மொட்டைமாடியில் விக்கிபீடியா

இன்று [சனிக்கிழமை 13.6.2009] மாலை 6 மணிக்கு கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார். சாத்தியமுள்ள அனைத்து சென்னைவாழ் நண்பர்களையும் கலந்துகொள்ள அழைக்கிறேன். உபயோகமான விஷயம்.

இது பற்றி ரவிசங்கர் அனுப்பியிருந்த குறிப்பு:

இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன. ஆனால், இந்தத் தமிழ் உள்ளடக்கம் பெருமளவு பக்கச் சார்புடையதாகவும், கருத்து சார்ந்ததாகவும், அரசியல்-திரைப்படம்-சமையல்-ஆன்மிகம்-கிரிக்கெட் என்று குறுகிய வட்டத்தில் உழல்வதாகவும் உள்ளது. கல்வி நோக்கில் ஒரு தலைப்பு குறித்துத் தேடினால், தகவலை முன்வைத்து நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகள் குறைவே.

ஆங்கிலத்தில் இந்தத் தேவையை நிறைவு செய்ய ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது ஆங்கில விக்கிபீடியா. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கலைக்களஞ்சிய ஆங்கிலக் கட்டுரையைப் புரிந்து பயன்படுத்தும் மக்கள் 30 விழுக்காடாவது இருப்பார்களா என்பது கேள்விக்குரியது.

ஆங்கிலம் போல் தமிழில் ஏராளமான தகவல் தளங்கள் இல்லை. தமிழ் விக்கிபீடியா மட்டுமே ஒரே ஒருங்கிணைந்த தகவல் தளமாக இருப்பதால், தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டியது முக்கியம். கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ் விக்கிபீடியாவில் 18,000+ கட்டுரைகளே உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க அளவு குறுங்கட்டுரைகள். இன்னும் பல முக்கிய துறைகளைக் குறித்து அடிப்படைக் கட்டுரைகள்கூட இல்லை. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது இருந்தாலே ஒரு குறைந்தபட்ச பயனை நல்க இயலும்.

தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்க இருக்கும் மிகப் பெரிய தடைகள்:

* கணினியில் தமிழில் எழுதத் தெரியாமை.
* தமிழில் கோர்வையாகக் கட்டுரை எழுத இயலாமை.
* இணையம் குறித்த அடிப்படை அறிவின்மை. வலையில் எழுதும் பழக்கமின்மை.
* சரியான கணினி, இணைய வசதிகள் இல்லாமை.

தமிழ் வலைப்பதிவர்கள், இந்தத் தடைகளைக் கடந்தவர்கள். பல நாடுகளில் இருந்து பல துறைகள் குறித்து எழுதக்கூடியவர்கள். எனவே, வலைப்பதிவர்களிடம் இருந்து பெரிய அளவில் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். இருப்பினும், ஏறத்தாழ பத்து தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களித்து வருகிறார்கள். வலைப்பதிவர்கள் பங்களிப்பதற்கான தடைகள்:

* பிளாகர், வேர்டுபிரெசு போல மீடியாவிக்கி மென்பொருள் பயன்படுத்த இலகுவாக இல்லாமை.
* வலைப்பதிந்தால் மறுமொழிகள், நண்பர்கள், ஊடக வாய்ப்புகள் என்று பயன்கள் கிட்டுவது போல விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பதால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வி.
* விக்கிபீடியா செயல்படும் தன்மை பற்றி தெளிவின்மை. (நான் எழுதும் கட்டுரையை இன்னொருவர் எப்படித் திருத்தலாம், திருத்தினால் நான் எழுதியது வீணாகாதா, விக்கிபீடியா நடுநிலையானதா, மற்ற பங்களிப்பாளர்களிடம் மல்லுக்கட்டி நேரம் போகுமா, ஆங்கில விக்கிபீடியா போல் இங்கும் பிரச்னை வருமா… போன்ற கேள்விகள்.)

வலைப்பதிவர்கள் மனத்தில் இருக்கும் இக்கேள்விகளுக்கு விடை அளிக்கும் முகமாகவும், கூடிய பங்களிப்புகளை வேண்டியும் இந்தக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்:

* விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்.
* விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது எப்படி? ஒரு பத்து நிமிட அறிமுகம்.
* விக்கிபீடியாவுக்கு வலைப்பதிவர்கள் எப்படிப் பங்களிக்கலாம்?
* கேள்வி-பதில், கலந்துரையாடல்.

அனைவரும் வருக!

Share

5 comments

  • தமிழ் விகியில் ஒரு தலிபான் குழு இயங்குகிறது. அதன் முக்கிய நோக்கம் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை எடுக்க வேண்டும். அதனால் மற்றவர்கள் கட்டுரை எழுத வேண்டும், இவர்கள் சென்று கிரந்த எழுத்துகளை மாற்ற வேண்டும். அது தவிற, சமஸ்கிருத சம்பந்த வார்த்தைகள் இருந்தால், அதை `சுத்த` தமிழில் எழுத வேண்டும். தமிழ்விகியை கண்ட்ரோல் செய்யும் 4/5 நபர்கள் இந்த புல்லுரிவு கொள்கையைத்தான் தீவிரமாக கடைப் பிடிக்கின்றனர். உதாரணமாக `இஸ்லாம்` என கட்டுரை யாராவது எழுதினால், அதை `இசுலாம்` என மாற்றுவர். யாராவது லத்தீன் கவி ஹோரேஸ் என கட்டுரை எழுதினால், அதை ஓராசு என மாற்றுவர்.

    மு.க.ஸ்டாலின் பெயரையும், இசுட்டாலின் என மாற்றினர். ஆனால் இதற்கு நீண்ட சர்ச்சைகளுக்கு பின் ஸ்டாலின் என மாற்றப் பட்டது. இந்த தலிபானின் கூற்றுப்படி தமிழ்விக்கி , ஊடகங்கள், தமிழிலக்கியம், சாதாரண தமிழரகளின் தமிழ் எழுத்துகள், இவையெல்லாம் கிரந்த எழுத்துகளால் கெடுக்கப் படுவிட்டன. தமிழ்விகி, புதிய கிரந்தம் தவிற்கும் ஊடகம். அதனால் மற்றவர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும்; இந்த தலிபான் குழு அதிலிருந்து கிரந்த எழுத்திகளையும், வட மொழி வார்த்தைகளையும் அகற்ற வேண்டும். இதுவே இவர்களது புல்லுருவி கொள்கை. இந்த intellectual vandalism நிறுத்தாத வரை, மற்றவர்கள் தமிழ்விகியில் போகக் கூடாது.

    இந்த தலிபான் குழு இப்படி ஆயிரக்கணக்கான இடங்களில் வேண்டலிசம் செய்துள்ளது.

    சுக்ரன்

    • சுக்ரன்: முன்பொரு சமயம் ரவிசங்கரிடம் தமிழ் விக்கி பற்றிக் கொஞ்சம் பேசிய நினைவு. கட்டுரைகள் அதில் வாசிக்கும்படி இல்லை என்பதுதான் என் கருத்து. நிறைய சரி செய்யவேண்டியிருக்கிறது. ஆனால் தொடக்கத்திலேயே குற்றச்சாட்டுகளால் மூடி, யாரும் நெருங்காதிருக்கச் செய்வது சரியெனத் தோன்றவில்லை.

      சில நாள்கள் முன்னர் என். சொக்கன் என்ற பெயரைக்கூட நா. சொக்கன் என்று மாற்றிவிட்டார்கள் என்று சொக்கன் சொன்னான். இது அபத்தம் மட்டுமல்ல. அத்துமீறலும்கூட. ஓர் எழுத்தாளரின் பயன்பாட்டுப் பெயரை அவரது அனுமதியில்லாமல் மாற்ற யாருக்கும் உரிமையில்லை. ஜார்ஜ் புஷ்ஷை சார்சு புச்சு என்று எழுத இயலுமா. பாகிஸ்தானை பாக்கிசுத்தான் என்கிறார்கள். இதெல்லாம் தமிழ் வளர்ப்பல்ல, தமிழ் ஒழிப்பே. வாசகன் நெருங்கவே மாட்டான்.

      இன்னமும்கூடப் பல பிரச்னைகள் இருக்கின்றன. இலங்கை தொடர்பான விஷயங்களில் நிறைய இடங்களில் பட்டும்படாமலும் எழுதுகிறார்கள். எழுதிக்கொண்டே வருவோர், பிரச்னைக்குரிய இடம் வந்தால் தடாரென்று டைவ் அடித்துவிடுகிறார்கள். இது பற்றியெல்லாம் இன்று பேச எண்ணியிருந்தேன். துரதிருஷ்டவசமாக இன்றைய கூட்டத்தில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. இன்னொரு சமயம் தமிழ் விக்கி பற்றி எனக்குத் தோன்றுவதை விரிவாக எழுதுகிறேன்.

  • சார், தொடக்கத்திலேயே குற்றச்சாட்டுகளால் மூடி… என்கிறீர்கள். இதை இரண்டு விதமாக பார்க்கலாம். இது தொடங்கி 3/4 வருடம் ஆயிடுத்து. அதனால் இப்பொழுது `தொடக்கம்` என சொல்ல முடியாது. உண்மையில், தொடக்கத்தில், அதாவது 3 வருடம் முன் , இப்படி தலிபான் தீவிரம் இல்லை. இப்போ, 4. 5 பெயர்களின் unhealthy influence ஆல் , புல்லுருவி இயக்கம் மும்மரமாக இருக்கிரது. இந்த தலிபான் குழு இப்பொழுதே எல்லாவற்றையும் , grantha-free ஆக்கிவிட்டால், மற்றவர்களும் அதையே பின்பற்றுவார்கள் என நினைக்கிரது. மேலும் விக்கியே, தகவல் கொடுக்கும் இடம் தானே தவிர, ஒருவரின்/அல்லது ஒரு சிலரின் சாய்வுகளை நிறைவேற்றும் இடம் இல்லை.

    எது விகிபீடியா இல்லை என்று http://en.wikipedia.org/wiki/Wikipedia:What_Wikipedia_is_not சொல்கிறது. விக்கி ரூல்களே, இது Wikipedia is not a soapbox, propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise. என உறுதியாக உள்ளன. ஆனால் இந்த புல்லுரு்வி தலிபான், தமிழ் விக்கியை கிரந்த ஒழிப்பு மேடையாகத்தான் பயன் படுத்துகிரது.

    அதனால் கட்டுரைகள் பொதுவாக `சப்` என்று உள்ளன. அதற்கு மேல் எவ்வளவோ தகவல், இணப்பு, இலக்கண குறைபாடுகள். ஆங்கில விக்கியோட, தமிழ் விக்கியை கம்பேர் செய்தால், தமிழர்களுக்கு தெரிந்த சப்ஜெக்டான ` காமராசர் வாழ்க்கை, அல்லது ராஜாஜி அல்லது அண்ணாதுரை வாழ்க்கை, பத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

    சுக்ரன்

  • கூட்டம் பற்றிய அறிவிப்புக்கு நன்றி, பாரா. நேற்று நடந்த கூட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா, ஆங்கில விக்கிப்பீடியா பற்றி வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் உரையாடினோம். தமிழ் விக்கிப்பீடியா செல்ல வேண்டிய தூரம், சில செயல்பாபடுகளில் தேவைப்படும் மாற்றம் குறித்து உணர்ந்திருக்கிறோம். நன்றி.

  • சார் மன்னிக்கனும் ஐயா – தமிழ் விக்கி மேட்டர் தெரியாது போலிருக்கு. பாபா மற்றும் நான் எல்லாம் ஏற்கனவே நீண்ட விவாதம் செய்த விஷயத்தைத் தான் நீங்களும் சொல்கிறுகீர்கள். ஏன் பாலாஜி என்று எழுத விரும்பாமல் Balaji என்றே உரையாடல் நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளவும்.

    எம்.ஜி.ஆர் பெயரையே மாற்றி எழுதியுள்ளார்கள். ஜார்ஜ் புஷ் எல்லாம் எம்மாத்திரம் ? எனவே நீங்கள் எம்.ஜி.ஆர் என்று தேடினால் அந்த பக்கம் கிடைக்காமல் போகவும் வாய்ப்புகள் உள்ளன்.

    சில சுட்டிகள் , இதில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன ஆனால் சில சண்டையும் உள்ளன. படித்து பாருங்கள் – நான் இந்த விவாதத்திற்கு ‘விடாது கருப்பு’ என்றே பெயர் வைத்துள்ளேன்.

    http://blog.ravidreams.net/கிரந்தம்/
    http://blog.ravidreams.net/f/

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!