கோவிந்தசாமி ஒரு அப்பாவி. சாகரிகா அவனைப் பற்றி தவறாகவும், கற்பனையாகவும் எழுதி வருகிறாள். அவன் பெயருக்கு நீலநகரவாசிகளிடம் கலங்கம் வந்துவிடாமலிருக்க வேண்டும். அவளால் அவனுக்கு மரணம் நிகழ்ந்து விடக்கூடாது. அவனின் வழக்குரைஞராக நீ இருக்க முடியுமா? என அவனின் நிழல் சூனியனிடம் கேட்கிறது.
நீங்கள் எல்லாம் நினைப்பது போல கோவிந்தசாமி சங்கியே அல்ல. அதற்கு முன் சாகரிகாவை கட்டிய விரக்தியில் பகுதியளவு சைக்கோவானவன் என கரைகிறது. நேரடி கள ஆய்வில் அவன் ஒரு சங்கி என நாமே கண்டுபிடித்தோம். அப்படியிருக்க அவன் நிழல் இல்லை என்கிறதே என நினைக்கும் சூனியன் நிழலின் தலைக்குள் இறங்கிவிடலாமா? என யோசிக்கிறான். அதில் பயனேதும் இருக்காது என்ற நினைப்பில் நிழலை விட்டு விட்டு கோவிந்தசாமி, சாகரிகா தலைக்குள் இறங்கி உண்மையைக் கண்டறிய முடிவு செய்கிறான்.
சுவராசியத்துக்குப் பஞ்சமிருக்காது!
சூனியனின் ப்ளாஷ்பேக் “அப்லாஸ்”. தனக்கு தன் பணி நிர்ணய சபையில் வழங்கப்பட்ட வேலையை இன்னும் சிறப்பாகச் செய்து முடிக்க அவன் தேர்ந்தெடுத்த ஸ்தலத்தை அதை ஒட்டிய புராணக்கதையை அறிந்தவர்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இது தவிர, வேறு ஒரு குறிப்பையும் ஆசிரியர் தந்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக மலைவாசஸ்தலம், சோதிட நம்பிக்கை, நீராடுதல், தான் எடுப்பதே முடிவு என்ற ஒற்றை வரி குறிப்புகள் இதில் வரும் அரசி யார் என்பதை அறியத் தருகிறது. அரசியை கண்டு கொண்டவர்கள் ஆன்மிகஸ்தலத்தையும் கண்டு கொள்வார்கள்.
கடவுள் மலையாளச் சோதிடன் மூலம் அரசிக்கு காட்டிய ஆசை வார்த்தை சூனியனின் திட்டத்தை எப்படி காவு வாங்கியது? மரணக்கப்பலில் ஏற்றும் அளவுக்கு அவனுக்கு அங்கு நிகழ்ந்த அவமானச் சம்பவம் என்னவாக இருக்கும்? என்ற கேள்விகள் அடுத்த அத்தியாயத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.
”உண்மையுடன் கூடிய ஒரு வாழ்வில் சிலாகிக்க பெரும்பாலும் ஒன்றும் தேறுவதில்லை” என்ற வரிகள் எதார்த்தம். யோசித்துப் பார்க்கையில் நம் ஒவ்வொரு செயலும் எங்கோ ஓரிடத்தில் சுவராசியப்படுகிறது என்றால் யாரையும் காயப்படுத்தாத ஒரு பொய் அதற்குள் இருக்கும் என்றே தோன்றுகிறது. இல்லையென்றால் இந்த சூழலில் வாழ்க்கை சுவராசியமற்று சலிப்புத் தட்டத் தானே செய்யும்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.