காக்கை வளர்ப்பு

அந்தக் காகம் எப்போதிருந்து சிநேகமானது என்று சரியாக நினைவில்லை. எனக்கு மிகவும் பிடித்தவர்களாக இருந்து, இறந்துபோன என் தாத்தா அல்லது மாமனார் இருவரில் ஒருவராக அது இருக்கலாம் என்று என்றோ ஒருநாள் தோன்றியது. மறு பிறவியில் நம்பிக்கையில்லாதவன்தான். ஆனாலும் சமயத்தில் இப்படியும் தோன்றுவது, என்னைக் கேட்டுக்கொண்டல்ல.

சமையல் அறையை ஒட்டிய சிறு பால்கனியின் கைப்பிடிச் சுவரில் வந்து உட்காரும். எனக்குப் புரியாத மொழியில் ஒருசில வரிகள் பேசும். பசிக்கறதா என்று கேட்பேன். ஒருவேளை தாகமெடுக்கிறதோ என்றும் நினைப்பேன். ஒரு கரண்டி சாதம் எடுத்துச் சென்று கைப்பிடிச் சுவரின் ஓரத்தில் வைக்கப்போனால், தொடக்கத்தில் சட்டென்று பறந்து சன் ஷேடில் ஏறி உட்கார்ந்துகொள்ளும். நான் நகர்ந்த பிறகு வந்து சாப்பிடும். கதவருகே நின்று பார்ப்பேன்.

சில நாள்கள் ஆனபிறகு எனக்கு அந்த நடைமுறை கொஞ்சம் கோபம் தந்தது. ஒருநாள் சத்தம் போட்டேன். ‘உனக்காகத்தானே எடுத்துண்டு வரேன்? கிட்ட வரப்ப நகர்ந்துபோனா என்ன அர்த்தம்? என்னை என்ன வேலவெட்டி இல்லாதவன்னு நெனச்சியா?’

என் மகள் சிரித்தாள். ‘ஐயே, காக்காக்குப் போய் நீ பேசறது புரியுமா?’

‘புரியணும்’ என்றேன், அதற்கும் கேட்கும்படியாக. ‘தபார், இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இன்னொருவாட்டி நான் கிட்ட வரப்ப நகர்ந்துபோனன்னா, அதோட போயிடு. வேளைக்கு என்கிட்ட சாதம் எதிர்பார்க்காத.’

காக்கைக்குப் புரியும் என்று நான் நினைத்தது பிழையல்ல. அதற்குப் புரிந்தது! அடுத்தமுறை நான் சாதம் எடுத்துச் சென்றபோது அது பயந்து பறக்கவில்லை. அமர்ந்த இடத்திலேயே இருந்தது. நான் சாதத்தை அதன்முன் வைத்தேன். ‘சாப்பிடு’ என்று அன்போடு சொன்னேன். சாப்பாட்டு வேளையல்லாமல், மற்ற நேரங்களில் வந்து அமர்ந்தாலும், நான் கிட்டே போய் நின்றால் நகராது. அந்நியன் என்னும் அச்சம் காட்டாது.

என் மகளுக்கு இக்காட்சி வியப்பாக இருந்தது. ஓரிரு நாள்களில் அவளும் காகத்துடன் பேசத் தொடங்கினாள். அது வந்து உட்கார்ந்து ஒரு சத்தம் போட்டதும், ‘அம்மா, காக்காக்கு பசி வந்துடுத்து’ என்று அறிவிப்பாள்.

காகத்துக்கு சாதம் வைப்பது என்பது எல்லார் வீடுகளிலும் செய்வதுபோன்ற சம்பிரதாய ஒரு கரண்டி வெள்ளைச் சோறல்ல என் வீட்டில். நான் சாப்பிடுகிற அனைத்தும் அதற்கும் உண்டு என்று யாரும் அறிவிக்காமலேயே ஏற்பாடானது. குழம்பு, ரசம், பொறியல், கூட்டு, பச்சடி, குடைமிளகாய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், மாம்பழம், வாழைப்பழம், சுண்டல், மசால்வடை – இன்னதுதான் என்றில்லை. மாவா தவிர மற்ற அனைத்தும் அதற்கும் உண்டு. ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது ஒன்றுதான் இன்னும் மிச்சம்.

பிராந்தியத்தில் உலவும் ஏழெட்டு காகங்களில் எங்கள் காகத்தை என்னால் மிகச் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது இப்போதெல்லாம். அது வந்து உட்காருவதில் காட்டுகிற சுவாதீனம் மற்ற காகங்களிடம் இருப்பதில்லை. நம்ம வீடுதான், சங்கோஜப்படாம வாங்க என்று அது மற்றவர்களிடம் சொல்லி அழைத்துவரும் என்று நினைக்கிறேன். நாலைந்து நண்பர்களுடன் அது சாப்பிட்டு முடிக்கும்போது, ‘நல்லாருந்ததா?’ என்று நான்   கேட்கத் தவறுவதில்லை. ஓ சூப்பர் என்று கத்திவிட்டுப் பறந்து போக அதுவும் தவறுவதில்லை.

நேற்றுத்தான் கவனித்தேன். பால்கனியில் ஒரு குட்டி பக்கெட் நிறைய நீர் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது. அட என்றேன், வியப்பாக. ‘தெரியாதா? வெயில் காலம். தாகம் எடுத்தா அது இங்கதான் வரும்’ என்றாள் மனைவி.

சொல்லிவைத்த மாதிரி அடுத்த ஐந்து நிமிடத்தில் காகம் வந்துவிட்டது. கல் போட்டு மேலெழுப்ப அவசியமில்லாமல், நிரம்பித் ததும்பும் பக்கெட் தண்ணீர். விளிம்பில் உட்கார்ந்துகொண்டு ஆனந்தமாக அது தண்ணீர் குடிப்பதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. வரும்போது மூக்கில் ஒரு பெரிய குச்சியைக் கவ்வி எடுத்து வந்திருந்ததை கவனித்தேன். அதைக் காலடியில் இடுக்கிக்கொண்டுதான் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது.

‘அதென்ன குச்சி?’ என்றேன்.

‘வீடு கட்டப்போறது போலருக்கு. இடம் தேடிண்டிருக்கு. டெய்லியே ஒரு குச்சியோடதான் இப்பல்லாம் வருது’ என்றாள் என் மனைவி.

என் தாத்தாவோ, மாமனாரோ இறுதிவரை தமக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்டாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். இது கட்டி கிரகப்பிரவேசம் செய்தால் கண்டிப்பாக எனக்கு அதைச் சுட்டிக்காட்டாமல் இராது என்று உறுதியாகத் தோன்றியது.

மறுபிறவி குறித்த என் சந்தேகம் அல்லது அவநம்பிக்கை அன்று நிச்சயமாகத் தீர்ந்துவிடும். எப்படியும் ஆடி முடிந்துதான் நாள் குறிக்கும் என்று நினைக்கிறேன்.

Share

45 comments

 • ஐயா, காக்கை உங்களை வளர்க்கிறது. ஆனா நீங்கள் காக்கையை வளர்ப்பது போல் எழுதியிருக்கிறீர்கள். கண்டனங்கள்.

 • ஊட்டி காவியமுகாமில் நாஞ்சில் நாடன் ஒரு விசயம் சொன்னார். அவர் வீட்டில் காக்காவுக்கு சப்பாத்தி போடும் போது கூடவே ஒரு தட்டில் நீரும் வைத்துவிடுவார்களாம். பிய்த்துப் போடும் உலர்ந்த சப்பாத்தித் துண்டுகளை காகம் நீரில் முக்கி உண்ண ஆரம்பித்ததாம். காக்கை என அலட்சியப்படுத்தாமல் அவற்றின் நடவடிக்கைகளை அதன் மூலம் இயற்கையை உன்னிப்பாக கற்று ஆச்சரியத்துடன் வளர காக்கைக்கு உணவளிப்பது ஒரு நல்ல வாய்ப்பு. நன்றி ராகவன்’ஜி’.

  • அரவிந்தன், தகவலுக்கு நன்றி. ஆனால் அநியாயத்துக்கு ஜி போட்டு என்னை அசிங்கமாக காங்கிரஸ்காரன் மாதிரி உணரவைக்காதீர்கள்.

 • நானும் தினமும் ஒரு காகத்தோடு பழக முயன்று கொண்டிருக்கிறேன். அந்தக் காகத்திடம் நான் காட்டும் பரிவைப் பார்த்து பரிதாபப்பட்டு பக்கத்து வீட்டு நாய் என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டிருக்கிறது.. ‘பாவம்யா நீ..’ என்பது போல..

  பழகிவிடும் என்று நினைக்கிறேன். இரண்டில் ஒன்று.

 • தாத்தாவா மாமனாரா அப்படின்னு சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க 🙂

 • சனி பகவானுடன் பேசி உணவளிக்கும் உங்களை ஜி போட்டு அழைக்காவிட்டால் அந்த ஜிக்குத்தான் என்ன மரியாதை? இல்லையா அஜிரஜிவிஜிந்ஜிதஜின்ஜி?

 • காக்காவுடனான எனது அனுபவங்கள் கூட சுவாரஸ்யமானது தான். நாம் பேசுவது நமது நோக்கம் எல்லாம் அதற்கு நன்கு புரியும். ஒரு காக்கா ஆசாரப் பாட்டி மாதிரி சுத்தம் எல்லாம் பார்க்கும். பழசைத் தொடாது. காலையில் சாதம் தொடாது. டிபன் தான். கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டுச் செல்லும்.
  http://www.virutcham.com/2011/03/ஜன்னல்-காக்காவும்-கோவில்/

 • திரு பாரா,

  இது உண்மையா அல்லது கற்பனையா என்பது தெரியவில்லை. ஆனால், பிற உயிர்களை பேண வேண்டிய கடமையையும், இயற்கையை ரசிக்கும் மனதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுப்பது பாரட்ட வேண்டிய செயல். நெல்லையில் எங்கள் வீட்டிற்க்கு இரண்டு மயில்கள் வரும், என் பெண்கள் தரும் உணவை ரசித்து உண்டு செல்லும்.

 • ஆடி மாதம். காக்கா கூடு கட்டி தன் தலைமுறை வளர்க்கும் காலம். எங்காவது பக்கத்துக்கு மரத்தில் கூடு கட்டி முட்டை வைத்து விட்டிருந்தால் சொட்டைத் தலை பத்திரம். அப்போ காக்கா பித்ருவாய் இருந்ததா சத்ருவை மாறிவிட்டதா என்பதை உணவிட்ட கை என்பதால் தலையை விட்டு வைத்ததா என்பதை மாசக் கடைசியில் மறக்காமல் எழுதிவிடவும். சாதாரணமாக அடையாளம் கண்டு கொண்டு அடக்கி வாசிக்கும்.

 • ‎//எப்படியும் ஆடி முடிந்துதான் நாள் குறிக்கும் என்று நினைக்கிறேன்.//-“ஆடியில் குடிபுகுதல்” பற்றிய சந்தேகமும் தீர்ந்துவிடும் ……

 • மாவவை தவிர ….classic…
  அப்பறம் மறக்காம குடைமிளகாய் சாதம் எப்படி செய்யறதுனு சொல்லுங்க

 • உள்ளதை உள்ளபடியே..நடந்ததை நடந்தபடியே.. தீட்டும் (எழுதும்)உங்கள் ஓவியம் (கட்டுரை) பதே பதே…பலே பலே…!!!!

