திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், ஃபுட்டிங் கேக், தஞ்சாவூர் அசோகா, சந்திரகலா, கோயில்பட்டி கடலைமிட்டாய் வரிசையில் என் நெஞ்சையள்ளும் இனிப்புப் பண்டங்களுள் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு முக்கிய இடமுண்டு. மற்றவற்றையெல்லாம் எம்பெருமான் எப்படியாவது ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறையாவது யாரிடமேனும் எனக்காகக் கொடுத்து அனுப்பிவிடுவான். இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் லேசில் கிடைக்காது. இந்தக் குறையைத் தீர்ப்பதற்காக இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு வெளியே அணிவகுத்திருக்கும் கடைகளுள் ஒன்றில் ஒரிஜினல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கிடைக்கிறது என்பதை இன்று கண்டு பரவசமானேன். [பாக்கெட் 10 ரூபாய்] உண்மையில், இன்றுதான் கண்காட்சி வளாகத்துக்கு வெளியே கொஞ்சம் சுற்றிப் பார்க்க முடிந்தது.
வழக்கமான இனிப்பு, உப்பு வேர்க்கடலை பாக்கெட்டுகள், பாப்கார்ன், பழரசங்களுடன் குல்பியும் இம்முறை கிடைக்கிறது. நன்றாயிருக்கிறதா என்று அடுத்தவாரம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டுத்தான் சொல்லமுடியும். பத்திருபது நாளாக ஓயாத இருமல் தொல்லை. குல்பி சாப்பிட்டேன் என்று தெரிந்தால் வீட்டில் விபரீதம் விளையும். எனவே நல்ல பிள்ளையாக ஒரே ஒரு பால்கோவாவும் ஒரே ஒரு வேர்க்கடலை பாக்கெட்டும் மட்டும் சாப்பிட்டேன். இன்னொரு பால்கோவா வாங்கச் சொல்லி பிரசன்னா ஆனமட்டும் டெம்ப்ட் பண்ணிப் பார்த்தார். சில சமயம் இப்படித்தான். திடீரென்று் ஏனோ மனக்கட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது.
இன்று கண்காட்சியில் அதிகம் சுற்றவில்லை. கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்குமேல் கிழக்கு அரங்கிலேயே இருந்தேன். அதிலும் கணிசமான பொழுதை ப்ராடிஜி பிரிவில் கழித்தேன். கிழக்குக்கு உள்ளே நுழைபவர்களில் தொண்ணூற்றொன்பதே முக்கால் சதவீதம் வாசகர்கள் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே போவதில்லை. குறைந்தது ஒன்றுக்கு மேல் இன்னொன்று. அதிகபட்சம் அளவே சொல்ல முடியாது. ப்ராடிஜி என்றால் பத்து, இருபதாகத்தான் எடுக்கிறார்கள். இன்று ஒரு வாசகர் மொபைலில் ஒரு பட்டியல் போட்டு எடுத்துக்கொண்டு வந்து முப்பது நாற்பது புத்தகங்களை ஒரு சில நிமிடங்களில் எடுத்துப் போட்டுக்கொண்டு கார்டைத் தேய்த்துவிட்டுப் போய்க்கொண்டே இருந்தார். பிரசன்னா மிகவும் குஷியாகிவிட்டார். இந்த மாதிரி ரீடர்ஸ் அதிகம் வேண்டாம் சார். டெய்லி ஒரு நூறு பேர் வந்தா போதும் என்றார். எத்தனை சிறிய ஆசை!
இன்று ஒரு விஷயம் கவனிக்க முடிந்தது. புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்குக்கு முதல் இரண்டு மூன்று நாள்களில் வருபவர்கள் அத்தனை பேரும் ஏற்கெனவே வந்து பழகிய வாசகர்கள் மட்டுமே. அவர்கள் புதிய புத்தகம் என்ன வந்திருக்கிறது என்று மட்டுமே பெரும்பாலும் பார்க்கிறார்கள். வேண்டியது தென்பட்டால் உடனே எடுத்துக்கொண்டு நகர்ந்துவிடுகிறார்கள். சும்மா சுற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதே மாதிரி இன்னும் ஏழெட்டு இடங்களையும் அங்கே வாங்கவேண்டிய புதியவற்றையும் குறித்து வந்திருப்பார்கள்.
