில்லை. விடுங்கள், விஷயத்துக்கு வருகிறேன். அப்பா இறந்த அதிர்ச்சியை உள்வாங்கி ஜீரணித்து...
ருசியியல் – 30
கால் கிலோ அவரைக் காயை எடுத்துக்கொள்ளவும். நாரை உரித்துவிட்டு அப்படியே மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி போட்டுக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டுக் காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் அவரை மாவை உள்ளங்கையில் வைத்து தட்டித்தட்டி அதில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சுவையான அவரை வடை தயார். மேற்படி...
ருசியியல் – 29
முன்னொரு காலத்தில் நிரம்ப சினிமாக் கிறுக்குப் பிடித்து அலைந்துகொண்டிருந்தேன். தேசத்தில் எங்கு திரைப்பட விழா நடந்தாலும் போய்விடுவேன். பொழுது விடிந்ததும் கர்ம சிரத்தையாகக் குளித்து முழுகி, வயிற்றுக்கு என்னவாவது போட்டுக்கொண்டு தியேட்டருக்குள் போய் உட்கார்ந்துவிட்டால், தொடர்ச்சியாக நாலைந்து படங்கள் பார்த்து முடித்த பிறகுதான் சுய உணர்வு மீளும். அதற்குள் மாலை அல்லது இரவாகியிருக்கும். பசிக்க...
ருசியியல் – 28
திடீரென்று ஒரு கிறுக்குத்தனம். தொடர்ச்சியாக இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒன்றும் உயிர் போய்விடாது என்பது தெரியும். ஆனால் வயிற்றில் பசி இருந்தால் காரியம் சிதறும். வீரியம் குறையும். இது வேண்டாத வம்பு என்று உள்ளுணர்வு சொன்னது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். வெறும் இரண்டு நாள்! ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன? என்னதான் காரியம் சிதறி, கோட்டையே தரைமட்டமானாலும்...
ருசியியல் – 27
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கும் குழந்தை மனம் கொண்ட என்னைப் போன்ற வளர்ந்த குழந்தைகளுக்கு வாழைக்காயும் காய்கறியினத்தில் ரொம்பப் பிடிக்கும். ஆண்டவன் நான் பிறக்கும்போதே என் பிராணனை வாழைக்காய்க்குள் கொண்டு போய் வைத்திருந்தான். இப்போது யோசித்துப் பார்த்தாலும் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒரு நாள் சாப்பாட்டில் வாழைக்காய் இருக்கிறது என்றால் அன்றைய தினமே எனக்குத் திருவிழா நாள் போலாகிவிடும். தனியே...
ருசியியல் – 26
ராஜமாணிக்கம் முதலியாரின் பேத்தி ராஜாத்தி வயசுக்கு வந்தபோது வீதி அடைத்துப் பந்தல் போட்டு மயில் ஜோடித்தார்கள். அன்றைக்கு முதலியார் வீட்டுக்குப் போயிருந்த அத்தனை பேருக்கும் பிளாஸ்டிக் தம்ளரில் பாதாம் கீர் கொடுத்தார்கள். பாதாம் கீர் என்ற பானத்தை வாழ்வில் முதல் முதலில் நான் அருந்திய தருணமாக அதுவே நினைவில் இருக்கிறது. நாக்கில் தட்டுப்பட்ட மெல்லிய நறநறப்பும் அடித்தொண்டை வரை இனித்த சர்க்கரையும். அது...
ருசியியல் – 25
சமீபத்தில் என் நண்பர் சவடன் பாலசுந்தரன், எலுமிச்சை – கொத்துமல்லி சூப் என்றொரு நூதன ருசிமிகு திரவத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அருந்தி முடித்ததுமே அடுத்த கப் ஆர்டர் செய்யலாமா என்று யோசிக்க வைத்த தரம். எளிய க்ரியேடிவிடிதான். பிடி கொத்துமல்லியை அலசிப் போட்டுக் கொதிக்கவிட வேண்டியது. நாலு துண்டு வெள்ளரி, நாலு துண்டு கேரட் தவிர வேறு அலங்காரங்கள் ஏதும் கிடையாது. இருக்கவே இருக்கிறது மிளகு சீரக...
ருசியியல் – 24
போன வாரம் வெண்ணெய்க் காப்பி பற்றி நாலு வரி எழுதினாலும் எழுதினேன், காப்பி ரசிகர்கள் வீறு கொண்டெழுந்து விட்டார்கள். வரலாறு காணாத அளவுக்கு மின்னஞ்சல் விசாரணைகள். காப்பி எப்படி உணவாகும்? வெண்ணெய் சரி; அதற்குமேல் தேங்காய் எண்ணெயை வேறு ஊற்றினால் காப்பி கந்தரகோலமாகிவிடாதா? சர்க்கரை போடாமல் அதை எப்படிக் குடிப்பது? வயிற்றைப் புரட்டியெடுத்துவிடாதா? இதைக் காலையில்தான் குடிக்க வேண்டும் என்று வேறு...


