சூனியனின் விரிவான திட்டம் பற்றி இந்தப் பகுதி விளக்குகிறது. நீலநகரத்தைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர நினைக்கிறான் சூனியன்.
அதற்கு முன்பாகக் கோவிந்தசாமியின் மனைவியைப் பற்றியும் அவனுக்கும் கோவிந்தசாமிக்குமான உறவுநிலை பற்றியும் உய்த்தறிய முயற்சி செய்கிறான். அதற்கும் கோவிந்தசாமியின் நிழல் தன்னிடம் கூறியதற்கும் எந்த விதமான ஒற்றுமையும் இல்லாமையைக் கண்டு, சினம் கொள்கிறான் சூனியன்.
சூனியன் தன் நிலைவிளக்கமாகச் சூனியர்களின் பிறப்பு, வளரும் விதம், நோக்கம் ஆகியன பற்றிக் கூறுகிறான். மனிதர்கள் சறுக்கும் இடங்களைப் பற்றிய தனது கருத்துகளை முன்வைக்கிறான் சூனியன்.
இவற்றின் ஊடாக மனிதகுலத்துக்கும் சூனியர்களின் குலத்துக்கும் இடையே உள்ள மாபெரும் இடைவெளியை வாசகரே உணர்ந்துகொள்ளுமாறு செய்துவிடுகிறான் சூனியன். கோவிந்தசாமியின் மனைவியின் மனப்பதிவை ஆராய்வதற்காகச் சூனியன் அவளின் மூளைக்குள் செல்கிறான்.