கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 4

[ஓர் அவசியமான முன்குறிப்பு: இந்த அத்தியாயத்திலும் இனி வரும் அத்தியாயங்களிலும் இடம்பெறும் ஒரு சில கணிதம் தொடர்பான வரிகளை பத்ரியின் கணக்கு வலைப்பதிவில் இருந்து எடுத்தேன். அடிப்படையில் எனக்கும் கணக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் கணக்கில் பெரிய சைபர் – பாரா]

திடீரென்று உலகம் அழகடைந்துவிட்டது. வீசும் காற்றில் விவரிக்க இயலாத வாசனையொன்று சேர்ந்துவிட்டது. சுவாசிக்கும் கணங்களிலெல்லாம் அது நாசியின் வழியே நுரையீரல் வரை சென்று மோதி, அங்கிருந்து புத்திக்குத் தன் நறுமணத்தைப் பரப்பத் தொடங்கிவிட்டது. கால்கள் தரையில்தான் நிற்கின்றன. ஆனால் உணரமுடியவில்லை. பஞ்சுப் பொதி வாகனத்தில் மிதப்பதுபோலிருக்கிறது. காதுகளுக்குள் கொய்ய்ய்ங் என்று ஒலிக்கும் சத்தத்தை உற்றுக்கேட்டால் சங்கீதமாக இருக்கிறது. இன்றைய தினம் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.

பத்மநாபன் தன் ஆகச்சிறந்த ஸ்டைல் நடை போட்டு வேகவேகமாக வீட்டை நெருங்க, வளர்மதி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

‘ஐயே, என்னடா இது உரிச்ச கோழியாட்டம் வரே?’ என்று கேட்டாள்.

அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. சே. இனிமேல் குளிக்கப்போகும்போதும் சட்டையுடன் செல்லவேண்டும். ஒரு கணம்தான். வெட்கம் வந்துவிட, அரசியல்வாதிபோல் ஒரு பக்கத் தோளில் தொங்கிய ஈரத் துண்டை எடுத்து உதறி விரித்து சால்வை போல் போர்த்திக்கொண்டு சிரித்தான்.

‘என்ன வளரு? லெட்டர் படிச்சியா?’

‘அடச்சே ஒனக்கு வேற வேலையே இல்ல. என் சயின்சு புக்க பொற்கொடி எடுத்துட்டுப் போயிட்டா. வீட்டாண்ட போயி கேட்டா அவங்க மாமா வீட்டுக்குப் போயிருக்கான்றாங்க. உன் புக்க குடேன். நாளைக்கு க்ளாஸ்ல குடுத்துடறேன்.’

அவனுக்கு அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகளில் காதுகளில் கேட்ட சத்தத்தின் கனபரிமாணம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நாற்பத்தியெட்டு பேர் படிக்கும் வகுப்பு. அதில் ‘படிக்கிற பசங்க’ளின் எண்ணிக்கை பத்து. அதில் நான்குபேர் பெண்கள். வளர்மதியின் தோழிகள். அவர்களில் யாராவது ஒருவரிடம் அவள் அறிவியல் புத்தகத்தைக் கேட்கலாம். அல்லது அவள் வீட்டுக்கு வெகு அருகில் இருக்கும் கலியமூர்த்தியிடம் கேட்கலாம். வாங்கி அட்டை போட்டு லேபிள் ஒட்டி ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் பெயரெழுதி வைத்த நாளாக அவன் திறந்து பார்த்ததே இல்லை. ஆத்தா, மாரியாத்தா என்று காலில் விழுந்து வணங்கி சமர்ப்பித்துவிடுவான். அவளையே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டாலும் வியப்பதற்கில்லை.

சாத்தியங்கள் அநேகம். சந்தர்ப்பங்கள் அநேகம். ஆயினும் நாநூறடி நடந்து தன் வீடு தேடி வந்து புத்தகம் கேட்க வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?

‘வளர்மதி, சீக்கிரம் சொல்லிடேன். நீயும் என்ன லவ் பண்றதானே?’

அவள் முறைத்தாள். ‘எப்பப்பாரு கெட்டபேச்சு பேசதடா குடுமி. எங்க தாத்தாவாண்ட சொல்லியிருந்தேன்னா என்னாயிருக்கும் தெரியுமில்ல?’

தெரியும். தோலை உரித்திருப்பார் அப்பா. விஷயம் வீடு வந்து சேருவதற்குள் பிரம்பு அவன் முதுகு வந்து சேர்ந்திருக்கும். வளர்மதியைப் போன்ற ஓர் உத்தமி அம்மாதிரியான நெருக்கடிகளுக்குத் தன் தோழர்களை உள்ளாக்குவதில்லை.

‘ரொம்ப தேங்ஸ் வளர்மதி. ஆனா என்னோட லவ் எவ்ளோ புனிதமானதுன்னு ஒனக்கு மொதல்ல நான் விளக்கி சொல்லணும். அப்பத்தான் புரியும்.’

‘திரும்பத் திரும்ப அதையே பேசினா இப்பவே உங்கப்பாவாண்ட சொல்லிடுவேன்.’

‘ஐயோ.. வேண்டாம் இரு ஒரு நிமிசம்’ என்று வேகமாக உள்ளே ஓடினான். கிடைத்த சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு அறிவியல் புத்தகத்தைத் தன் பள்ளிப்பையில் தேடினான்.

‘யார்றா அது குள்ளச்சி ஒருத்தி வாசல்ல நின்னுக்கிட்டிருக்கா? ஒன்னோட படிக்கறவளா?’

அப்பா. கவனித்திருக்கிறார்.

‘அ.. ஆமாப்பா. என் க்ளாஸ்ல செகண்ட் ரேங்க் வாங்கற பொண்ணு.’

ஒரு குள்ளச்சியின் இமேஜை இவ்வாறாகத்தான் உயர்த்திக்காட்ட இயலும். அப்பாக்களின் அட்ஜெக்டிவ்கள் பிள்ளைகள் ரசிக்கக்கூடியதாக எப்போதும் இருப்பதில்லை.

‘நீ எங்க போயி மேஞ்சிட்டு வர?’

‘பண்ண தோப்புல குளிக்கப் போயிருந்தேம்பா.’

‘வந்து உக்காந்து படிக்கணும். புரியுதா?’

‘சரிப்பா.’

அறிவியல் புத்தகத்தை அள்ளிக்கொண்டு வேகமாக வாசலுக்கு விரைந்தான். வீட்டில் அப்பா இல்லாதிருந்தால் அம்மாவிடம் சில சலுகைகள் எடுத்துக்கொள்ள இயலும். வா வளரு. உள்ள வா. இங்க உக்காரு. அம்மா, என் ஃப்ரெண்டும்மா. காப்பி குடுக்கிறியா?

கேட்கலாம். கிடைக்கும். தன் விருப்பம் அல்லது விருப்பமின்மையை அம்மா வெளிக்காட்டமாட்டாள். அந்தத் தருணத்துக்கு ஆபத்தில்லாமல் வந்தவளை உபசரித்து அனுப்ப இயலும். அப்பா இருக்கும்போது அது சாத்தியமில்லை. களுத ஒனக்குப் போடறதே தண்ட சோறு என்று அவள் எதிரிலேயே மானத்தை வாங்கிவிடுவார்.

புத்தகத்துடன் அவன் மீண்டும் வெளியே வந்தபோது வளர்மதி செம்பருத்திச் செடி அருகே நின்றுகொண்டிருந்தாள்.

‘அழகா இருக்கு’ என்றாள்.

‘எங்கம்மாதான் வெச்சாங்க. டெய்லி ரெண்டு மூணு பூக்கும்! ஒனக்கு வேணுமா?’

அவள் முகத்தில் இருந்த பரவசம் அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. அவள் கேட்பதற்கு முன்பே ஓடிச்சென்று இரண்டு பூக்களைப் பறித்து அவளிடம் நீட்டினான்.

‘இத ரோஜாவா நெனச்சிக்க வளரு.’

முறைத்தாள். ‘நீ இப்பிடியே பேசினன்னா நான் உன்னோட பேசவே மாட்டேண்டா குடுமி’ என்று சொன்னாள்.

‘அப்படி சொல்லாத வளரு. நான் பொய் சொல்லல. எதையும் மறைக்கல. நீ என்னா செஞ்சாலும் பரவால்லன்னுதானே நேர்ல சொல்லுறேன்?’

‘எனக்கு புடிக்கல. நான் நல்லா படிக்கணும். டாக்டரா ஆவணும்னு எங்க தாத்தா சொல்லியிருக்காரு. லவ்வு கிவ்வுன்னு பேசினன்னா உன்னோட பளகவே மாட்டேன்.’

அவன் அதிர்ச்சியடைந்தான். ‘ஐயோ அப்பிடியெல்லாம் சொல்லிடாத வளரு. நீ பேசலன்னா நா செத்தே போயிருவேன்!’

கண்கள் ததும்பிவிட்டிருந்தன.

‘சே, என்னாடா அசிங்கமா அளுதுக்கிட்டு. கண்ணத் தொட’ என்றாள். அவன் கையிலிருந்து புத்தகத்தை வெடுக்கென்று அவளே பிடுங்கிக்கொண்டாள்.

‘புக்க குடுக்க எவ்ளோ நேரம். வந்து படிக்க உக்காருன்னு சொன்னேன்ல?’

அப்பாதான். வாசலுக்கே வந்துவிட்ட வில்லன் வில்லாளன்.

வளர்மதி அவரை நிமிர்ந்து பார்த்தாள். வணக்கம் சார் என்று சொன்னாள்.

‘ஆங், ஆங். என்ன படிக்கற?’

‘பத்மநாபன் க்ளாஸ்தான் சார்.’

‘எத்தினியாவது ரேங்க் வாங்குற?’

‘செகண்ட் ரேங்க் வரும் சார்.’

‘யாரு ஃபர்ஸ்ட் ரேங்க்கு வாங்குவாங்க?’

‘பன்னீரு சார்.’

‘உம்ம்’ என்றார். சட்டென்று ‘இவன் எத்தன வாங்குவான்?’

வளர்மதிக்கு ஒருகணம் பேச்சு வரவில்லை. பத்மநாபனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் தீயில் நிற்பது போல் உணர்ந்தான். இப்படியெல்லாம் துர்த்தருணங்கள் எதிரிக்குக்கூட வரக்கூடாது என்று மனத்தில் தோன்றியது.  ஒரு பெண்ணின் எதிரே, அதுவும் மனத்துக்குள் எப்போதும் நினைத்தபடியிருக்கும் பெண்ணின் எதிரே பேச வேறு விஷயமா இல்லை? பார்த்த படங்கள், செய்த சாகசங்கள், அடித்த கொட்டங்கள், கனவு, காதல், கடிதம்…

அப்பாக்களைத் திருத்தமுடியாது. ஆயிரம் யுகம் கடந்தாலும் அது சாத்தியமில்லை. ஒரு சொல் போதும். ஒரு பார்வையேகூடப் போதும். துரும்பாகக் கிள்ளிக் கீழே வீசி, கட்டை விரல் முனையில் நசுக்கி எறிந்துவிடும் வல்லமை கொண்ட வில்லன் வேறு யார் இருக்கமுடியும்?

அவனுக்கு அப்பாவை சுத்தமாகப் பிடிக்கவில்லை. சே. எத்தனை கெட்டவார்த்தை பேசிவிட்டார். இதைவிடப் பெரிய அவமானம் வேறு இருந்துவிட முடியாது.

‘கேட்டனே, காது கேக்கல? நீ செகண்ட் ரேங்கு. இவன் எத்தினியாவது ரேங்கு?’

‘ஒ.. ஒம்போது.. பத்து வருவான் சார்.’

‘ம்ம்.. கேட்டுக்கடா. பொட்டச்சி செகண்ட் ரேங்க். வெக்கமா இல்ல?’

அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இதென்ன ஒப்பீடு? அருவருப்பாகத் தெரியவில்லை? அபத்தமாகப் படவில்லை? கேவலமாகத் தோன்றவில்லை? என்னைவிட அவள் நன்றாகப் படிக்கிறாள். நானும் முயற்சி செய்தால் செகண்ட், ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிவிட்டுப் போகிறேன். முடியாதா என்ன? அவசியம் முடியும். வளர்மதி தன் காதலை ஏற்றுக்கொண்டுவிடுகிற பட்சத்தில் இன்னுமேகூட சீக்கிரமாக முடியலாம்.

‘எப்பப்பாரு பசங்களோட சேர்ந்துக்கிட்டு மாங்கா அடிக்கப் போவுறது, கெணத்துல குதிச்சி கும்மாளமடிக்கப் போவுறது, தியேட்டருக்குப் போவுறதுன்னு அதுலயே இரு. உக்காந்து எப்ப படிக்கற நீயி?’

‘எல்லாம் படிக்கறேன். ஆங்..’ என்றான் மெல்லிய முறைப்புடன்.

‘கிழிச்ச’ என்று சொன்னார்.

வளர்மதி சிரித்தாள். அதுவும் எரிச்சல் தந்தது.

‘சரி சொல்லு. பலபடிச் சமன்பாடுகளின் மூலம் எது? விகிதமுறு எண்களா? விகிதமுறா எண்களா?’

பத்மநாபன் விழித்தான். படித்த மாதிரிதான் இருக்கிறது. மதியச் சாப்பாட்டுக்குப் பிறகான உடனடி மகாலிங்க வாத்தியார் வகுப்புகள் பொதுவில் அரைகுறையாகத்தான் மனத்தில் விழும். கண்கள் சொருகும் நேரத்தில் இம்மாதிரியான இசகுபிசகுகள் நேர்ந்துவிடுகின்றன. விகிதமுறு எண்கள். விகிதமுறா எண்கள். பகு எண்கள். பகா எண்கள். படுத்தும் எண்கள். பாவி எண்கள்.

‘நீ சொல்லும்மா. ஒனக்குத் தெரியுமா?’ வளர்மதியைப் பார்த்துக் கேட்டார் அப்பா. வளர்மதி அவனை ஒருகணம் பார்த்தாள். தருணம் தர்மசங்கடமாகிக்கொண்டிருக்கிறது. தப்பித்து வீடு போய்ச் சேர்ந்தாலே போதுமானது.

‘எல்லா விகிதமுறா எண்களையும் பலபடிச் சமன்பாட்டோட மூலமா பாக்கமுடியும் சார்’ என்று சொன்னாள். ‘சமன்பாட்டோட கெழு விகிதமுறு எண்ணா இருந்தாலும் மூலங்கள் விகிதமுறா எண்ணாத்தான் சார் வரும்’.

‘போடு. நீ படிக்கற புள்ள. இவனப்பாரு. திருவிழால திருடவந்தவன தேள் கொட்னாப்புல முழிக்கறத பாரு. என்னாடா படிக்கற நீயி? பன்னி மேய்க்கப்போற பாரு. உன்னையெல்லாம் பள்ளியோடத்துல சேர்த்து படிக்கவெச்சி..’

பல்லைக் கடித்தபடி அவன் காதைப் பிடித்து திருகியபடியே கையை உயர்த்தினார்.

வலித்தது. வளர்மதி பார்த்துக்கொண்டிருந்தபடியால் வந்த வலி. கண்ணில் நீர் நிறைந்துவிட்டது. இதற்குமேல் பெரிய அவமானம் என்று ஏதும் இருந்துவிட முடியாது.

‘நான் போயிட்டு வரேன் சார்’ என்று வளர்மதி சொன்னாள். பார்வை அவன்மீதே இருந்தது. அதில் பரிதாபம் தெரிந்தது.

‘டயம் கிடைச்சா இவனுக்கு கொஞ்சம் சொல்லிக்குடும்மா. பொட்டச்சி ஒனக்குத் தெரிஞ்ச துல கால்வாசி கத்துக்கறானா பாப்பம்.’

வளர்மதி இரண்டடி நடந்தாள். என்ன தோன்றியதோ சட்டென்று நின்றவள், திரும்பி, ‘பொட்டச்சின்னு சொல்லாதிங்க சார். பொண்ணுன்னு சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள்.

பத்மநாபனின் அப்பா அதிர்ச்சியடைந்துவிட்டார். சட்டென்று அவன் காதிலிருந்து அவரது அழுத்தம் விலகி நழுவியது. அவளை வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.

பத்மநாபனுக்கு சிறு சந்தோஷம் ஏற்பட்டாற்போலிருந்தது.

[தொடரும்]
Share

6 comments

 • >>> தன் விருப்பம் அல்லது விருப்பமின்மையை அம்மா வெளிக்காட்டமாட்டாள் <<>> பொட்டச்சின்னு சொல்லாதிங்க சார். பொண்ணுன்னு சொல்லுங்க <<

  இதையும் 🙂

 • ராகவன் சாரின் சிறு வயது பெயர் பத்மநாபனோ?

  • Athammohamed, எனக்கு சிறு வயது முதல் இந்த வயது வரை ஒரே பெயர்தான். பத்மநாபன் என்னுடன் 3ம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவன். பள்ளி நாள்களில் அவனைக் குடுமிநாதன் என்போம். பலவிதமாகத் தேடிவிட்டேன். இப்போது ஆள் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. சரி, கதையில் எழுதினாலாவது கண்ணில் பட்டு வருகிறானா என்று பார்க்கத்தான் பல கதைகளில் அவனை ஒரு பாத்திரமாக நுழைத்தேன். எனது சிறுவர் நாவல் புதையல் தீவிலும் அவன் இருக்கிறான். இதிலும் உண்டு. இன்னும் பல கேளம்பாக்கக் கதைகளிலும் உண்டு. என்ன ஒன்று, அவன் பெயருக்குள் பல பேரின் கேரக்டரை நுழைத்துவிடுகிறேன். என் கதைகளில் பத்மநாதன் செய்யும் பல அட்டூழியங்களுக்கு நிஜ பத்மநாபன் பொறுப்பல்ல;-)

 • /பள்ளி நாள்களில் அவனைக் குடுமிநாதன் என்போம். /
  அப்ப பனங்கொட்டை…..

  /என் கதைகளில் பத்மநாதன் செய்யும் பல அட்டூழியங்களுக்கு நிஜ பத்மநாபன் பொறுப்பல்ல;-)/

  இப்படி ஒரு ‘டிஸ்கி’யா ?! 😉

  • தென்றல், பனங்கொட்டையும் நிஜ கேரக்டரே. அவன் பெயர் ரவிக்குமார். திருவிடந்தையிலிருந்து கேளம்பாக்கம் பள்ளிக்கு வருவான். அவனோடும் இப்போது தொடர்பில்லை!

 • once again i finish the Novel with same speed, same curiosity. which brought all the past memories of my teenage life thanks to the Author P. Raghavan

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter