வணக்கம்.
மூன்று வருடங்கள் இருக்குமா? பெரிய இடைவெளி இல்லை. மீண்டும் இணையத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இம்முறை சொந்தத் தளம் என்பதால் சற்றே கூடுதலாகவும்.
இடைப்பட்ட காலங்களில் இங்கு எழுதாமல் இருந்தேனே தவிர வாசிக்காமல் இல்லை. மகிழ்ச்சி கொள்ளவும் மௌனம் காக்கவும் புன்னகை செய்யவும் புல்லரிக்கவும் அதிர்ச்சி கொள்ளவும் அடங்கிப் போகவும் மிரள வைக்கவும் மென்று விழுங்கவும் எப்போதும் கிடைத்தபடிதான் இருந்தன தகவல்கள், தகவல்கள்.
ஒரு வித்தியாசம், இப்போதெல்லாம் உணர்ச்சிவசப்படுவதில்லை. எதற்கும். காலக்ரமத்தில் பிளட் ப்ரஷர், அல்சர் என்று ஏதும் வரலாம் என்று குடும்ப வைத்தியர் சொல்லியிருக்கிறார். வயதென்பது என்ன? அனுபவங்களே அல்லவா?
அனுபவங்களை மதிக்கிறேன். வெகு நிச்சயமாக கவனத்தில் கொள்கிறேன்.
*
இடையில் என்பால் கொண்ட அன்புமிகையால் யாரோ ஓர் அன்பர் என்னுடைய writerpara மின்னஞ்சல் முகவரியையும் அது தொடர்பான என் அனைத்து கூகுள் கணக்குகளையும் கோகுலத்துக் கண்ணனாக அபகரித்துச் சென்றுவிட்டார்.
அவரளவுக்கு அன்பு மிகாத என் வேறு சில நண்பர்கள் அந்த மின்னஞ்சலையும் பிறவற்றையும் கூகுளிடம் பேசி மீட்க முயற்சி எடுத்தும் முடியாமல் போனது.
அவசரத்துக்கு ஆயிரம் அஞ்சல் முகவரிகளை உருவாக்கிக்கொள்ள முடியுமென்றாலும் இழப்பு இழப்பே அல்லவா? யார் யார் கடிதங்கள், கணைகள் அந்தப் பழைய முகவரியில் சென்று இறந்தனவென்று தெரியவில்லை. இனி என்னைத் தொடர்புகொள்ள இந்தத் தளத்து முகவரியை உபயோகிக்கலாம் [para@writerpara.net] .
இழப்புகள் இருப்பினும், மாற்றம் நல்லது. அதன் சகல அவஸ்தைகளுடனும் சேர்த்து.
*
எப்போதும்போல் இம்முறையும் இத்தளத்தை உருவாக்க எனக்கு உதவி செய்தவர் என் நண்பர் கணேஷ் சந்திரா. எனது பழைய தமிழோவியம் வலைப்பதிவில் உள்ள சில முக்கியமான கட்டுரைகளை இனி மெல்ல மெல்ல இங்கே சேகரிக்க வேண்டும். ஒன்றும் அவசரமில்லை. நிதானமாகவே செய்யலாம். விடுபட்டே போனாலும் பெரிய இழப்பில்லை. எழுத்துகளைக் காட்டிலும் நண்பர்களை விட்டுவிடாதிருக்க மட்டுமே பெரிதும் விரும்புகிறேன்.
எனவே, என் பழைய இணைய நண்பர்களையும் புதிய தோழர்களையும் வருகவென்று வரவேற்கிறேன். தளப் பரிசோதனைக்காக உள்ளிட்டுப் பார்த்த சில குறுங்கட்டுரைகள் இதற்கு முன்னதாகப் பதிவாகியிருப்பினும் இப்புதிய தளத்தின் முதல் எழுத்தாக இதுவே ஆகுக.
இனி என் பொருட்டு இட்லிவடையை [நான் எங்கு எழுதுகின்றேன் என்று கேட்டு] யாரும் இம்சிக்காதீர்.
நான் இங்கேதான் இருக்கிறேன்.
[உங்கள் கருத்துகளை para@writerpara.net எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கலாம்]Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.