உண்ணாவிரதம்

உண்ணாவிரதம் – சில விளக்கங்கள்

அன்புள்ள சதீஷ் குமார்,

உங்களுடைய மறுப்புக்குச் சற்று விரிவாகவே பதில் சொல்ல விரும்புகிறேன். அநியாயத்துக்கு நீங்கள் காந்தி, வள்ளலார், ரிஷிகளையெல்லாம் உதவிக்கு அழைத்துவிட்டதால் எனக்கு வேறு வழியில்லாமல் போகிறது. துரதிருஷ்டவசமாக காந்தியையும் வள்ளலாரையும் ஓரளவு படித்துத் தொலைத்தவனானதால் இச்சங்கடம்.

அதற்குமுன் ஒரு சங்கதி. ஜீயர் சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவிக்கவில்லை என்ற தொனியில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அப்படியா? தமிழில் வெளிவரும் அனைத்து நாளிதழ்களும் ‘ஜீயர் சாகும்வரை உண்ணாவிரதம்’ என்று கொட்டை எழுத்தில் வெளியிட்டதெல்லாம் பொய்யா? இதை ஜீயரோ, அவரது தொண்டர்களோ கடிதம் எழுதி மறுத்திருக்கிறார்களா? அவர் அப்படி அறிவிக்கவில்லை என்றால் இம்மறுப்பை அவசியம் அனுப்பியிருக்கவேண்டும்; ஓரிதழாவது அதைப் பிரசுரித்திருக்க வேண்டும். நடந்ததா?

இரண்டாவது சங்கதி. நான் உடல் இளைக்க வழி முறைகளைக் கூறவில்லை. உண்ணாவிரதம் இருக்க மட்டும்தான் நான் சொன்ன வழி உதவும். ஒரு வாரம் உண்ணாதிருந்தால் அதிகபட்சம் 3-5 கிலோ எடை குறையும் என்பது உண்மைதான். ஆனால் அது நிரந்தரமல்ல. மீண்டும் உண்ணத் தொடங்கிய இரண்டாவது நாளில் ஏற ஆரம்பித்து மிக விரைவில் எங்கிருந்து குறைந்ததோ அந்த எடைக்கு வந்து நின்றுவிடும். இது இயற்கை, அறிவியல். உடல் இளைப்பதற்கான விதம் வேறு. தேவைப்பட்டால் ஒரு முழுமையான ரத்தப் பரிசோதனை செய்து ரிப்போர்ட் அனுப்பினால் அதற்கான டயட்டை என்னால் தர இயலும். நீங்கள் சைவ உணவாளர் என்பதால் உங்களால் அதிகபட்சம் முப்பது கிலோ வரை நான் தரும் டயட்டின் மூலம் எடை குறைக்க முடியும்.

இனி முக்கிய விஷயத்துக்கு வருகிறேன்.

// உண்ணாவிரதம் இருக்க உடல் தகுதி வேண்டும் என சொல்வதும், அதற்கு காந்தி தன் உடலை தயார் செய்து வைத்திருந்தார் என்ற கருத்து அபத்தமானதாகவே தோன்றுகிறது. இது உண்ணாவிரதம் காந்தியின் திட்டமிட்ட அரசியல் தந்திரம் என்பது போல் உள்ளது //

இது நீங்கள் சொல்லியிருப்பது. ஆனால் காந்தி அளவுக்கு உணவைக் குறித்தும் அதன் தன்மை குறித்தும் உடல் ஆரோக்கியம் தொடங்கி ஆத்ம தரிசனம் வரை தீர்மானிக்கும் சங்கதி அதுவே என்று அறுதியிட்டுச் சொல்பவர் இன்னொருவர் கிடையாது.

‘மனிதன் எதைச் சாப்பிடுகிறானோ, அதுவாகவே ஆகிறான் என்று சமஸ்கிருத நூல் ஒன்று கூறுகிறது. எவ்வித வரையறையுமின்றிப் பெருந்தீனி தின்பவன் தன்னுடைய மிருக உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருக்கிறான். சுவையைக் கட்டுப்படுத்த முடியாதவனால் மற்றப் புலனுணர்ச்சிகளை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.’ [ஆரோக்கிய வழி, இந்தியன் ஒப்பீனியன், 1905]

இப்படி ஆரம்பிக்கும் காந்தி, ‘உடம்பு சம்பந்தப்பட்ட மட்டில் எது உண்மையோ அதுவே ஆத்மிகமாகவும் உண்மை’ என்று சொல்லிவிட்டு, ‘உடம்பைப் பூரணத் தகுதியோடு வைத்திருக்க வேண்டுமானால் சைவ உணவில் பாலையும் பாலில் இருந்து தயாராகும் தயிர், வெண்ணெய், நெய் முதலியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் எனக்கு அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கிறது’ என்று எழுதுகிறார். இப்படி எழுதுவதற்குமுன் அவர் ஒரு விரதம் தொடங்கி சில நாள்கள் ஓடியிருக்கின்றன. விரதத்தைத் தொடரவே முடியாத அளவுக்கு உடல் சோர்வும் உளச் சோர்வும் உண்டாகியிருக்கிறது. சீதபேதி வந்துவிட்டதாக எழுதுகிறார். ஆயினும் எந்த மருந்தையும் உட்கொள்ளாமல் விரதத்தைத் தொடரப் பார்த்திருக்கிறார். அந்த முயற்சியில் அவர் கண்ட உடல் சார்ந்த பெரும் நெருக்கடியே சைவ உணவில் இருப்பவர்களுக்குப் பால் பொருள்கள் அவசியம் என்பதை ஏற்கச் செய்தது.

இது சார்ந்த தொடர் ஆராய்ச்சிகள் அவரைப் பின்வரும் முடிவுக்கு வரவழைத்திருக்கின்றன: ‘ஓரளவு கொழுப்பும் மனித உடலுக்கு அவசியமாகும். நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொள்வதன்மூலம் கொழுப்பு கிடைக்கும். நெய் கிடைக்கிறதென்றால் எண்ணெய் தேவையில்லை. அது சுத்தமான நெய்யைப் போல் அத்தனை போஷணை அளிப்பதில்லை.’ [ஆரோக்கிய வாழ்வு, பக்கம் 40]

தனது அரசியல் நோக்கங்களுக்கு உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியவர் காந்தி. இதைத் தந்திரம் என்று வருணிப்பது உங்கள் விருப்பம். ஆனால் உண்ணாவிரதம் அவருக்குப் பெரும் பலன்களை அளித்தது. ஆனால் ஒருமுறைகூட அவர் ஆரம்பித்து ஒரே நாளில் முடியாமல் போய்க் கைவிட்டதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் ஏன் உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்தார் என்றால், அதற்கான ஆயத்தங்களை அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் தொட்டு செய்து வந்ததே காரணம். தன்னால் முடிந்த ஒன்றைத்தான் காந்தி இறுதிவரை செய்தார். தன் உடலைப் பரிசோதனைக் கூடமாக எண்ணி, அதில் செய்து பார்த்த பரீட்சைகளையே பொதுவில் வைத்தார். பின் வரும் பட்டியலைப் படியுங்கள். ஒரு நாளில் சாப்பிடவேண்டியவை என்று காந்தி தரும் பட்டியல். இதைத்தான் அவர் ஆண்டுக்கணக்கில் உண்டு வந்தார். இதனால்தான் அவரால் மிக எளிதில் உண்ணாவிரதங்களை மேற்கொள்ள முடிந்தது.

தினசரி சாப்பிடவேண்டிய உணவுகளின் அளவு:

பசும்பால் – 2 பவுண்டு

தானியங்கள் – 6 அவுன்சு

கீரைகள் – 3 அவுன்சு

காய்கறிகள் – 5 அவுன்சு

வேகவைக்காத காய்கறிகள், கீரைகள் – 1 அவுன்சு

நெய் – 11/2 அவுன்சு

வெண்ணெய் – 2 அவுன்சு

வெல்லம் அல்லது சர்க்கரை – 11/2 அவுன்சு [ஆரோக்கிய வாழ்வு, பக்கம் 43]

புரிகிறதா? விரதம் இருப்பதன் முன்னர் பதினைந்து தினங்களுக்குக் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறை என்று நான் எழுதியவற்றை இப்போது இதனோடு பொருத்திப் பாருங்கள். ‘உடம்பைக் காப்பாற்றுவதற்கு மருந்து சாப்பிடுவது போல உணவு உட்கொள்வதையும் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். ருசிக்காக ஒருபோதும் உண்ணாதீர்’ என்று காந்தி எழுதுகிறார். இந்த வழக்கம் சாகும்வரை இருந்ததால்தான் அவரால் சர்வ சாதாரணமாக உண்ணாவிரதங்களில் வெற்றி பெற முடிந்தது. இதையெல்லாம் கடைப்பிடிக்காமல் திடீரென்று முதல் நாள் ராத்திரி முடிவு செய்து மறுநாள் அமர்ந்தால் சிக்கல்தான். அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்.

அப்புறம் வள்ளலார். அவர் சொன்ன ‘பசித்திரு’வுக்கு நீங்கள் புரிந்துகொண்ட அர்த்தம் கிடையாது. அதை விளக்கப் போனால் இக்கட்டுரை வேறு வடிவம் கொண்டுவிடும். வள்ளலார் யாரையும் உண்ணாவிரதம் இருக்கச் சொன்னதில்லை. அவரும் இருந்ததில்லை. ஆனால் அவரது தியானம், தவம், யோக முயற்சிகளுக்கு அவரது உணவுமுறை பேருதவி புரிந்ததை அவரே எழுதியிருக்கிறார். அருட்பா உரைநடைப் பகுதியில் நித்ய கரும விதி என்ற பகுதியைப் படித்துப் பாருங்கள். உணவைக் குறித்து அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதும் அவர் எப்படி உண்டிருக்கிறார் என்பதும் விளங்கும்.

‘பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரங் கொடுக்கும்போது, மிகுந்த ஆலசியமுமாகாது மிகுந்த தீவிரமுமாகாது…’

‘கிழங்கு வகைகள் உண்ணாதிருக்க வேண்டும். கருணைக்கிழங்கு மட்டும் கொள்ளுதல் கூடும். பழ வகைகள் உண்ணாதிருத்தல் வேண்டும். அவற்றில் பேயன் ரஸ்தாளி வாழைப்பழம் சிறிது கொள்ளுதல் கூடும். பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். கடுகு அவசியமில்லை. உப்பு குறைவாகவே சேர்த்தல் வேண்டும்…’

‘வெங்காயம் வெள்ளைப் பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்திரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கலியாணப் பூசுணைக்காய், தூளங்காய் இவைகளைப் பதார்த்தஞ் செய்தல் கூடும். இவற்றினுள் முருங்கை, கத்திரி தூதுளை, வாழைக்காய் இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம். மற்றவை ஏகதேசத்தில் செய்துகொள்ளலாம். வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்களக் கொள்ளப்படாது. சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம்….’

ஆழ்ந்து கவனித்தால் வள்ளலார் சொல்வதும் காந்தி சொன்னவற்றின் முன்னோடிக் கருத்துகளே என்பது புரியும். காய்கறியில் இருந்து வரும் கார்போஹைடிரேட் சம்மதம்; ஆனால் இட்லி தோசை புளியோதரை வகையறாக்கள் தரும் கார்ப் கூடாது என்பதைத்தான் அவர் சொல்கிறார். ஏனெனில் தானியங்களின் மூலம் கிடைக்கும் மாவுச் சத்தானது பசியுணர்வை வளர்க்குமே தவிர அடக்காது. இது மிக எளிய அறிவியல்.

ஆனால் காந்தி சிறிதளவு கோதுமை தவறல்ல என்கிறார். கடைசிவரை அவருக்கு இக்கருத்து இருந்திருக்கிறது. ஆனால் அரிசியை மூன்றாம்பட்சமாகத்தான் கணிக்கிறார். சந்தேகமின்றி “தித்திப்புப் பலகாரங்களை அடியோடு விட்டுவிட வேண்டும்” என்று சொல்லுகிறார் [ஹரிஜன், 25.1.1942]

விரதம் சம்பந்தப்பட்டவரை அதை அவ்வப்போது பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். திடீர் விரதங்கள் உதவாது.

‘சைவ உணவினர் தானியங்களையும் மொச்சைப் பருப்புகளையும் பாலேட்டுக் கட்டிகளையும் விரும்பியபடியெல்லாம் தின்று கொண்டிருக்கலாம் என்று எண்ணிவிட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் தேகாரோக்கியத்துடன் இருப்பது சாத்தியமில்லை…. மனிதன் நிதானமாகச் சாப்பிட வேண்டும், அப்போதைக்கப்போது பட்டினியும் இருக்க வேண்டும்….’ [ஹரிஜன், 20.2.1939]

இவை ஒருபுறமிருக்க, சன்னியாச தருமத்தை போதிக்கும் ‘யதி தர்ம சமுச்சயம்’ என்னும் இலக்கண நூல் [ராமாநுஜரின் பூர்வாசிரம ஆசாரியரான யாதவ பிரகாசர் இயற்றியது. துறவு இலக்கணம் பற்றி பல்வேறு ரிஷிகள் கூறிய கருத்துகளின் தொகுப்பும் நூலாசிரியரின் கருத்தும் அடங்கியது. State Univarsity of New York வெளியிட்டுள்ள ஆங்கில மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.] ஓர் அத்தியாயம் முழுவதுமே துறவிகள் உட்கொள்ள வேண்டிய உணவு – உணவு முறை குறித்துச் சொல்லித் தருகிறது. அதில் உண்ணத் தகுந்தவையாகச் சொல்லப்படுவதும் பால், நெய், பழங்கள், காய்கறிகள், சிறிதளவு கிழங்கும் மட்டுமே. பிட்சை எடுத்து வரும் குறைந்தபட்ச சாதத்தை உண்ண மட்டும் அனுமதி உண்டு. போதாயனர், கபிலர், யமன், பரத்வாஜர், ப்ரஹஸ்பதி, விஷ்ணு என யார் யார் இது குறித்து என்னென்ன சொல்லியிருக்கிறார்களோ, எல்லாவற்றையும் பட்டியலிடுகிறார் யாதவ பிரகாசர்.

இறுதியாக ஒன்று கேட்டீர்கள்:

//போராட எத்தனையோ வழி என்று எதை சொல்கிறீர்கள்// இதை நீங்கள் தெரியாமல் கேட்கவில்லை. வம்புக்குத்தான் கேட்கிறீர்கள். எனவே நானும் அதே விதத்தில் பதில் சொல்லக் கடமைப்பட்டுவிடுகிறேன்.

Eating almsfood is better than fasting – இதை நான் சொல்லவில்லை. யதி தரும சமுச்சயத்தில் வசிஷ்டர் சொல்லுவதாக யாதவ பிரகாசர் குறிப்பிடுகிறார் [யதி, 7:39].

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி