மயிலைத் திருவிழா படங்கள்

மயிலாப்பூர் ஃபெஸ்டிவல் நேற்று முதல் நடக்கிறது. நேற்று சில படங்கள் எடுத்தேன். சுமாராக வந்தவற்றுள் சில இங்கே.

பஜ்ஜிக்கடையில் வியாபாரம் அமோகம். மைலாப்பூர் மாமிகளின் கைவண்ணத்தில் ரவா கேசரி, வெண்பொங்கல், கிச்சடி, சுண்டல் வகையறாக்களும் உண்டு. இடம்: லேடி சிவசாமி பள்ளிக்கு வெளியே.

கோலக் குழல்கள் கொள்ளை அழகாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் விலை ரூ. 20

வீதியோர ஓவியர்கள் உட்கார வைத்து இருபது நிமிடங்களில் போர்ட்ரைட் வரைந்து தருகிறார்கள். படத்தில் நீங்கள் பார்ப்பது கிழக்கு எழுத்தாளர் சோம. வள்ளியப்பன். எதிரே அவரை வரைந்துகொண்டிருப்பவர் ஃப்ரேமுக்குள் வரவில்லை. கூட்டம் அதிகம்.

நுணுக்கமான கைவேலைப்பாடுகள் செய்யும் கலைஞர்கள் நிறையப்பேர் வந்திருக்கிறார்கள். மெஹந்தி போடும் பெண்களின் வேகம் பிரமிப்பூட்டுகிறது.

இன்னொரு சாலையோர ஓவியர். பெயர் மறந்துவிட்டது. இன்று கேட்டுவருகிறேன். இவர் ஓவியக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர். போர்ட்ரைட் அபாரமாக வரைகிறார். இவர் என்னை ஒரு படம் வரைந்து கொடுத்தார். என்னை வரைந்துகொண்டிருந்தபோது நான் எடுத்த படம் இது.

ஓவியர் என்னை வரைந்து முடித்த சமயம் தற்செயலாக அந்தப் பக்கம் வந்தார் ஓவியர் மாருதி. பல ஆண்டுகள் கழித்து அவரைச் சந்தித்தேன். இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. என் ஓவியத்தை அவரைக்கொண்டு வெளியிட்டு அற்ப சந்தோஷப்பட்டேன்.

குளக்கரையை ஒட்டிய வீதியில் நீளமாக கிழக்கு ஸ்டால். ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் களைகட்டிக்கொண்டிருக்கிறது. மக்கள் ஆர்வமுடன் புத்தகங்கள் வாங்குகிறார்கள். அதிகம் விற்பவை ஆன்மிக நூல்களே. ஸ்டாலின் நீளம் அதிகமென்றாலும் அகலம் குறைவு என்பதால் அரங்கினுள்ளே பிரசன்னா இல்லை.

மேலும் சில படங்கள் உள்ளன. ஆனால் அப்லோட் அதிக நேரமெடுப்பதால் போரடிக்கிறது. முடிந்தால் நாளை இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.

இன்று மாலை 5.30 மணியிலிருந்து மைலாப்பூர் திருவிழாவில்தான் சுற்றிக்கொண்டிருப்பேன். வரக்கூடிய வாய்ப்புள்ள நண்பர்க்ளை அங்கே சந்திக்க விருப்பம்.

Share

6 comments

 • // என்னை வரைந்துகொண்டிருந்தபோது நான் எடுத்த படம் இது.//
  எழுத்தாளர் பேயோனோடு சேராதீங்க, சேராதீங்கன்னு தலையில் அடிச்சிக்கிட்டேனே? கேட்டீங்களா? இப்போ பாருங்க எப்படி எழுதறீங்கன்னு 🙂

 • //ஸ்டாலின் நீளம் அதிகமென்றாலும்//
  ஸ்டாலின் நீளம் அதிகமா? அப்ப அழகிரி நீளம்? 😉
  – மொக்கை சொக்கனு 😉

 • பாரா,
  ரொம்ப நாள் கழித்து உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.  நாம் சென்ற முறை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தது உங்களுக்கு நினைவு இல்லை. ஆனால், அதை என்னால் மறக்க முடியாது. என் கையில் இருந்த லா.ச.ரா-வின் ‘புத்ர’-வைப் பார்த்து, “இது கஞ்சாய்யா”, என்றீர்கள். சத்தியமான வார்த்தை.
  மயிலைத் திருவிழாவை ஏன் எந்தப் பத்திரிக்கையும் கண்டுகொள்ளவில்லை?
   
   
   

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter