ஒரு நாள் கழிவது எப்படி?

யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. பார்க்கிறவர்களுள் பெரும்பான்மையானோர், ‘எப்படி உங்களால் இவ்வளவு எழுத முடிகிறது?’ என்று தவறாமல் கேட்கிறார்கள் இப்போதெல்லாம். சென்ற ஆண்டு விருட்சத்தில் ஒரு பேட்டிக்காக அழகியசிங்கர் இதனைக் கேட்கப் போக, ஒவ்வொரு பேட்டியிலும் [கடைசியாக வந்த ஆதன் மீடியா பேட்டி வரை] இக்கேள்வி தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது.

அப்படியா? ஜெயமோகன் எழுதுவதில் பத்தில் ஒரு பங்குகூட நான் எழுதுவதில்லை. இருந்திருந்து வாழ்நாளில் முதல் முறையாக ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். [ நான் ஃபிக்‌ஷன் ஆயிரங்கள்,
கணக்கில் வராது] இது ஒரு பாவமா? அவர் மூன்று மாதங்களுக்கு ஒரு ஆயிரம் பக்க ரிலீஸ் செய்கிறார். அவரை ஏன் யாரும் கேட்பதில்லை என்று தெரியவில்லை.

இன்றைக்குக் கண்காட்சியில் போகன் சங்கரை சந்தித்தேன். இதையே அவர் வேறு வடிவில் கேட்டார். ‘எப்படி நேரத்தை வகுத்துக்கொள்கிறீர்கள்?’

நான் ஒன்றும் அவ்வளவு ஒழுக்கமாக நேர வரையறை செய்து எழுதுபவனெல்லாம் இல்லை. சரியாகச் சொல்வதென்றால் நெருக்கடி நேரம் வரை அனைத்தையும் தள்ளிப் போட்டுவிட்டு, இறுதிக் கணங்களில் அடித்துத் தள்ளுகிற வழக்கம் கொண்டவன் நான். என் மனைவி பலமுறை கண்டித்தும் இந்தப் பழக்கத்தைத் திருத்திக்கொள்ள முடியவில்லை.

எனது ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்குத் தொடங்குகிறது. எழுதலாம் என்று வந்து அமர்ந்ததும் ‘ரூம விடறிங்களா? பெருக்கிடலாம்’ என்ற குரல் வரும். கொட்டுகிற குப்பையையெல்லாம் பெருக்கித்தள்ளத்தானே வேண்டும்? எனவே பெருக்கித் துடைக்கப் பதினைந்து நிமிடங்கள் இடம் தருவேன். அந்நிமிடங்களில் ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ். ஒன்றிரண்டு டிக்டொக் விடியோக்கள். பிறகு எழுத வந்து அமர்ந்தால் ஒன்று – ஒன்றரை வரை கலைச்சேவை சரியாக இருக்கும். ஒரு காட்சிக்கும் அடுத்தக் காட்சிக்கும் இடையே ஐந்து நிமிட இடைவெளி எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஃபேஸ்புக், ட்விட்டர் பார்ப்பேன். ஏதாவது தோன்றினால் அதில் எழுதுவேன். காலைப் பொழுதுக்குள் ஒரு சீரியலுக்கான மறுநாள் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பது கணக்கு. பொதுவாக ஒருநாள் படப்பிடிப்பு என்பது 6 முதல் 8 காட்சிகள் கொண்டதாக இருக்கும். இரண்டு யூனிட் ஷூட்டிங் என்றால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும். அந்நாள்களில் ஃபேஸ்புக் கிடையாது. ஆனால் என்ன ஆனாலும் இரண்டு மணிக்குள் முடித்துவிட்டு சாப்பிட்டுப் படுத்துவிடுவது வழக்கம். எனது ஒழுங்கான தூக்கம் என்பது மதியம் தூங்கும் இரண்டு மூன்று மணி நேரங்கள் மட்டுமே.

மாலை ஐந்து மணிக்குத் தூங்கி எழுந்து சிறிது நேரம் மப்பு கட்டிவிட்டு ஆறு மணிக்கு மீண்டும் எழுத உட்கார்ந்தால் அடுத்த சீரியல். இது பதினொன்று, பதினொன்றரை வரை நீளும். காலை மிச்சம் வைத்த ஏதேனும் இருந்தாலும் இதில் சேரும். இடையே ஷெட்யூல் மாற்றுவார்கள். திட்டத்தில் இல்லாத சிலவற்றைச் சேர்த்து எழுத வேண்டி வரும்.

இந்நேரத்தில் இரு காட்சிகளுக்கு இடையிலான ஐந்து நிமிட இடைவேளை என்பது பத்து நிமிடங்களாகும். அந்த ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் குறைந்தது பத்துப் பக்கங்கள் படிப்பேன். முன்பெல்லாம் அச்சு நூல்கள். இப்போது கிண்டில். இதுதான் வசதியாக இருக்கிறது. ஒரே சமயத்தில் ஏழெட்டுப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து ஓரிரு மாதங்களில் முழுக்க முடித்துவிடுவது என் வழக்கம். சில புத்தகங்கள் வேகமாகப் படிக்க விடாது. பாதியில் நிறுத்திவிட்டுப் பல மாதங்களுக்குப் பின் மீண்டும் எடுத்துப் படிப்பதுண்டு. அப்போது ரசிக்கும்படியாகச் சில அமைந்துவிடும். Trial of Tilak, இஸ்தான்புல், ஏகே செட்டியார் படைப்புகள் எல்லாம் அப்படிப் படித்தவைதான்.

இரவு பதினொன்றரைக்குத் தொழில்சார் எழுத்துப் பணிகள் முடிவடைந்ததும் நானாக எழுத ஒன்றுமில்லையென்றால் அரை மணி நேரம் ஏதாவது படிப்பேன். படுத்துவிடுவேன். என் இஷ்டத்துக்கு எழுதும் வேலை ஏதேனும் இருந்தால் அந்தப் பணி அப்போது நடக்கும். சென்ற ஆண்டு தினமணி இணையத்தளத்தில் எழுதிய யதி முழுவதையும் இப்படி நள்ளிரவு பன்னிரண்டுக்குத் தொடங்கி ஒன்றரை இரண்டு வரை மட்டுமே எழுதி முடித்தேன். எழுதியதைத் திரும்பப் படித்துத் திருத்தம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால் எழுதும் முன்பு மனத்துக்குள் முழுதாக ஒருமுறை சொல்லிப் பார்த்துவிடுவேன். முன்பெல்லாம் இரண்டு சுவர்கள் இணையும் முக்கில் திரும்பி அமர்ந்து சுவரைப் பார்த்துச் சொல்லுவேன். என் மனைவி மிகவும் பயந்தபடியால் அந்தப் பழக்கத்தைக் கஷ்டப்பட்டு மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

பூனைக்கதை எழுதும்போது இந்த வழக்கங்கள் முற்றிலும் மாறின. அது ஒரே மூச்சில், ஒன்றரை மாதத்தில் எழுதி முடிக்கப்பட்ட நாவல். அப்போது மதிய உறக்கத்தைக் குறைத்துக்கொண்டு அத்தனை சீரியல் பணிகளையும் [அப்போது மூன்று] பகல் பொழுதுக்குள்ளேயே முடித்துவிடுவேன். மதிய உறக்கத்துக்குப் பின்பு மாலை எழுந்ததும் பூனைதான். அதிகாலை மூன்று அல்லது மூன்றரை வரை எழுதினேன். இடையே பத்திரிகைத் தொடர் ஏதேனும் வந்தால் டெட்லைன் கேட்டுக்கொண்டு அதற்கு அரை மணி முன்னதாக எழுதுவது வழக்கம். இப்போது கல்கியில் புல்புல்தாரா வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் திங்கள் கிழமை காலை ஃபாரம் அச்சுக்கு அனுப்புவார்கள். ஞாயிறு மாலை ஜெயராஜுக்கு போன் செய்து படக்குறிப்பு சொல்லிவிட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் படுக்கப் போகும்முன் எழுதி அனுப்பிவிட்டுப் படுப்பேன்.

