விழியற்றவன் வம்சம்

இது கதைகளை உண்டு வளர்ந்த சமூகம். எப்படி யோசித்துப் பார்த்தாலும் நம்மால் கதைகளற்ற ஒரு வாழ்க்கையை வாழவே முடியாது என்றுதான் தோன்றுகிறது. போதனைக் கதைகள். நீதிக் கதைகள். விசித்திரக் கதைகள். மாயாஜாலக் கதைகள். தேவதைக் கதைகள். தெய்வக் கதைகள். பேய்க் கதைகள். பாட்டி சுட்ட வடைகளுக்குள் புதைத்து வைக்கப்பட்ட ரகசியமாக ஆயிரமாயிரம் கதைகள் காக்கைகளால் கவர்ந்து செல்லப்பட்டு பாரத மண்ணெங்கும் உதிர்க்கப்பட்டன. காலம் அவற்றைக் கையில் ஏந்தித் தலைமுறை தோறும் மீண்டும் மீண்டும் சுட்டுக் கொடுக்கிறது. பாட்டியின் வடைகளனைத்தும் பழங்கதைகளின் ருசி அடங்கியது. கொஞ்சம் குனிந்து மண்ணில் மூக்கைத் தேய்த்து முகர்ந்து பாருங்கள். உண்ட வடைகளில் அந்த மணம் இருப்பதை உணர முடியும்.

வளமான கதை மரபு என்பது துணைக் கண்டத்தின் ஆதார பலமானதன் முக்கியக் காரணம், பாரதம் இங்கு எழுதப்பட்டது என்பது. அது ஆதிக் கதை. மக்களின் கதை இல்லைதான். மன்னர் குடும்பத்துக் கதையே என்றாலும் மனிதர்களை மனிதர்களுக்குப் புரியவைக்க மேற்கொள்ளப்பட்ட மகத்தான பெருங்கதையாடல் உத்தி. மன்னர் குலத்தவர்களே ஆனாலும் மனித குலத்தைச் சேர்ந்தவர்களல்லவா? பலங்களும் பலவீனங்களும் மிக்க மனிதர்கள். வீரமும் குரோதமும் காமமும் அன்பும் கருணையும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் முட்டி மோதும் வாழ்வை ஆசை தீர வாழ்ந்து தீர்த்த மனிதர்கள்.

இப்படி நடந்தது என்று பௌராணிகர்கள் சொல்லட்டும். எனக்கென்னவோ, இப்படித்தான் இந்த உலகம் இயங்கும் என்று காலக் கணிப்புக்கு அப்பாற்பட்ட காலத்தில் உட்கார்ந்து யோசித்த ஒரு பெரும் தீர்க்கதரிசியின் அருட்கொடையாகவே பாரதம் தென்படுகிறது. தலைமுறை தலைமுறையாக நமக்குச் சொல்லப்பட்டு வரும் அத்தனைக் கதைகளுக்குமான வித்து அதில்தான் ஒளிந்திருக்கிறது. அது வாழ்வில் இருந்து எடுக்கப்பட்ட கதையல்ல. வாழ்வு இவ்வாறாகத்தான் இருக்கும் என்று சுட்டிக்காட்டிய கதை. இன்றுவரை அவ்வாறாக மட்டுமே இருந்து வருவதும்கூட.

நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், மகாபாரதத்தின் மிக முக்கியமான சில கதாபாத்திரங்களின் வாழ்வைத் தொட்டுக்காட்டி, அதன் சமகாலப் பொருத்தங்களை சுவாரசியமாக சிந்தித்துப் பார்க்க வைக்கிறது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்மால் இந்திரனைப் புரிந்துகொள்ள முடியாது. எல்லாக் கதைகளிலும் ஒரு பொறுக்கியாகவே சித்திரிக்கப்படுகிறவன் எப்படி தேவர்களின் தலைவனாகவே எப்போதும் இருந்தான் என்ற கேள்விக்கு விடையே கிடையாது. இந்திரன் என்பவன் ஒரு நபரல்ல. அது ஒரு பதவி. பலபேர் வந்து போன / போகும் பதவி. ஆனாலும் ஒரு நல்ல இந்திரன் கதையையாவது கேட்டிருக்கிறீர்களா? ஏன் முடியவில்லை?

விடை கண்டிப்பாக வேண்டும் என்றால் இந்திரனை மறந்துவிட்டு இக்கால அரசியல்வாதிகளைச் சிந்தித்தாக வேண்டும். ஓட்டுப் போட்டு நாம் தேர்ந்தெடுக்கிற உத்தமர்கள். தேர்ந்தெடுத்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கு ஏன் திட்டிக்கொண்டே இருக்கிறோம் என்று என்றுமே நம்மை நாம் கேட்டுக்கொண்டதில்லை.

உத்தமர்களும் அறிவுஜீவிகளும்கூட அப்படித்தான். ஒட்டுமொத்த மகாபாரதக் கதைகளிலேயே மிகப் பெரிய ஞானவானாகச் சித்திரிக்கப்பட்டவர் விதுரன். திருதராஷ்டிரன் அவையில் மதிப்புக்குரிய மதியூகி. தர்ம சாஸ்திரம் அறிந்தவர். மாண்டவ்ய மகரிஷியின் சாபத்தால் தர்ம தேவனேதான் விதுரனாகப் பிறந்தார் என்றொரு கதையை ரூமி இந்நூலின் ஓர் அத்தியாயத்தில் விவரிக்கிறார். திருதராஷ்டிரனுக்கு விதுரனின் மேதைமை தெரியாதா? அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்பது புரியாதா? சூதாட்டம் வேண்டாம் என்று மன்னனின் காலில் விழுந்து தடுக்கப் பார்த்தார் விதுரன். கேட்கவில்லையே? இது நடந்தால் உன் வம்சம் அழியும் என்று சுட்டிக்காட்டிய பிறகும் நடக்கத்தான் செய்தது. வம்சம் அழியத்தான் செய்தது.

அப்போதாவது திருதராஷ்டிரன் விதுரன் சொன்னதை எண்ணிப் பார்த்தானா என்பதை இப்போது நாம் எண்ணிப் பார்க்கலாம்! திருதராஷ்டிரன் விழியற்றவன் என்பதுதான் பாரதத்தில் உள்ள மொத்தக் குறியீடுகளுக்கும் ஆதாரப்புள்ளி. கண்ணே இல்லாதவனும் கண்ணைக் கட்டிக்கொண்ட அவன் மனைவியும். யாரைச் சொல்லுவது இது? யாரைச் சுட்டுகிறது இது? ஆயிரமாயிரம் இந்திரன்கள். யுகயுகமாக ஆண்டு தீர்த்து அழிந்து போகிற வம்சத்தவர்கள். எந்தப் பிறப்பிலும் அவர்கள் கண்ணற்றுத்தான் இருக்கிறார்கள். எல்லாப் பிறப்புகளிலும் விதுரன்கள் நகர்த்தி வைக்கவே படுகிறார்கள்.

ரூமியின் மிகத் தேர்ந்த வாசிப்பும் ஆய்வு மனமும் இக்கதாபாத்திரங்களின் ஆன்மாவைத் தொட்டுத் துலக்கிவிடுகிறது. ஒரு நல்ல கதை என்பது அதன் இறுதிச் சொல்லுக்குப் பிறகு எழுதப்படும். ரூமி இந்நூலில் சொல்லாமல் சுட்டிக்காட்டும் தரும நெறிகளே இந்தக் கதைகளின் ஆதார சக்தியாக இருப்பவை.

கதைகளின் ஆதார சக்தி ஏன் வாழ்வின் ஆதார சுருதியாக விளங்க மறுக்கிறது? ஒழுக்கமல்ல; ஒழுக்க மீறலே மனித வாழ்வின் அடிப்படைப் பண்பு. மன்னர்களோ, மக்களோ, யாரும் இதன் வசத்தில் இருந்து தப்பியதாக சரித்திரமில்லை. அந்த மீறலைத் திரும்பிப் பார்க்க முடிகிற இடத்தில் யோசிக்க ஆரம்பிக்கிறோம். உணரத் தொடங்குகிற கணத்தில் ஞானம் போலொன்று சித்திக்கிறது. திருத்திக்கொள்ள முடியுமானால் இதிகாசத்தின் ஓரங்கமாக நமது வாழ்வைக் கொண்டுபோய் சொருகி வைக்க முடியும்.

வாழ்க்கை ஒரு பெருங்கடல். அலையடித்து நுரைத்துப் பொங்கும் அற்புத அனுபவம். இதில் நாம் இருக்கிறோமா வாழ்கிறோமா என்பதுதான் இயற்கை நமக்கு விடுக்கும் ஆகப்பெரிய சவால். இருப்புக்கும் வாழ்வுக்குமான இடைவெளியை இட்டு நிரப்பும் காரணிகளை இடையறாது சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறது மகாபாரதம். தருமம் என்கிறோம். அறம் என்கிறோம். ஒழுக்கம் என்கிறோம். வெறும் சொற்கள்தாம். ஆனால் அந்தச் சொற்கள் உயிர் பெற்று எழுந்து நடமாடிய களம் மகத்தானது.

ரூமியின் இந்நூல் ஒரு கட்டத்துக்கு மேல் மகாபாரதக் கதாபாத்திரங்களைப் பேசுவதை ரகசியமாக நிறுத்திவிடுகிறது. இது ரூமியைப் பற்றியும் என்னைப் பற்றியும் உங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிடுகிறது. பாரதத்தின் நூற்றுக்கணக்கான பாத்திரங்களுள் நம் வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்தது யார் என்று தேடிப் போகிற வேட்கையை இது வாசகனுக்கு அளிக்கிறது. இது காலத்தில் பின்னால் செல்வதல்ல. நமக்கும் பின்னால் வரப்போகிற காலத்துக்குக் கதவு திறந்து வைக்கிற பேரனுபவம்.

லைலாவைவிடப் பேரழகிகள் எத்தனையோ பேர் இருக்கும்போது இவளை ஏன் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள் என்று மஜ்னுவிடம் யாரோ கேட்கிற ஒரு கட்டத்தை இந்நூலில் ஓரிடத்தில் உதாரணமாகச் சுட்டுகிறார் ரூமி. மஜ்னு சொல்லும் பதில்: ‘நீங்கள் என் கண்ணால் லைலாவைப் பார்த்திருக்கிறீர்களா?’

நீங்கள் ரூமியின் கண்ணைக் கொண்டு பாரதத்தை மீண்டுமொரு முறை அணுகுங்கள். இன்னும் பல தரிசனங்கள் நிச்சயம் அகப்படும்.

மகிழ்ச்சி கொள்ளத்தக்க ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தந்ததற்கு ரூமிக்கு என் மனமார்ந்த வந்தனங்கள்.

 

[நாகூர் ரூமியின் மகாபாரதக் கதைகள் நூலுக்கு எழுதிய முன்னுரை]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter