ஜனவரி 4ம்தேதி [நாளை] இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. புத்தாண்டைப் புத்தகங்களுடன் ஆரம்பிக்க விரும்புகிறவர்கள், சேத்துப்பட்டு செயிண்ட் ஜான்ஸ் பள்ளிக்கூட மைதானத்துக்கு வந்துவிடுங்கள். தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பெல்லாம் ஒரு பண்டிகையா? இதுதான். இதுமட்டும்தான்.
ஒரு காலத்தில், தமிழர்கள் புத்தகம் வாங்குவதே இல்லை; ஆயிரம் காப்பி விற்றால் அமோகம் என்று சில பழம்பெரிசுகள் எப்பப்பார் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். புத்தி தெளிந்து உற்று நோக்கியபோதுதான் உண்மை தெரிந்தது. தமிழர்கள் புத்தகம் வாங்காமல் இல்லை. திராபையான புத்தகங்களைத்தான் அவர்கள் வாங்குவதில்லை. இப்போதெல்லாம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு லட்சங்களில் கூட்டமும் கோடிகளில் விற்பனையும் சர்வ சாதாரணமாயிருக்கிறது. கொஞ்சம் மெனக்கெட்டால் பெங்களூர், தில்லி புத்தகக் கண்காட்சி அளவுக்கு இதன் தரத்தை மேம்படுத்திவிட முடியும். அப்புறம் சரித்திரம், பூகோளம் இன்னபிறவற்றில் இடம்பிடிப்பது வெகு சுலபமாகிவிடும்.
கண்காட்சியின்மீது மக்கள் காட்டும் ஆர்வத்தை அமைப்பாளர்கள் புரிந்துகொண்டு சில சௌகரியங்கள் செய்து தரலாம். அதுதான் ஒவ்வொரு வருஷமும் எனக்குப் பெரும் குறையாகத் தெரிகிறது. உதாரணமாக ஒரு விஷயம் சொல்லுகிறேன். என் தந்தைக்கு எழுபத்தி ஐந்து வயது. அவர் சர்க்கரை நோயாளி. எப்படியும் முக்கால் மணிக்கு ஒருமுறை இயற்கை அன்னை அவரை அழைப்பாள். தள்ளாத வயதில் கண்காட்சிக்கு வருபவர், ஒவ்வொரு முக்கால் மணி நேரத்துக்கும் ஒருமுறை முக்கால் கிலோமீட்டர் நடந்து வெளியே போய்விட்டுத் திரும்ப வரவேண்டும்.
அப்படிப் போகிற இடமாவது ஒழுங்காக இருக்குமா என்றால் இராது. உலக மாநகராட்சி நவீன கட்டணக் கழிப்பிடங்கள் அனைத்தின் அசுத்தங்களையும் அள்ளி எடுத்துவந்து கொட்டி வைத்தது மாதிரி அது எப்படித்தான் இரண்டொரு நாளிலேயே அந்த வளாகம் மட்டும் அப்படியொரு சாக்கடைத்தனம் எய்துமோ தெரியாது. பெண்கள்? கேட்கவே வேண்டாம். புத்தகத்தை நாடி வருகிறவர்கள் சொந்த சுக சௌகரியங்களைத் துறந்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் வருடம் தோறும் வன்முறைத் திணிப்பு செய்வதைக் கொஞ்சம் மாற்றிப்பார்க்கலாம்.
அடுத்த விவகாரம், க்ரெடிட் கார்ட் தொடர்பானது. மக்கள், மல்லாக்கொட்டை விற்று மடியில் பணத்தை முடிந்துகொண்டு கண்காட்சிக்கு வந்த காலம் என்றோ போய்விட்டது. சின்னச்சின்னக் கடைகள் வரை க்ரெடிட் கார்ட் புழக்கம் வந்துவிட்ட நிலையில், புத்தகக் கடையினர் மட்டும் கார்டை நீட்டினால் காச்சுமூச்சென்று கத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இத்தனைக்கும் கண்காட்சி வளாகத்தில் பொதுவான க்ரெடிட் கார்ட் மையம் இருக்கும். எந்த ஸ்டால்காரரும் அங்கே சென்று தேய்த்துக்கொண்டு வந்துவிட முடியும்.
ஆனால் அது எதற்கு? நேர விரயம். தவிரவும் இந்த கார்டு சமாசாரமெல்லாம் நமக்குப் பளக்கமில்லிங்க. பத்து பர்சண்டு டிஸ்கவுண்டு. காச குடுத்துட்டு புக்க எடுத்துட்டுப் போயிருங்க. காசு இல்லியா? புக்க வெச்சிருங்க. அடுத்து யாருப்பா?
இருக்கிறார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட பதிப்பாளர்களே மிகுதி. சென்ற ஆண்டு கண்காட்சி சமயம், என் சொத்தின் பெரும்பகுதி தீர்ந்துவிட, இறுதி நாளன்று இப்படியானதொரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன். ஒரு குறிப்பிட்ட புத்தகம் எனக்கு வேண்டியிருந்தது. விலை அதிகமில்லை. நாநூறோ, நாநூற்றைம்பதோதான். கையில் காசு இல்லை. ஆனால் கடன் அட்டை இருந்தது. சம்பந்தப்பட்ட பதிப்பாளர், அதைத் தொடக்கூட மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இப்ப காசு இல்லன்னா பரவால்ல சார். நாளைக்கு நம்ம ஆபீசுக்கு வந்து பணத்த குடுத்துட்டு வாங்கிக்கிடுங்க என்று சொல்லிவிட்டார்.
தலைபோகிற தேவை இருப்பவன் எப்படியாவது வாங்கிவிடுவான். அது பிரச்னை இல்லை. புதிய வாசகர்களை இந்த நிராகரிப்பு எத்தனை சோர்வு கொள்ளச் செய்யும் என்று ஏன் இவர்கள் சிந்திப்பதில்லை? புத்தகம் விற்பதில்லை என்னும் தேசியகீதம் பாடுவதில் மட்டும் ஒரு குறையும் வைக்கமாட்டார்கள்.
இதனோடே இன்னொரு இம்சையையும் சொல்லிவிடுகிறேன். புத்தகக் கண்காட்சி என்பது மக்களுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தவும் வாங்க வசதி செய்யவுமான ஒரு வருடாந்திரத் திருவிழா. பத்து நாள், மிஞ்சிப்போனால் பன்னிரண்டு நாள். அவரவர் ஆபீஸ் முடித்து, அல்லது மற்ற வேலைகளை முடித்துவிட்டு மாலை வேளைகளில் பெரும்பாலும் வருவார்கள். அவர்களை நிம்மதியாகப் புத்தகங்களைப் பார்வையிட விடாமல், தினசரி யாராவது ஒரு பிளேடு பக்கிரியின் தலைமையில் பட்டிமன்றம், வெட்டிமன்றம், கழுத்தறுக்கும் கருத்தரங்கம், கவியரங்கம் என்ற பெயரில் துதிபாடும் கேலிக்கூத்து என்று மணிக்கணக்கில் வாசலிலேயே உட்காரவைத்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு உள்ளே கண்காட்சி அரங்கில் சுற்றிக்கொண்டிருக்கும் வாசகர்களையும் ஈட்டிக்காரன் மாதிரி மைக் வைத்து மிரட்டி வெளியே அந்த நாராசத்துக்குத் தள்ளப் பார்க்கிற வழக்கம்.
புத்தகக் கண்காட்சிக்கு எதற்கு இந்த சாலைச் சுந்தரி அலங்காரங்கள்?
கேட்கப்படாது. அது மரபு. அல்லது மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லிவிடக்கூடும். ஜூன் அல்லது ஜூலையில் நெய்வேலியில் ஒரு புத்தகக் கண்காட்சி நடக்கும். அங்கே புத்தகங்களுக்கு நிகராக டெல்லி அப்பளம் கடைக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாக விளம்பரம் செய்வார்கள். கூட்டம் அம்மும். சென்னையின் டெல்லி அப்பளம் இந்த மாலை நேரக் கூட்டங்கள்.
ஒழியட்டும். நமக்குப் புத்தகங்கள் முக்கியம். புதிய வாசகர்கள் ஒவ்வோர் ஆண்டும் என்னென்ன வாங்கலாம், எங்கிருந்து படிக்கத் தொடங்கலாம் என்று, அணுக சாத்தியமுள்ள எழுத்தாளர்களைக் கேட்பார்கள். அக்கறை மிக்க மூத்த எழுத்தாளர்கள் கண்காட்சி வளாகத்திலேயே அவர்களுக்கு விளக்கிச் சொல்லி வழியனுப்புவதை ஆண்டுதோறும் பார்த்திருக்கிறேன். என்னிடம் இப்படிக் கேட்கிற வாசகர்களுக்கு நான் உடனடியாக நூறு புத்தகங்களைச் சிபாரிசு செய்வது வழக்கம். மொத்தப் பட்டியலுக்கு இங்கே இடம் காணாது. இஷ்டமிருந்தால் என்னுடைய இணையத்தளத்தில் அந்தப் பட்டியலைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஓர் அவசரமான அத்தியாவசிய ஐந்துகள் மட்டும் இங்கே:
நாவல்கள்: 1. தி. ஜானகிராமனின் மோகமுள். 2. அசோகமித்திரனின் ஒற்றன். 3. சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் 4. கல்கியின் பொன்னியின் செல்வன் 5. ரா.கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி.
கதையல்லாத எழுத்து: 1. உ.வே. சாமிநாத ஐயரின் என் சரித்திரம் 2. வெ. சாமிநாத சர்மாவின் கார்ல் மார்க்ஸ் 3. தி.ஜ. ரங்கநாதன் மொழிபெயர்ப்பில் லூயி ஃபிஷரின் காந்தி 4. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் 5. சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள்.
கவிதைகள் பக்கம் நான் போகத் தயாரில்லை. மேற்சொன்ன பத்து நூல்கள்தான் தமிழின் ஆகச்சிறந்த புத்தகங்களா என்றெல்லாம் கேட்காதீர்கள். இதிலிருந்து படிக்கத் தொடங்கினால் சரியான பாதையில் மேலே போகமுடியும் என்பது என் நம்பிக்கை.
வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.
நகைச்சுவையாக சொன்னாலும் முக்கியமான விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்கள் அல்லது குறைந்த பட்சம் ஆட்டோவாவது. //தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பெல்லாம் ஒரு பண்டிகையா?// மிலாடி நபியையும் கிறிஸ்துமஸையும் விட்டுவிட்ட உங்கள் இந்துத்துவ எதிர்ப்பைக் கண்டிக்கிறேன். 🙂
வணக்கம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாசகர்கள் சார்பில் நன்றி.
நான் ஏற்கனவே சொன்னதுபோல,
என்னுடைய பல யோசனைகளை
BAPASI பலான யோசனைகளாக
பாவித்து நிராகரித்து விட்டது
(என்று நினைக்கிறேன்)
முக்கியமானவை.
1.15 நாட்களில் ஒரு நாள்
அனுமதி சீட்டு ரூ.250 இதில்
நான்கு நபர்களை அனுமதிக்கலாம்
உள்ளே இம்மதிப்புக்கான புத்தகங்கள்
இலவசம்.
2.கண்காட்சியில் குறைந்தது நன்கு இடங்களில்
கழிப்பறையும் இரண்டு இடங்களில்
ஓய்வறையும் தேவை
3.எல்லா கடைகளிலும் கடனட்டை உபயோகிக்கும் வசதி.
4.புத்தகங்களை எடுத்து சுற்றிவர ஒரு சிறிய தள்ளுவண்டி
(TROLLEY)(இதற்கு சிறிய கட்டணமும் வசூலிக்கலாம்)
5.ரூ.5000 க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு
BAPASI இன்னொரு 5% தள்ளுபடி
செய்வார்களா?
//100. நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? – எம்.ஆர். காப்மேயர்//
உங்க பட்டியலில் இந்தப் புத்தகம் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பலரும் படிக்காமலேயே இப்புத்தகத்தை நிராகரித்திருக்கிறார்கள்.
குமுதத்தில் தொடராக வந்தபோது நான் பள்ளிமாணவன். விரும்பி தொடர்ந்து வாசித்தேன். பிறகு புத்தக வடிவிலும் வாங்கி, வாசித்து பாதுகாத்து வருகிறேன்.
யாரையாவது பார்த்ததும் கஞ்சத்தனமாகவும் இல்லாமல், மிகத்தாராளமாகவும் இல்லாமல் இடைநிலை சிரிப்பு சிரிக்க இப்புத்தகம்தான் கற்றுத் தந்தது.
சுற்றிப்பார்க்க கலைஞரின் ‘சக்கர நாற்காலி’ கிடைக்குமா? அப்படியானால் தான் நான் வரமுடியும்! என்னால் அதிகம் நடக்க இயலாது.
சட்டம் தன் கடமையை செய்யும். 😉
பா ரா
முதலில் அடிப்படை வசதிகள் செய்யாமல் தயவு செய்து புத்தகக் கண்காட்சியே நடத்தாதீர்கள். கக்கூஸ் வசதிகள் என்று உருப்படியாகச் செய்யத் துப்பு வருகிறதோ அன்று நடத்திக் கொள்ளலாம். இந்த அடிப்படைத் தேவை, நாகரீகம், சுகாதாரம் கூடத் தெரியாமல் என்னத்தப் புத்தகத்தை வித்து என்னத்தப் படிச்சு என்னத்த வளர்க்க. நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானமே போட்டிருப்பார்கள் போலிருக்கிறது. வேறு நாடுகளில் இவ்வளவு பெரிய ஒரு கூட்டத்திற்கு கக்கூஸ் வசதி செய்யாமல் ஒரு கண்காட்சி வைத்தால் அந்தக் கண்காட்சியை இழுத்து மூடி ஆர்கனைசர்களை உள்ளே தள்ளி பல மில்லியன் டாலர்கள் ஃபைன் போட்டிருப்பார்கள். முதலில் அதைச் சரி பார்க்கச் சொல்லுங்கள் கேட்க்கவே அசிங்கமாக இருக்கிறது.
அடுத்து பலரும் ஒரே சமயத்தில் சில பத்து புத்தகங்களாவது வாங்குவார்கள் அதை எப்படித் தூக்கிக் கொண்டு போவார்கள்? தள்ளு வண்டி ஏதும் வாடகைக்காவது தருகிறார்களா அல்லது கையில்தான் தூக்கிக் கொண்டு போக வேண்டுமா? அப்படி தள்ளு வண்டி வாடகைக்கு அளித்தால் அதைத் தள்ளிக் கொண்டு போகும் வண்ணம் சம தளத் தரை உள்ளதா? இல்லாவிட்டால் இரண்டிற்கும் ஏற்பாடு செய்யச் சொல்லவும். அதைப் போலவே ஊனமுற்றோர் எளிதாக வந்து பார்க்கும் விதத்தில் கை வண்டிகள் செல்லும் வண்ணம் தரையை அமைத்துக் கொள்ளுங்கள். இடையில் ஓய்வு பெற உட்காரும் வசதிகளை, நல்ல நிழல் குடைகளுடனும், நாற்காலிகளும் அமைக்கச் சொல்லுங்கள். தயவு செய்து பபாசி ஆட்களை ஒரு டூராக உலகத் தரமான கண்காட்சிகளுக்கு அனுப்பி பார்த்து விட்டாவது வரச் சொல்லுங்கள். பார்த்து விட்டு வந்ததை அடுத்த முறையாவது அமுல் படுத்தச் சொல்லுங்கள்.
எழுத்தாளரின் சிபாரிசுகள் நல்லதுதான். அதற்காக எழுத்தாளர் பா.ராகவன் 24 மணி நேரமும் உட்கார்ந்து கொண்டு அனைவருக்கும் சிபாரிசுகளைச் சொல்லிக் கொண்டேயிருக்க முடியாது. ஒவ்வொரு எழுத்தாளர்களிடம் அவர்களது முக்கியமான சிபாரிகளையும் வாங்கி அவை எங்கு கிட்டும் என்ற விபரத்தையும் போட்டு வாங்கி ஒவ்வொரு எழுத்தாளர் பெயரிலும் சின்ன நோட்டீஸாக பிரிண்ட் செய்து வைத்து விட்டால் வேண்டும் என்பவர்கள் எடுத்துக் கொண்டு அவரவருக்குத் தேவைப் படுவதை வாங்கிக் கொண்டு போகட்டுமே. அதை ஏன் எழுத்தாளர் வந்து சொல்ல வேண்டும் அல்லது எழுதிக் கொடுக்க வேண்டும். இதை நீங்கள் இப்பொழுதே கிழக்கில் செய்யலாமே. உங்கள் சிபாரிசை ஒரு சின்ன இரண்டு பக்கம் உள்ள கையேடாக அல்லது நல்ல நோட்டீசாக அடித்துக் கொடுத்து விடுங்களேன்
அன்புடன்
ச.திருமலை
[…] என்று சொன்னார்கள். தமது பேச்சில் இந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு, நாங்கள் பேசுவதை இன்று யார் […]
அனாவசியமான கூட்டத்தைத் த்விர்க்க நுழைவுக்கட்டணத்தை ரூ. 100 ஆக உயர்த்தி அதில் 90 ரூபாய்க்குப் புத்தகமாகப் பெற்றுக்கொள்ளச் செய்யலாம்.