 • இதேப் போல் நாங்கள் பள்ளியில் ஒரு அணிலுக்கு அளிப்பதுண்டு,அதுவும் எங்கள் பாஷையை நன்குப் புரிந்துக் கொள்ளும்

 • ஆநி சார் நீங்க ஏன் ஒரு ஜி போட்டிங்க 3 ஜி போட்டு இருக்கனும் இல்ல சோனியா ஜி ராகுல் ஜி பிரியங்கா ஜி ன்னு 3 ஜி இருகாங்க இல்ல அதான் சாருக்கு கோவம் …

  அப்பறம் ஆநி சார் வீர்சவர்கர் எழுதின முதல் சுதந்திர போர் அப்பறம் அவர் அநேகமா லண்டன் ல இருந்த அப்பா எழுதினதுன்னு நினைக்கறேன் சரியாய் நியாபகம் இல்லை மாஜினியின் வரலாறு இந்த இரண்டு புத்தகங்களையும் நீங்கள் வைத்திருந்தால் தயவு செய்து உங்க வலையில் பதிவேற்றுங்கள் அல்லது எனக்கு நகல் தாருங்களேன்

 • கறுப்பு காகம் தான் வளருது. நீலக்காகம் ??? ம்ஹூம் ???!!!!
  படிக்க அருமையான பதிவு !!!

 • என் வீட்டில் எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். என் அம்மா அதற்கு உணவிடுவதையும், அதனுடன் பேசுவதையும்.. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் மிகச்சரியாக அவை வந்துவிடும். என் அம்மா ஒவ்வொரு காகத்திற்கும் ஒரு பெயர் வைத்து அழைப்பார். அவருக்கு இது எப்படி சாத்தியமாகிறது என்று என் மனதில் ஒரு கேள்வி தொக்கிக்கொண்டே நிற்கும். எல்லா காக்கைகளும் ஒரே போல்தான் இருக்கின்றன, அவற்றின் வித்தியாசம் எப்படி அறிகிறாள் என்று. என்னதான் இருந்தாலும்
  என் தாயின் கருவரை காணாத பிள்ளைகள் அவை…

 • ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது ஒன்றுதான் இன்னும் மிச்சம்.// Haha! The place where I live, viz Indonesia, I have not found even one ‘kaka’. For ages, in India, in my family, a handful of ‘sadham with a drop of ghee’ used to be kept on the roof for the ‘Kakais’ and then only, we would have our food. Nice of your family building up a working relationship with the visiting ‘kakais’ at home. Btw, who could forget Sivaji’s song in Parasakthi?

 • காகத்துடனான உங்களது சினேகத்தை என்னால் பரிபூரணமாக உணரமுடிகிறது. எனது சிறு வயதில் அதாவது நான் பள்ளியில் படிக்கும் போது. எனது அப்பாவுக்கும் அவரது தாத்தாவோ, மாமாவோ தெரியாத ஒரு காகத்துடனான பழக்கத்தை நான் பார்த்திருக்கிறேன். அதுவும் நீங்கள் கூறுவது போல பகலில் அல்ல. எனது அப்பா இரவு 10 மணிக்குமேல் தான் வீட்டுக்கு வருவார். சுமார் 10.30க்கு அவர் சாப்பிட அமருவார். கனகச்சிதமாக கடிகாரத்தில் அலாரம் வைத்தது போல அந்த காகம் எங்கள் வீட்டின் முன் வந்து அமரும். எனது அப்பா வைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு பறந்து செல்லும். முதலில் இது எனக்கும் பக்கத்து வீட்டார்களுக்கும் வேடிக்கையாக இருந்தது. பிறகு அது வாடிக்கையாக மாறிவிட்டது. ஆனால் இதுவரை நாங்கள் எனது அப்பா உட்பட யாரும் அந்த காகத்தை எங்கள் வீட்டில் பகலில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  • மணிகண்டன், நீங்கள் சொல்லியிருக்கும் தகவல் எனக்கு உண்மையில் வியப்பூட்டுகிறது. இரவு பத்து மணிக்குமேல் பொதுவாகக் காகங்கள் வெளியே வராது. இது நிச்சயம் ஆச்சரியம்தான். சும்மா ஒரு அனுபவத்தை எழுதப்போக எத்தனை ரசமான விஷயங்கள் கிடைக்கின்றன! பகலில் வராத அந்தக் காகம் ஒரு நல்ல சிறுகதைக்கான கருவைக் கொடுத்தது. உங்கள் அப்பாவுக்கும் உங்களுக்கும் நன்றி.

 • எனக்கு 7,8 காகங்கள் பழக்கம் உண்டு. காலையில் குறிப்பிட்ட நேரம் அலாரம் வைத்ததுபோல் சரியாக ஒரே நேர்க்கோட்டில் தயாராகவந்து சமையலறை ஜன்னலில் வந்து அமர்ந்துவிடும். நாள் கிழமை வித்யாசம் கிடையாது.

  http://twitter.com/#!/Jsrigovind/status/18252255520

  தவிரவும், இன்னநேரம் என்றில்லாமல் நாள் நடுவிலும் எப்பொழுது தேவைப்பட்டாலும் வந்து வித்யாசமாகக் குரல்கொடுத்து (அது சாப்பிடத்தான் கேட்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.) வாங்கிச் சாப்பிட்டுவிட்டு போகும்.

  மும்பையில் இப்பொழுது மழைக்காலம் என்பதால் தேவை இல்லை. வெயில் காலங்களில் எங்கிருந்தாவது சப்பாத்தி எடுத்துவந்தாலும் எங்கள்வீட்டு நீரில்தான் ஊறவைத்துச் சாப்பிடும்.

  காகங்களுக்கு மனித முகங்களை அடையாளம் தெரியும் என்று படித்ததை நம்பியதில்லை. ஆனால் இப்போது என் காகங்கள் என்னை வேறு வீடுகளில் பார்த்தாலும் இனம்கண்டு குரல்கொடுத்துக்கொண்டு ஓடிவருகின்றன. எதுவுமே தராவிட்டாலும் நன்றியாய் 4 கத்து கத்திவிட்டுப் போகும். சமையலறையில் அந்தரங்கமாய்ப் பேச காகம் நல்ல ஜந்து. பழகப் பழக, எல்லாப் பறவைகளையும்விட அவை அழகாக இருப்பதாகவும் தோன்றும்.

  • ஜெயஸ்ரீ: வியக்கிறேன். பறவைகளில் மிகவும் அழகானது காகம்தான் என்பது என் கருத்து. உங்களுக்கும் அப்படியே தோன்றியிருக்கிறது!

 • அட.. அட.. உங்களை காக்கா “பிடிக்காதவர்” என்றல்லவா நினைத்திருந்தேன். அது தவறாகி விட்டதே 🙂

 • வழக்கம்போலவே பிரமிப்பூட்டும் சுவாரஸ்யமான நடை….

 • உண்மையில் பறவைகள் மனிதனைவிடவும் புத்திக் கூர்மை மிக்கவை. ஏ.எக்ஸ்.என் டிவி சேனலில் காட்டினார்கள்.

  ஒரு ஏரிக்கரையில் ஒரு பறவை நிற்கிறது. மெதுவாக நடந்துபோய் அங்கே தூர எறியப்பட்டிருந்த ஒரு ஹாட்டாக்கை எடுக்கிறது. பின்னர், நீருக்குள் அந்த ஹாட்டாக்கைத் தொங்கவிடுகிறது. அதைச் சாப்பிட மீன் வந்தவுடன், சடாரென்று லபக்கிவிடுகிறது.

  அதைப் பார்த்தவுடன் என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை.

  செல்ஃபோன் உபயோகிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குருவிகளை நாம் அழிக்கிறோமே. அது குறித்து உங்களது கருத்து என்ன ?

 • மனிதர்களை விட மற்ற ஜீவராசிகளுடன் பழகுவது அலாதியான சுகம்.அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.ரசனையான படைப்பு.

 • எனக்கு வாழ்க்கையில் ஓர் முறையாவது ஒரு காகத்தைப் பிடித்துத் தடவி கொடுக்க வேண்டுமென்ற ஆசை உண்டு. அதன் அலகின் கூர்மையைப் பார்த்து எண்ணத்தை மாற்றிக் கொள்வேன்.

  காகங்கள் சூழலுக்கு ஏற்றவாறு விரைவாக மாறிக் கொள்ளும் தன்மை கொண்டவை. அதனால்தான் இன்னும் நகரங்களில் அதனால் வாழ முடிகிறது. மாநகரக் காகங்கள் பிஸ்ஸா தின்னவும் பழகியிருக்கக் கூடும் என்று எஸ்ரா எழுதியது நினைவுக்கு வருகிறது.

  காகங்கள் ஒருவரைத் தலையில் தட்டினால் கெட்ட சகுனம் என்று ஒரு நம்பிக்கை உண்டு. இதைப் பற்றி பாராவின் கருத்து என்ன?

 • எனக்கும் 7,8 காகங்களின் பழக்கம் ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால் நான் தான் அவற்றை மும்பைக்கு அனுப்பி வைத்தேன். எப்படி கேட்டால் சோறு கிடைக்கும் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். எனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்பதால் இதனையெல்லாம் வெளியில் சொல்லவில்லை. எனவே டிவிட்டர் லிங்க் தரமுடியவில்லை. மன்னிக்கவும்.

 • நீலக்காகத்தை நடுவில் கைவிட்ட மாதிரி இந்தக் கறுப்பு காகத்தையும் நடுவில் கைவிட்டுவிடாதீர்கள், பாவம் தாங்கமாட்டாது…. 🙂

  மாவா பற்றி எழுதுவதாக சொன்ன ஞாபகம்…. அது எப்போது?

 • Pithrukkal en kakkai vadivil varanga? adhodu innoru sandhegam. Pithrukkal marupiravi eduthal kakkavaha dhan pirappargala? sasthrangalil kakkaiku en romba mukiyathvam?
  pithrukkalin aanma marupirappu edukavilai endral avargal endha roobathil varuvargal? sumangali prarthanai seivadhu pithru devargalai thrupthi paduthava or marupiravi illamal irukkum sumangai deivathukka?
  Romba nazhaha ulla sandhegam, ” Foriegn mannula poojai, punaskaram , homam ellam panranga. aana pithru karyangal pannina adhukku effect illai engirargal. En pithru devadhaigal Foriegn vara mattargala? Bagavan ella idathulaiyum irukkar. Daily enakku asirvadham panrar. Nanna
  unara mudiyaradhu. ”
  Sorry. please enakku vizhakunga sir.

 • அடேயப்பா, ரொம்ப அழகு.

  உணர்வுகள் உண்மையாயின் மொழியால் அந்நியமான மனிதர்களாகட்டும் அல்லது பிறப்பால் அந்நியமான வேறு உயிர்களாகட்டும் … மொழி ஒரு தடையே இல்லை போல !

  ஷஷாங்க் ரிடம்ப்ஷன் பார்த்திருப்பீர்கள். அதில் கைதி தாத்தா சிறையிலேயே காகம் வளர்ப்பார். பெயர் ஜேக். சிறையிலேயே அவரை தேடிவரும் நாயகன் முதலில் காகத்திடம்தான் கேட்பார் ‘ப்ரூக்ஸ் எங்கே’ என்று. அது சக மனிதனுடன் பேசும் வசனம் போலவே தொனிக்கும்.

  பரோலில் விடுதலையான தாத்தா பூங்காவில் புறாக்களுக்கு தீனி போட்டபடி தனது காகம் தன்னை எப்போதாவது வந்து பார்க்குமா என்று எதிர்பார்த்து ஏமாந்து, புறச்சூழலில் பொருந்திக்கொள்ளவியலாமல் தற்கொலை செய்துகொள்வார். அப்போது தோன்றியதுண்டு, ‘ச்ச இந்த ஜேக் வந்து பாத்துருந்தா தாத்தா இப்படி தொங்கிருக்க வேணாமே’.