புதிய வாசகர்கள் சனி, ஞாயிறுகளைத்தான் அநேகமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாளைக்கு நிச்சயம் கூட்டம் மிகும். பிரசன்னாவால் எழுந்து வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சாப்பிட முடியாது. நான் மட்டும்தான் சாப்பிடப் போகிறேன்.
நான் பார்த்தவரை கிழக்கில் இன்று அகம் புறம் அந்தப்புரம் நிறைய விற்பனையானதுபோல் தெரிந்தது. மாயவலை நிறைய போனது. இந்தியப் பிரிவினை, நிலமெல்லாம் ரத்தம் என்று சென்ற வருடங்களின் புத்தகங்கள் இன்றிலிருந்துதான் தமது ஒரிஜினல் வேகத்தில் விற்பனையாகத் தொடங்கியிருக்கின்றன என்று நினைக்கிறேன். ஆகா, யோகா என்ற நலம் புத்தகத்தை ஒரு வாசகர் தடவித் தடவி ரசித்ததைக் கண்டேன். [ஒருமுறை முகர்ந்துவேறு பார்த்தார்.] வேறு என்னென்ன யோகா புத்தகங்கள் இருக்கின்றன என்று கேட்டார். ஆர்வம் மேலிட, நீங்கள் யோகா பயில்கிறீர்களா என்று கேட்டேன். ‘சேச்சே. அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி புஸ்தகம்தான் படிக்க இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்’ என்றார். வாசகர்கள்!
அபூர்வமாக எங்கள் அரங்கில் இன்று அவ்வப்போது சில பெண்களும் பெண்மணிகளும் வருகை தந்து சிறப்பித்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். பொதுவாகப் பெண்களுக்குப் புத்தக அலர்ஜி உண்டு என்பது என் அபிப்பிராயம். உடனே வரிந்துகட்டிக்கொண்டு யாரும் சண்டைக்கு வராதீர்கள். நான் சொல்லுவது மெஜாரிடி மகளிரைப் பற்றி. சமையல் புத்தகங்கள், பெண் எழுத்தாளர்கள் பெண் வாசகர்களுக்காக பென்னால் எழுதும் பெண் நாவல்கள் படிக்கிற பெண்கள் ஓரளவு உண்டுதான். ஏனோ அவர்கள்கூட கிழக்குப் பக்கம் அதிகம் வருவதில்லை. இத்தனைக்கும் ஒசாமா பின்லேடன் புத்தகங்களெல்லாம் வெளியே இருப்பதில்லை. இந்த முறை வடிவமைப்பில் மிகவுமே புத்திசாலித்தனம் காட்டியிருக்கிறார்கள். புதிய புத்தகங்கள் ஒரு பக்கம், சமையல், பக்தி, குழந்தைகளுக்கான புத்தகங்கள், சுஜாதா என்று கலவையாகத்தான் முதலில் கண்ணில் படும். கிழக்கு அரங்கின் இருபுறமும் வெளியே கடையை ஒட்டி நடந்தீர்களென்றால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு இரண்டடிக்கும் ஒவ்வொரு துறை சார்ந்த புத்தகங்கள் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். எல்லாவிதமான விருப்பங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும்படியான வடிவமைப்பு.
அதுதான் காரணமாக இருக்கவேண்டும். உள்ளே வந்த பெண்களுள் சிலர் சுஜாதா நாவல்களை வாங்கினார்கள். ஒரு பெண்மணி இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகளின் முழுத்தொகுப்பை வாங்கினார். கத்தரிக்காய் கலரில் சுடிதாரும் கழுத்து வரை ஆடிக்கொண்டிருந்த காதணியும் [எப்படியோ அதுவும் அதே கலரில் அவருக்குக் கிடைத்திருக்கிறது.] அணிந்திருந்த ஒரு பெண் மட்டும்தான் நான் பார்த்த வரையில் செட்டிநாடு சமையல் என்ற புத்தகத்தை எடுத்தார். திருமணமாகப்போகிறதோ என்று நினைத்தேன். மினிமேக்ஸ் பிராண்ட் சமையல் புத்தகங்களை எனக்குத் தெரிந்து ஆண்கள்தான் வாங்கினார்கள் இன்று.
மாலை ஐந்து மணிவரை பத்ரியை நான் கண்காட்சி வளாகத்தில் பார்க்காததால் லேசான பதற்றம் எழுந்தது. நாளைக்குத் தமிழ் பேப்பருக்கு அவர் எழுதியாகவேண்டிய கடமை இருக்கும்போது எங்கே போய்விட்டார்? ஒருவேளை மைலாப்பூர் திருவிழாவுக்குப் போயிருப்பாரோ, எங்காவது எண்பது வயதுக்கு மேற்பட்டோர் சங்கத்தில் கருத்தரங்கு நடக்கிறதோ என்று பலவிதமாகச் சிந்தித்தபடி அவரைத் தேடியவாக்கில் கொஞ்சம் வளாகத்தைச் சுற்றினேன். காலச்சுவடில் வ.ஊ.சி. எழுதிய ‘திலக மகரிஷி’ என்ற புத்தகத்தையும் என்.சி.பி.எச்சில் டி.டி. கோசாம்பியின் புத்தகம் ஒன்றின் மொழிபெயர்ப்பையும் வாங்கினேன்.
திரும்பவும் கிழக்குக்கு வந்தபோது பத்ரி வந்துவிட்டார். சில நிமிடங்களில் உஷா மாமியும் நிர்மலாவும் வந்தார்கள். பழங்காலத்து நண்பர்கள்! மாமி வந்தவுடனேயே தமிழ் சுஜாதா யார், எங்கே இருக்கிறார் என்று கேட்டார். கூப்பிட்டு அறிமுகப்படுத்தியதும் பெண்மனம் கட்டுரை குறித்து க.நா.சு. ரேஞ்சில் அஞ்சு நிமிஷத்துக்கு விமரிசித்தார். [என் காதில் சரியாக விழவில்லை.] ஏதோ புக் ரிலீஸ் இருக்கிறது என்று அவர் நகர, பட்டுக்கோட்டை பிரபாகர் வந்தார். காயகல்பம் ஏதும் சாப்பிடாமல் கட்டுடல் காப்பது எப்படி என்று அவரிடம் கற்கவேண்டும். இன்று அபூர்வமாக தரிசனம் கொடுத்த இன்னொருவர், ஜடாயு. தமிழ் ஹிந்துக்காரர். பிரசன்னா அவரிடம் ‘ஆர்.எஸ்.எஸ். வாங்கிட்டிங்களா?’ என்று கேட்டார். ‘அதெல்லாம் ஏற்கெனவே கைக்கு வந்து சேந்தாச்சு. படிச்சிட்டு காட்டமா ரெவ்யூ எழுத சொல்லி ஒருத்தர் அனுப்பிட்டார்’ என்றார். நல்லவேளை, காட்டமான ரெவ்யூவை எழுதிப் போட்டுவிட்டுப் படியுங்கள் என்று அந்த உத்தமோத்தமர் சொல்லியிருக்கவில்லை.
பல நாளாக நான் சந்திக்க விரும்பிய பாரதி மணியை இன்று சந்தித்தேன். எழுபத்தி நாலு, எழுபத்தி ஐந்து வயது இருக்குமா? நிச்சயமாக, என்னைவிட உற்சாகமாகவும் இளமையாகவும் இருக்கிறார். ஒரு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாலே அவருடைய உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொண்டுவிடுகிறது. பாரதி மணியுடன் இயக்குநர் சுகா, பாவண்ணன் இருவரும் வந்திருந்தார்கள். பாவண்ணனை நான் சந்திப்பதும் இதுவே முதல் முறை. எளிமையான, இனிய மனிதர். தமிழ் பேப்பருக்கு எழுதச் சொல்லிக் கேட்டேன். தமிழ் பேப்பரா என்று இழுத்தார். இதென்ன அநியாயம்? தினத்தந்தி தெரிந்திருக்குமானால் தமிழ் பேப்பரும் தெரிந்திருக்க வேண்டியதுதானே நியாயம்? இருந்தாலும் என் மதிப்புக்குரிய எழுத்தாளரிடம் அழிச்சாட்டியம் பண்ண விருப்பமில்லாமல், விவரம் சொல்லி எழுதச் சொன்னேன். ‘பாவண்ணனுக்கு ஆபீஸ் வேலை அதிகம்’ என்றார் பாரதி மணி. விடுவதாவது? எப்போது ரிடையர் ஆவீர்கள் என்று கேட்டேன். சிரித்தார். எழுதுவார்.
ஏழே முக்கால், எட்டு மணி சுமாருக்கு வலையுலக நண்பர்கள் வந்தார்கள். வழக்கமான கிழக்கு சந்தில் கொஞ்சநேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். நாஞ்சில் நாடன் வந்தார். நண்பர்களை அவருக்கு அறிமுகப்படுத்திவைத்தேன். ஒரு சில நிமிடங்களே என்றாலும் ஆத்மார்த்தமாக அனைவருடனும் பேசினார். நாஞ்சிலுடன் போட்டோ எடுத்துக்கொள்வது என்று முடிவானதும், ஜாக்கி சேகர் அற்புதமாகப் படமெடுத்துக் கொடுப்பார் என்று சப்புக்கொட்டிக்கொண்டிருந்தேன். அவரோ கேமராவை வேறு யாரிடமோ கொடுத்துவிட்டு பக்கத்தில் வந்து நின்றுகொண்டார். கேமராவை வாங்கிய நல்லவர் [அவர் கிழக்கு தொப்பி அணிந்திருந்ததாக ஞாபகம்] அதை நான் வெர்னியர் காலிபரைத் தடவிப் பார்த்ததுபோலத் தடவினார். ஃப்ளாஷை அமுக்கு அமுக்கு என்று பலம் கொண்டமட்டும் அமுக்கியும் மஞ்சள் பல்புதான் எரிந்ததே தவிர ஒளிவெள்ளம் பாயவில்லை. அப்புறம் ஒரு மாதிரி எடுத்து முடித்துவிட்டதாகச் சொன்னார். ஜாக்கியின் வலைப்பதிவில் அந்த அவுட் ஆஃப் ஃபோக்கஸ் படமும் வெளியாகும் கணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நாளைக்கு சனிக்கிழமை விடுமுறை தினமென்பதால் கண்காட்சி காலை 11 மணிக்கே தொடங்குகிறது. நாளைய தினத்தை கிழக்கு எடிட்டராக அல்லாமல் ஒரு உத்தம குடும்பஸ்தனாகக் கழிக்கத் திட்டம். மனைவி குழந்தையுடன் கண்காட்சிக்குச் செல்லப்போகிறேன். வழியில் சந்திக்க நேர்ந்தால் பால்கோவா நன்றாக இருந்ததா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்!
பி.கு: இன்றைய கிழக்கு டாப் மூன்று: 1. ஸ்பெக்ட்ரம் சர்ச்சை 2. ராஜராஜ சோழன் 3. ஆர்.எஸ்.எஸ்.
பிரசன்னா கிழக்கிலிருந்து VRS வாங்கிட்டுப் பால்கோவா கடைக்கு வேலைக்குப் போட்ட மாதிரி இருக்கு இந்த ஃபோட்டோ :-)))
//நல்லவேளை, காட்டமான ரெவ்யூவை எழுதிப் போட்டுவிட்டுப் படியுங்கள் என்று அந்த உத்தமோத்தமர் சொல்லியிருக்கவில்லை.//
🙂 :))
அருமையான வர்ணனை … வாழ்துக்கள் சரி இப்போ கேக்கிறேன் .. பால் கோவா நல்லா இருந்துதா? ? ?
அற்புதமான பால்கோவா. நாளைக்கும் கண்டிப்பாக உண்டு 😉
சீரியலில் வரும் அப்பர் மிடில் கிளாஸ் அப்பா லுக்கு !!
//எனவே நல்ல பிள்ளையாக ஒரே ஒரு பால்கோவாவும் ஒரே ஒரு வேர்க்கடலை பாக்கெட்டும் மட்டும் சாப்பிட்டேன்//
//மனைவி குழந்தையுடன் கண்காட்சிக்குச் செல்லப்போகிறேன். வழியில் சந்திக்க நேர்ந்தால் பால்கோவா நன்றாக இருந்ததா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்!//
எழுத்தாளர்களின் குடும்பஸ்தர்க்ளே எழுத்தாளர்களின் படைப்பை படிப்பதில்லையா? 🙂
மனைவியின் முன்னால் “பால்கோவா நன்றாக இருந்ததா என்று” கேட்க்கவில்லை, ஆனால் இந்த பதிவு பற்றி பேசுகின்றேன் 🙂
புத்தக கண்காட்சி ரொம்பவே சென்னைக்கு ஏங்க வைக்கிறது உங்களின் அப்டேட்டுகளும்.
//வழியில் சந்திக்க நேர்ந்தால் பால்கோவா நன்றாக இருந்ததா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்!//
இங்க தான் நான் சென்னைல இல்லியேன்னு ரொம்ம்ம்ம்ம்ப வருத்தப் படறேன். :)))
சார், நேற்று உங்களை கிழக்கு சந்தில் முதல்முதலாய் உங்களை பார்த்தேன். சுற்றி நான்கைந்து பேர் இருந்தார்கள். சுய அறிமுகமெல்லாம் செய்து பேச அத்தனை பேர் முன்பு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அதனால் ஹலோ சொல்லாமல் நகர்ந்துவிட்டேன். வருத்தம். இன்னொரு முறை கண்டிப்பாக உங்களை சந்திப்பேன் என்று நினைக்கிறேன். நேற்று நான் பார்த்தவற்றிலேயே குழக்கு ஸ்டால் தான் கொஞ்சம் கிராண்டான அமைப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராம்.
கவித்துவம் ததும்பும் காட்சி..?????????
[…] http://writerpara.com/paper/?p=1867 […]
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை காட்டிலும், அங்கிருந்து 5கி.மீ தொலைவில் மம்சாபுரத்தில் உள்ள பிள்ளை கடையில் பால்கோவா ரொம்பவும் டேஸ்டாக இருக்கும், அதே கடையில் திருநெல்வேலி அல்வாவை மிஞ்சும் அல்வாவும் உண்டு என்று உண்டவர்கள் கூறுவதுண்டு.
எஸ்.ராவும், ஞாநியும் அந்த ஊருக்கு சென்றது பற்றி எதோ ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்கள் அவர்கள் பல்கோவாவும் அல்வாவும் அங்கு சாப்பிட்டார்களா என்று கேட்டுச் சொல்லவும்.
நன்றி, பா.ரா. உங்களையெல்லாம் பார்த்ததில் உண்மையிலேயே உற்சாகம் தான்! உங்களுடன் விடிய விடிய பேசவேண்டும்! சில சமயங்களில் சோம பானத்தை ஏன் விட்டொழித்தேன் என்றிருக்கிறது!
உஷாம்மா, நிர்மலா! நான் உங்களை பார்த்த ஞாபகமே இல்லையே! மதுமிதாவுடன் இருந்தீர்களா?
இந்த வலையுலகம் மட்டும் வராம இருந்திருந்தா நாமெல்லாம் புத்தகக் கண்காட்சியை இன்னொரு அரசு கண்காட்சி போலன்னு சொல்லிட்டு அங்க ஒண்ணுமே இல்லைடானு போய்ட்டே இருந்திருப்போம்னு நினைக்கிறேன்.
புத்தக அறிமுகங்களும், ரசித்த புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் புத்தக உலகை ரசிக்க வைத்தன. இப்படியான பதிவுகள் ஊரில் நடக்கும் திருவிழா குறித்த புழங்காகிதமும், செல்ல முடியாத ஏக்கத்தையும் ஒருசேர உருவாக்குகின்றன.
அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவை திட்டமிட்டு இந்த ஆண்டு விடுமுறை எடுக்க தீர்மானித்திருக்கிறேன
…பதிவு. … பாரா.
2012 புத்தக சந்தைக்கு கிழக்கு பிரசுரத்தின் விசேஷ வெளியீடு:
“ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா”
ISBN 111-11-1111-111-1
Genre Indian Cuisines
Book Title Srivilliputhur Paalgova”
Pages 90
Format Printed Book
Year Published 2011
Price: Rs 70.00
பால்கோவா என்றாலே பலருக்கு நாவில் நீர் ஊறும்,
அதிலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மிக விசேஷமானது
அதன் சரித்திரம் ,அதை அழிக்க ஆங்கிலேயர்கள் கால
ஆட்சியில் நடந்த சதி ,அதை முறியடித்த விதம,
பல அரசியல் தலைவர்களின் அது பற்றிய கருத்து
(உ-ம்.பெரியார் விரும்பி சாப்பிட்ட ஒரு தின்பண்டம்;
கடவுள் எதிர்ப்பு போராட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் முன்
தி க. நடத்தியபோது அதில் பங்கேற்க சென்ற தொண்டர்களிடம்”வரும்போது
மறக்காமல் ஒரு பாக்கெட் பால்கோவா வாங்கிட்டு வாங்க ” என்று அவர்
சொன்னது) போன்ற நிகழ்வுகளை தனக்கே உரிய சுவையான பாணியில்
அள்ளித் தந்திருக்கிறார்,இந்நூலின் ஆசிரியர் பா.ரா.கூடவே இதை செய்வது
எப்படி என்று, ஆறு தலைமுறையாக இதை செய்துவரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் புகைக்கடை
owner பூவராக அய்யங்கார் சொல்லும் recipe யும் உள்ளது.
முத்தாய்ப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்
என Dr.மோகன் கூறும் பேட்டியும் உள்ளது
சுருக்கமாக ஓவ்வொரு வீட்டின் சமையலறை அலமாரியிலும் இருக்கவேண்டிய
ஒரு சிறந்த புத்தகம்
புத்தக் கண்காட்சி பற்றிய உங்களது பார்வைகள் இன்னும் எதிர்பார்க்கிறேன்.
மணிசார், சந்தியா பதிப்பக ஸ்டாலில் புத்தக வெளியிட்டு விழாவிற்கு மதுமிதா அவசரமாய் அழைத்ததால் நானும் நிர்மலாவும் ஓடிக் கொண்டு இருந்தப்பொழுது, கிழக்கு பதிப்பக வாசலில் பிரபலங்களுடன் நீங்கள் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்தோம்.
பாரா சார், தமிழ்சுஜாதாவின் கதையை நான் விமர்சித்ததை நினைவைத்திருந்த நீங்கள், ஓரிஜினல் சுஜாதாவின் நாவல் அட்டை படத்தை – கிழக்கு ரிலீஸ்- நிர்மலாவும் நானும் விமர்சித்ததை குறிப்பிட மறந்தது ஏனோ 🙂
அடடா! ராகவன், இன்னும் நீங்கள் திருந்தவில்லையா? இன்னும் சாப்பாட்டு ராகவனாகத்தான் இருக்கிறிறார்களா?!
BTW, எனக்கும் பால்கோவா என்றால் உயிர், எனக்கு கொடுத்து வைத்தது, வட இந்திய லாலாகடை இனிப்புதான் (லண்டனில்).
Just enjoy when you can!
Essex சிவா
/////தஞ்சாவூர் அசோகா,/////
பாரா நீங்கள் சொல்வது தவறு “திருவையாற்றில் தான் அசோகா ஃபேமஸ்”
ஹா, என்ன ஒரு அவமானம்! என் இருவரிக் கமெண்டைக் காணோமே? ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சரியா, முறையா, தர்மமா?
http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html
Part of Vaali’s Speech @ book Fair Kaviarangam
என்னையே, ஆனானப்பட்ட என்னையே- பாராவின் பிரதான சீடன், பாரா என் பிரதான விசிறி- என்பதையெல்லாம் தாண்டி என் ஜாலி கமெண்டையே அடக்குமுறை செய்து விட்டதால் மனம் வருந்தி, இனிமேல் இங்கே கமெண்டமாட்டேன் என்பதை இத்துடன் தெரிவித்து வானப்பிரஸ்தம் செய்கிறேன். உம் கொட்டம் வாழ்க ;-(
//பின்னால் இருப்பது பால்கோவா கடை//
கடை எங்கே இருக்கிறது?:))) கொஞ்சம் பெரிய கேமிரா வாங்கி அடுத்த முறை கடையையும் சேர்த்து எடுக்கப்பாருங்க!:))
குசும்பன், அதேதான், அதேதான்.
அதைத்தானய்யா, அந்த டெக்னிகல் அநியாயத்தைதானய்யா நான் தட்டிக்கேட்டேன். அந்த ஒரு காரணத்தினாலேயே அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டேன், ஒடுக்கப்பட்டேன், ஆட்டோ அனுப்பப்பட்டேன், அசிங்கப்பட்டேன், அழுதேன், அபலையாய் நின்றேன். கூடுதலாக, அதென்ன அந்த உஷா மாமியை மட்டும் சரியாக ஃபோகஸ் செய்யத்தெரிந்த பிரஹஸ்பதி பால்கோவா கடையை மட்டும் அபஜருத்து மாதிரி ஏனோதானோவென்று எடுக்கவேண்டுமா என்றும் கேட்டேன். அது தப்பா? உஷா மாமியே இது தெரிந்தால் வருத்தப்பட்டு சிரிப்பாய்ச் சிரிப்பார். என் கேள்விக்குப் பதிலில்லை. ஏன், என் கேள்வியே பிரசுரிக்கப்படாமல் தடாமுறைக்கு ஆளாக்கப்பட்டேன்.
இப்போது இப்படி விசும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். ஸ்பெக்ட்ரமே நடக்கவில்லை என்று சாதிப்பவர்கள் இதையும் செய்வார்கள், இன்னமும் செய்வார்கள்.
எனக்கு ரொம்பவும் அழுவாச்சியாக வருகிறது. என் அழுகையின் தார்மீகச்சூடு அவர்களின் ஐஸ் மனச்சாட்சியைச் சுட்டு, கொஞ்சமாவது அசையவைத்து நிலைமையைச் சரிசெய்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ராம், உங்கள் கமெண்டைப் பிரசுரிக்காமைக்கு வருந்துகிறேன். ஆனால் அது பிரசுரிக்கத் தகுந்ததல்ல என்கிற என் கருத்தில் மாற்றமில்லை.
// நல்லவேளை, காட்டமான ரெவ்யூவை எழுதிப் போட்டுவிட்டுப் படியுங்கள் என்று அந்த உத்தமோத்தமர் சொல்லியிருக்கவில்லை. //
ஹலோ, ரிவ்யூ எழுதாதது தலையிருக்க வால் ஆடக் கூடாது என்பதால் தான்.
விரைவில் வரப்போகுது உங்கள் குறுகியகால சந்தோஷத்திற்கு ஆப்பு… எங்கள் குருபீடத்திலிருந்து.
//பட்டுக்கோட்டை பிரபாகர் வந்தார். காயகல்பம் ஏதும் சாப்பிடாமல் கட்டுடல் காப்பது எப்படி என்று அவரிடம் கற்கவேண்டும்.//
நிச்சயம் அவர் சொல்லும் பதில் “யோகாவும் தியானமும்”
//பட்டுக்கோட்டை பிரபாகர் வந்தார். காயகல்பம் ஏதும் சாப்பிடாமல் கட்டுடல் காப்பது எப்படி என்று அவரிடம் கற்கவேண்டும்.//
அவர் பால்கோவா எல்லாம் சாப்பிட மாட்டரோ, என்னவோ?!
Essex சிவா
பாரா சார்,
காஷ்மீரும், கொசுவும் வாங்கிப் படித்து விட்டு நன்றாக இருந்தால், அடுத்த முறை ஊருக்கு (சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்தான்) சென்று திரும்பும்போது உங்களுக்காக அதியற்புத சுவை கொண்ட ‘வெங்கடேஸ்வரா பிராண்டு’ பால்கோவா ஒரு கிலோ வாங்கி வருகிறேன். 🙂
அப்புறம், கிழக்கு சந்தில் உங்களை சந்தித்தால் லிச்சி ஜூஸ் வாங்கித் தருவீர்கள்தானே? 🙂
//இன்று ஒரு வாசகர் மொபைலில் ஒரு பட்டியல் போட்டு எடுத்துக்கொண்டு வந்து முப்பது நாற்பது புத்தகங்களை ஒரு சில நிமிடங்களில் எடுத்துப் போட்டுக்கொண்டு கார்டைத் தேய்த்துவிட்டுப் போய்க்கொண்டே இருந்தார். பிரசன்னா மிகவும் குஷியாகிவிட்டார். இந்த மாதிரி ரீடர்ஸ் அதிகம் வேண்டாம் சார். டெய்லி ஒரு நூறு பேர் வந்தா போதும் என்றார்.//
அந்த வாசகர் அடியேன்தான் என்று நினைக்கிறேன். உங்களிடம் “மாயவலை”-யில் கையெழுத்து கூட வாங்கினேன். மிக்க நன்றி. பிரசன்னாவை குஷிப்படுத்தியத்தில் சந்தோஷம். 🙂