யோசித்துப் பார்த்தால் இத்தனை நாள்களில் என்னிடம் ஒரே ஒரு ஒழுக்கம் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் இயக்குநர் காத்திருக்கும்படித் தாமதம் செய்ததில்லை. பத்திரிகை ஆசிரியர்கள் பதறுமளவுக்கு இறுதிக் கெடுவைக் கடந்ததில்லை. என்ன ஆனாலும் மறுநாளுக்குரியதை முடித்துவிட்டே படுப்பேன். அதற்கு வசதியாக, முதல் நாள் காலை நடை செல்லும்போது அன்று எழுத வேண்டிய அனைத்தையும் யோசித்து வைத்துவிடுவது வழக்கம். சில நாள் காலை நடையின்போது காட்சிகளை வாய்விட்டுச் சொல்லி ரெக்கார்ட் செய்துவிடுவதும் உண்டு. அது அந்தந்தக் காட்சியின் தன்மையைப் பொறுத்தது.

முழு நேர எழுத்தின் ஒரே பிரச்னை, இதில் ஓய்வுநாள் என்ற ஒன்று கிடையாது. ஊரெல்லாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிக்கொண்டிருக்கும். போராளியானவன் வழக்கம் போல் எழுந்து வாக்கிங் போய்விட்டு, குளித்து முழுகி பூஜை முடித்து சிரத்தையாக எழுத உட்கார்ந்துவிடவேண்டியிருக்கும். போதாக் குறைக்கு வாரம் இருமுறையேனும் ‘டிஸ்கஷன்’ அல்லது ‘மீட்டிங்’ என்ற சடங்கு இருக்கும். மாதம் இருமுறை சானலுக்குப் போகவேண்டியிருக்கும். இந்நாள்களில் மேற்படி எந்தத் திட்டமும் உதவாது. நாள் முழுதும் இடம் பெயர்ந்து சென்று கலைச்சேவை செய்துவிட்டு, கரும்புச் சக்கைபோலத் திரும்பி வந்து மறுநாளுக்கு எழுத வேண்டியிருக்கும். அப்போது என் எளிய பொழுதுபோக்கான ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கமெல்லாம் எட்டிப் பார்க்க மாட்டேன். டிக்டொக் கண்டிப்பாகக் கிடையாது.

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பொதுவாகப் படப்பிடிப்புகள் இருக்காது. எனவே இரண்டாவது சனிக்கிழமை பெரும்பாலும் எனக்கு விடுமுறையாக இருக்கும். [ உத்தமர்கள் சிலர் சில நேரம் இந்நாள்களிலும் டிஸ்கஷன் வைப்பார்கள்.] பார்க்க எண்ணியிருக்கும் படங்கள் ஏதேனும் அந்தச் சமயம் வெளியானால் போவேன். டிவி பார்ப்பேன். சற்றுக் கூடுதலாக சமூக வலைத்தளங்களை மேய்வேன். ஏதாவது சிறுகதை யோசனை இருந்தால் எழுதிப் பார்ப்பேன். உலக அதிசயமாக என்னவாவது வீட்டு வேலைகள் இருந்தாலும் செய்வதுண்டு. ஒரு ஓய்வுநாள் வருமானால் தூங்கமாட்டோமா என்ற எண்ணமே முக்கியமாக எழும். ஆனாலும் எப்படியோ படுக்கப் பன்னிரண்டு மணி ஆகிவிடும்.

செய்தித் தாள்களைக் கழிப்பறையில் மட்டுமே படிக்கிறேன். ஒவ்வொரு நாளும் காலை ஏழு அல்லது எட்டு பேப்பர்களை வேகமாகப் படிப்பது என் வழக்கம். தினமணி, தந்தி, இந்து தமிழ் திசை, டைம்ஸ் ஆஃப் இந்தியா, கார்டியன், நமது எம்.ஜி.ஆர்., நமது அம்மா, முரசொலி, தீக்கதிர், ஏசியன் ஏஜ். வரி விடாமல் படிப்பது தமிழ் இந்து மட்டும். [இத்தனை பேப்பர் வாங்குகிறேனா என்றெல்லாம் கேட்கக்கூடாது. இணையம் எதற்கு பிறகு?]

குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும்; நிறைய வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது. இதெல்லாம் சீரியல்களில் இருந்து வெளி வந்த பின்புதான் முடியும் என்று தெரியும். சீரியல்களுக்கு எழுதத் தொடங்குவதற்கு முன்பு இதையெல்லாம் செய்தேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். இல்லை என்றுதான் தோன்றுகிறது. படிப்பது, எழுதுவது தவிர வேறெதிலும் மனம் பொருந்துவதில்லை. இந்த ஜென்மம் இதற்குமேல் இதிலிருந்து மாறுமா என்றும் தெரியவில்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter