இல்லாத நாட்டுக்குச் சென்று வருதல்

நீ போக விரும்பும் வெளிநாடு எது என்னும் வினாவை என் மகள் பலமுறை கேட்டிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் நான் சொல்லும் பதில், சோவியத் ரஷ்யா.

அவளுக்கு சோவியத் தெரியாது. அது எப்படி இறந்தது என்று தெரியாது. இப்போதைய ரஷ்யாவின்மீது எனக்கு ஆர்வமில்லை என்பதையும் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் இக்கேள்வி திரும்பத் திரும்ப வரும். நான் என்றுமே செல்ல வாய்ப்பில்லாத அக்கற்பனை தேசத்தை மீண்டும் மீண்டும் நினைவுகூர்வேன். ஒரே காரணம்தான். அவளுக்கு நான் விவரிக்கும் சோவியத் நிலக் காட்சிகளைக் கேட்கப் பிடிக்கும். எனக்கு அதைச் சொல்லும்போதே மானசீகத்தில் அங்கே போய்வரப் பிடிக்கும்.

ஒரு மாபெரும் தேசத்தை மனத்துக்குள் அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப வடிவமைத்துக்கொண்டு அங்கே வாழ்ந்து பார்க்க வைப்பது எளிதல்ல. நானறிந்து சோவியத் எழுத்தாளர்கள் மட்டும்தான் அதை சாதித்திருக்கிறார்கள். வாசிக்கத் தொடங்கிய நாள்களில் தல்ஸ்தோய், தஸ்தயெவ்ஸ்கி, துர்க்கனேவ், செகாவ், கார்க்கி, பாஸ்தர்நாக், நபக்கொவ் போன்றவர்களெல்லாம் எனக்கு உடன் படிக்கும் மாணவர்களின் அளவுக்கே நெருக்கமானவர்களாக இருந்தார்கள். ஒரு நான்கு பக்கமாவது ஏதாவதொரு ரஷ்ய நாவலைப் படிக்காத நாள், நாளே அல்ல. ஒரு கட்டத்தில் அது ஒரு பெரும் போதையானது.

ஏனெனில், ரஷ்ய நாவல்கள் காட்டிய நிலவியலும் வாழ்வியலும் கதை என்பதைத் தாண்டி ஒரு தேசத்தின் ரகசிய வரைபடமாகவே நினைவில் சென்று தங்கும். அந்தப் பனிப் பொழிவு. அந்தப் பெண்களின் பேரழகு. கூட்டுப் பண்ணை விவசாயிகளின் கடின உழைப்பு. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள். பிரபுக்களின் அட்டகாசங்கள். நீங்கள் எந்த ரஷ்ய எழுத்தாளரை வேண்டுமானாலும் திரும்ப எடுத்து வாசித்துப் பாருங்கள். ஒரு பெண்ணை வர்ணித்து ஒரு பத்தி வருமானால் உடனே நிலத்தை வர்ணிப்பார்கள். நிலத்தைக் குறித்துப் பேசி முடிக்கும்போதே மன்னராட்சியின் மீதான விமரிசனம் ஒன்று வரும். ஒரு பக்கம் நகர்த்தினால், இரவு வீடடைந்து காடா விளக்கு வெளிச்சத்தில் இரண்டு ரொட்டிகளைத் தின்றுவிட்டு உடனே கிளம்பிச் சென்று தோழர்களுடன் நிலவறையில் புரட்சிக்கான திட்டம் தீட்டும் வீரக் கதாநாயகர்கள் வருவார்கள். புரட்சித் திட்டங்களுக்கோ, ராஜதுரோகச் செயல்பாடுகளுக்கோ நான் படித்த ரஷ்ய நாவல்களில் வரும் தாய்மார்கள் மறுப்பே சொன்னதில்லை. என் அம்மா மட்டும் ஏன் எப்போது பார்த்தாலும் படி படி என்று உயிரெடுக்கிறாள் என்று பள்ளி நாள்களில் மிகவும் ஏங்குவேன். எப்படியாவது சோவியத்துக்குச் சென்று ஏதாவது ஒரு புரட்சிக் குழுவில் சேர்ந்துவிட வேண்டும் என்று துடிப்பேன். அன்று என்னால் முடிந்ததெல்லாம், புரட்சியில் சேர விரும்பி முன்னேற்றப் பதிப்பகத்துக்குக் கடிதங்கள் எழுதி வைத்துக்கொண்டு ரா. கிருஷ்ணையாவின் முகவரி கிடைக்குமா என்று பார்ப்போரிடமெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தது மட்டும்தான்.

சோவியத் இறந்ததுடன் முன்னேற்றப் பதிப்பகம் இறந்துவிட்டது. ரஷ்ய நாவல்களின் வரத்து குறைந்துவிட்டது. இப்போது சில பதிப்பகங்கள் முக்கியமான நாவல்களை மொழியாக்கம் செய்து பிரசுரிக்கின்றன. ஆனால் அவை எதுவுமே முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ரா. கிருஷ்ணையா மொழியாக்கங்கள் அளித்த பரவசத்தைத் தருவதில்லை. சில நாவல்களில் ரஷ்ய ஓவியர்கள் வரைந்த ஓவியங்களும் இருக்கும். கறுப்பு வெள்ளைதான் என்றாலும் பார்த்த கணத்திலேயே கடவுச் சீட்டுத் தேவைகள் இல்லாமல் நம்மைத் தூக்கி பீட்டர்ஸ்பர்க்கில் போட்டுவிடும்.

என்னிடம் ஏராளமான ரஷ்ய நாவல்கள் இருந்தன. ஒவ்வொன்றையும் குறைந்தது இரண்டு முறையாவது படித்திருப்பேன். யார் யாரோ எடுத்துச் சென்றது போக இன்று மிஞ்சியிருப்பது இரண்டு மூன்று நாவல்கள்தாம். யாராவது பழைய முன்னேற்றப் பதிப்பக வெளியீடுகளை மொத்தமாகக் கொடுத்தால் சேவித்துவிட்டு வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின் குறித்து முன்பு எழுதிய ஒரு குறிப்பு

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!