இந்த அத்தியாயம், நம் சூனியனே நம்மிடம் கதை சொல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு நாம் சூனியனின் பார்வையில் கதை கேட்கிறோம். விறுவிறுப்பு குறையாமல் நகர்கிறது.
அவனது யோக நித்திரையில் தொடங்குகிறது அத்தியாயம். அவன் ஆயிரமாயிரம் பிரதி பிம்பங்களைப் படைக்கிறான். அவனுக்காகப் போரிட போகின்றனர் எனவும் கூறுகிறான்.
அறிஞர்கள், அழகிகள், கவிஞர்கள், அரசியல்வாதிகள், சாதாரணர்கள், மல்லர்கள், அரைகுறைகள், சிந்தனை சிற்பிகள், இலக்கியவாதிகள், என வரிசையாக அவனது பிரதிகளை உருவாக்கிக் கொண்டே போகிறான்.அவன் படைப்புகள் தோன்றும் போதே புகழோடு தோன்றுகின்றனர் என்றும் மெச்சிக் கொள்கிறான்.
கோவிந்தசாமியை சாடாமல் இருப்பாரா நம் சூனியன். தன் மூன்றாம் கண்ணைப் பறவையாக்கி மூன்று தரப்பினரையும் பார்வையிட ஆரம்பிக்கிறான். கோவிந்தசாமி ஒரு கொலை செய்ததாக வெண்பலகையில் செய்தி படித்ததும் வழக்கம்போலப் பதறுகிறான் ஒரு பக்கம். நற்குண சீலனின் ரசிகர் மன்ற உறுப்பினர்போல வேடம் தரித்த “ரசிப்பான்”, நம் சாகரிகாவை சாடுகிறான் இன்னொரு பக்கம். மீண்டும் கோவிந்த்சாமியின் நிழலை நோக்கித் தன் கண்ணை அனுப்பிவிட்டு மீண்டும் நித்திரையில் ஆழ்ந்துவிடுகிறான்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!