 • இலக்கிய பயணம் மேற்க்கொள்ள நான் என்ன இலக்கியவாதியா என்று இனிமேல் எங்கும் குறிப்பிடாதீர்கள்.அட்டகாசமாக இருக்கிறது உங்கள் எழுத்து.

 • இலக்கியவாதிகளுக்கும் பறவையினங்களுக்கும் அப்படி என்ன ஈர்ப்போ தெரியவில்லை! பாரதியார், ஆர்.கே.நாராயணன், (விகடன்) பாலசுப்ரமணியன், நாஞ்சில் நாடன் (ஏதோ எனக்கு தெரிந்த பட்டியல்) வரிசையில் இப்போ நீங்கள்!

 • என் 2 வயது மகனுக்கு முதன்முதலில் நான் காட்டி அறிமுகப்படுத்திய பறவை காகம். 3 வயது வரை அவன் எந்த பறவையை கண்டாலும் காகா என்று சொல்வதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது. காகத்தை பார்த்தால் அவன் முகத்தில் தோன்றும் ஒரு பிரகாசத்தை என்னால் உணர முடிகிறது. நீங்க சொல்ற மாதிரி காகம் மனுஷங்க கூட அவ்வளவு சீக்கிரம் ஒட்டிடுமா என்ன ? ஏன்னா பெரியவங்க சொல்லி கேட்டிருக்கிறேன். பறவைகளில் காகமும் விலங்கினங்களில் நரியும் மனுஷங்க கூட ஒட்டாது.

 • கமெண்ட்களைத் தாமதமாகப் பிரசுரித்தமைக்குப் பொறுத்தருள்க. 3 நாளாக ஊரில் இல்லை. போன இடத்தில் இணையமில்லை.

 • Dear Para,
  Your kaka experience is good. I like your narration.How could you write like this. thank you for a nice writing.

 • சில ஆண்டுகளுக்கு முன் ஹரித்வார் சிவானந்தா ஆஸ்ரமத்தில் நான் தங்கியிருந்தபோது தினமும் அங்கே காலையில் வாசலில் வந்து நிற்கும் பிரம்மாண்டமான காளையைப் பார்த்து அசந்து போயிருக்கிறேன். அவ்வளவு அழகு, அவ்வளவு கம்பீரம்!

  தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் வருமாம்.

  ஆஸ்ரமத்திலிருந்து பூரி, வாழைப்பழம் என்று எதைக் கொடுத்தாலும் சமர்த்தாக சாப்பிட்டுவிட்டுப் போகும். ஆனால் கொடுப்பதை மரியாதையாகக் கொடுக்கவேண்டும். கீழே போட்டால் அதை எடுத்துச் சாப்பிடாத அளவுக்குத் தன்மானமுள்ள மாடு!

  ஹரித்வாரே சிவனாம்சம் பொருந்திய ஊர் என்பதால் சாதாரண மக்களும் மாடுகளை விரட்டுவதில்லை, அடிப்பதில்லை, செல்லப் பிராணிகளாகவே வளர்க்கிறார்கள்.

  இதை நான் நேரில் கண்டு அசந்து போனேன்!

  பிராணிகளை நாம் நேசித்தால் அவை நம்மை பதிலுக்கு நேசிக்கின்றன என்பது கண்கூடு. ரமணரின் காலடியில் படுத்திருந்த புலி பற்றிப் படித்திருப்பீர்கள்.

  சிறு வயதில் எங்கள் கிராமத்துக் காக்கைகளுடன் நான் நெருங்கிப் பழகினவன். சென்னைக் காக்கையுடனான உங்கள் நட்பு பலப்படட்டும். உங்களுக்கு நல்லதே நடக்கும்!

 • naanum oru kaagathai valarkiren, athikaalai thinamum naan kichen vilakkai pottaale 3.30 manikku vanthuvidum. yen kaiyilirinthu jannal vazhiye vaangi saappidum. vidinthapinbu yenathu veetu haalukkuleye nadanthu vanthu saappidum. video vum photovum yeduthu vaithullen vendum yenru ketteergal yenral anuppi vaikiren

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி