சுப்ரமணியபுரம் படத்தின் ‘கண்கள் இரண்டால்’ பாடலுக்குப் பிறகு நான் தினசரி கேட்கிற பாடலாகியிருக்கிறது நாக்கமுக்க.
பொதுவாகக் குத்துப்பாடல் ரசிக்கிறவனில்லை நான். தாளத்தைவிட இசையில்தான் நாட்டம் அதிகம். அந்த வகையில் என் தலைமுறை இசையமைப்பாளர்களில் எனக்கு ரெஹ்மானைவிட கார்த்திக் ராஜா மிக நெருக்கமானவர். வித்யாசாகர், பரத்வாஜ் இருவரும்கூட என்னைக் கவர்ந்த சில பாடல்களைத் தந்தவர்கள் என்றாலும் அவ்வப்போது அவர்கள் குத்துகிற குத்தில் முதுகுவலி வந்துவிடும்.
நாக்கமுக்கவுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. 2004ல் கெட்டிமேளம் தொலைக்காட்சித் தொடரின் டைட்டில் சாங்குக்காக இயக்குநர் விக்கிரமாதித்தனுடன் விஜய் ஆண்டனி வீட்டுக்கு ஒருசமயம் போயிருந்தேன். அப்போது அவர் எஸ்.ஏ. சந்திரசேகரின் ஏதோ ஒரு படத்தின் பாடல் மூலம் அறிமுகப் பிரபலம் பெற்றிருந்தார். அமைதியாக இருந்தார். நாலைந்து ட்யூன்களைப் போட்டுக்காட்டி தேர்வு செய்யச் சொன்னார். ட்யூன் தேர்வாகி, மீண்டும் ரெக்கார்டிங்கின்போது கோடம்பாக்கத்தில் ஒரு ஸ்டுடியோவில் சந்தித்தேன். தொண்ணூறு சதவீத இசைக்கருவிகளின் ஒலிகளை ஒற்றை கீபோர்டில் கொண்டுவந்து தயாராக வைத்திருந்தார். கீபோர்டில் எல்லா கருவிகளின் ஒலியும் கிடைக்கும் என்றாலும் எல்லாமே செயற்கையாக இருக்கும். இயக்குநர், நாகஸ்வரம் மட்டுமாவது நாகஸ்வரமாக வேண்டும் என்று கேட்டதும் எங்கிருந்தோ ஒரு கோஷ்டியைக் கூப்பிட்டு வந்து அரைமணிநேரம் வாசிக்க வைத்து பதிவு செய்துகொண்டு அனுப்பினார்.
கெட்டிமேளம் டைட்டில் சாங் அது வந்தபுதிதில் பெரிய ஹிட் என்றே சொல்லவேண்டும். அதுவும் ஒரு மிதமான குத்துப்பாடல்தான். விஜய் ஆண்டனி சினிமாவில் வேகமாக முன்னேற ஆரம்பித்தார். பல பிரசித்தி பெற்ற குத்துப்பாடல்கள் அவருடையதாகவே இருந்தன.
சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் கவின் பாலாவின் ‘கனகவேல் காக்க’ படத்துக்கு வசனமெழுத ஒப்பந்தமாகி பட பூஜைக்குச் சென்றிருந்தபோது அங்கு மீண்டும் விஜய் ஆண்டனியைச் சந்தித்தேன். படத்துக்கு அவர்தான் இசையமைப்பாளர். அதே புன்னகை. அதே அமைதி. ஆனால் பதிவான ஒரு பாடலைக் கேட்டபோது ஒரு வருடத்துக்குத் தலைதெறிக்க வைக்கப்போகிறது என்று உறுதியாகத் தோன்றியது. அப்படியொரு குத்து. ஆனால் திரும்பவும் கெட்டிமேளம் டைட்டில் சாங்கில் கண்ட அதே பிரச்னை இதிலும் இருக்கக்கண்டேன். கீ போர்ட் ஆதிக்கம். ஒரே ஒரு போர்ட் போதும். உலகிலுள்ள அத்தனை கருவிகளையும் ஒழித்துக் கட்டிவிடலாம் என்று மிகத் தீவிரமாக நம்புகிறவர் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.
நாக்கமுக்க மண்ணிசை வகையைச் சேர்ந்தது. மரணத்தின் வலி மறக்க, ஆடிப்பாடுகிறவர்களின் வேகமும் ஆங்காரமும் கொப்பளிக்கிற தன்மையை அந்தப் பாடலின் ஒவ்வொரு சுரத்திலும் என்னால் உணரமுடிந்தது. பாடல் தரும் உச்சக்கட்டக் களிப்பின் விளிம்பில் மிக அழுத்தமானதொரு சோகமும் தனிமையும் கவிந்திருப்பதை ஒரு தியானமாக அதனை தரிசித்தால் யாராலும் உணர இயலும்.
என் சிறு வயதுகளில் கேளம்பாக்கத்தில் படித்துக்கொண்டிருந்தபோது மரண ஊர்வலங்கள் சிலவற்றை நின்று பார்த்திருக்கிறேன். தையூரிலிருந்து படூர் வரை செல்லும் ஊர்வலம், கேளம்பாக்கம் மெயின் ரோடைக் கடக்கப் பத்து நிமிடமாகும். பறை என்னும் தொல் கருவியின் ஆதிக்கம் வெளியை நிறைக்கும். அதனை வாசிக்கும் கலைஞர்கள் யாரிடம் பயின்றிருப்பார்கள்? தாளம் தெரியுமா? ஆவர்த்தனங்கள் தெரியுமா? எடுப்பு தெரியுமா? தங்கள் வாசிப்பில் எது ஃபரன்ஸ், எது மோரா என்று தெரியுமா? பிரமிப்பாக இருக்கும். அட்சரம் பிசகாது. அப்படியொரு லயசுத்தம். கண்டிப்பாகக் கண்ணை மூடிக்கொண்டுவிட வேண்டும். ஏனெனில் ஆட்டம் சகிக்காது. பல சமயங்களில் ஆடுகிறவர்கள் காட்டும் சமிக்ஞைகள் பாலியல் சம்பந்தப்பட்டது என்பதைப் பின்னால் வயதுக்கு வந்தபிறகு அறிந்துகொண்டேன். ஆனால் இப்போது எண்ணிப் பார்த்தாலும் சிலிர்ப்பூட்டுகிற தாள அனுபவம் அது. வெகுநாள்வரை ‘டண்டனக்கா’ என்று அயோக்கியத்தனமாக அதனைக் குறிச்சொல்லிட்டு மனம் வகைப்படுத்தியிருந்ததை எண்ணி வெட்கப்படுகிறேன். அந்த இசைக்குள்ளே இருக்கும் எழுத்துகள் ‘நாக்கமுக்க’ என்று சரியாகக் கண்டுபிடித்துக் கொண்டுவந்திருக்கும் ‘காதலில் விழுந்தேன்’ பட இயக்குநர் இந்த ஒரு காரணத்துக்காக எனக்கு முக்கியமாகிறார்.
எனவே நாக்கமுக்க பாடலை முதல்முறை கேட்டபோது விமரிசனமற்ற பரவசம் ஒன்றுதான் மனத்தில் நிறைந்திருந்தது. ஆனால் திரும்பத் திரும்ப, கிட்டத்தட்ட தினசரி கேட்கநேர்ந்தபோது இசைச் சேர்க்கையின் அபத்தங்கள் ஒவ்வொன்றாகப் புலப்படத் தொடங்கின.
மாடு வெட்டி மனுசன் தின்னு தோலெடுத்து மேளம் கட்டி அட்றாட்றா நாக்கமுக்க என்று தொடங்குகிற வரிக்குப் பின்னால் அணிவகுக்கும் வாழ்க்கை சார்ந்த அனுபவங்களும் வலிகள் அளித்த வெறுமையும் விரக்தியும் சிந்த்தசைஸ் செய்யப்படும்போது அடிமாட்டைப் போலவே பொலி போடப்பட்டுவிடுகின்றன. பாடலின் ஜீவநாடியான ‘நாக்கமுக்க’ என்னும் பதத்தை produce செய்யவேண்டிய மண்ணின் கருவிகள் எதுவுமே பயன்படுத்தபடாமல் எலக்ட்ரிக் டிரம்ஸில் அதைக் கொண்டுவர முயன்றிருப்பது கூர்ந்து கவனிக்கும்போது மிகுந்த எரிச்சலை உண்டாக்குகிறது.
அவ்வண்ணமே முதல் சரணத்தைப் பின் தொடர்ந்து வரும் வேகமான கீபோர்ட் வாசிப்பில் ஒரு சில இடங்களில் அப்பட்டமாக ஸ்ரீராகம் [எந்தரோ மகானுபாவ என்னும் பஞ்சரத்தின கீர்த்தனை இந்த ராகத்தில் அமைந்தது.] வெளிப்படுவது மலத்தை மிதித்தாற்போல் அருவருப்படையச் செய்கிறது. கர்நாடக சங்கீதம் தவறு என்பதோ, கூடாது என்பதோ அல்ல விஷயம். இந்தப் பாடலுக்கு அது தீட்டு. ஒட்டவில்லை. ஒட்டாததோடு மட்டுமின்றி துருத்திக்கொண்டு இரண்டாவது சரணம் வரை நினைவை விட்டு நகர மறுப்பதும் ஒரு காரணம். எப்படி மேற்கத்திய கருவிகளின் கூட்டணி இந்த இசைக்கு அன்னியமாக உள்ளதோ, அதே போலத்தான் கர்நாடக ராகம் ஒன்றின் வெளிப்பாடும்.
விஜய் ஆண்டனி ஏன் அந்த ராகத்தின் சாயலைக் கொண்டுவந்தார் என்பதற்கான காரணத்தை என்னால் மிக எளிதில் யூகித்துவிட முடிகிறது. பிருகாக்கள் சாத்தியமில்லாத வாத்தியக் கருவிகளை மட்டுமே சேர்த்து ஓர் இசைக்கோவை உண்டாக்கும்போது, அதை முணுமுணுக்கச் செய்வதற்கென்றே சில குறிப்பிட்ட ராகங்களின் சாயலை நமது இசையமைப்பாளர்கள் கொண்டுவருவார்கள். பிலஹரி [ஸ்டிராபெரி கண்ணே], ரீதிகௌளை [அழகான ராட்சசியே – இதில் கேட்கும் கடம் சத்தம், உண்மையில் கடத்திலிருந்து கொண்டுவரப்பட்டதல்ல.], கேதாரம் [என்னவளே], ஹம்ஸநாதம் [பூவாசம் புறப்படும் பெண்ணே] என்று சில ராகங்கள் இந்தக் காரணத்துக்காகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்து இளையராஜா மட்டுமே ராகத்தை, ராகத்துக்காகவே பயன்படுத்தும் ஒரே இசையமைப்பாளர். ஒட்டு வேலைகளுக்கு ராகத்தைச் சிதைக்காதவர். அவரது நாட்டுப் பாடல்களைக் கூர்ந்து கவனித்தால் அதில் ராக சாயல் என்று ஏதும் வெளிப்படையாக எங்கேயும் தெரியாது. [சிந்து பைரவி படத்தில் மட்டும் காட்சியின் தேவை கருதி ‘நானொரு சிந்து’ பாடல் சிந்துபைரவி ராகத்தின் சாயலைப் பூசிக்கொண்டு வரும். அதே போல் உன்னால் முடியும் தம்பியில் சுத்த தன்யாசி சற்றே வெளிப்படையாகத் தென்படுகிற ‘உன்னால் முடியும் தம்பி தம்பி’. அதுவும் காட்சியின் தேவை கருதி.] அதற்கான அவசியத்தை அவர் உருவாக்குவதில்லை என்பதுதான் விஷயம். அந்தந்த இசைக்கு ஏற்ற கருவிகளைப் பயன்படுத்தும்போது இம்மாதிரியான ஒட்டு வேலைகள் அவசியமற்றதாகின்றன.
இவ்வகையில் நாக்கமுக்கவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கீ போர்டுகள், எலக்டிரிக் கிட்டார் [பேஸ்&லீட் இரண்டும்], எலக்டிரிக் டிரம்ஸ், கொஞ்சம் வயலின், மேண்டலின், எல்லாவற்றை விடவும் அபத்தத்தின் உச்சமாக சில பெண்களின் மெலடி பூசிய கோரஸ் குரல் ஆகியவை பாடலில் இருக்கும் மண்வாசனையை அடித்துத் துரத்துகின்றன.
இந்தச் சமயத்தில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம்பெற்ற வாளமீன் பாட்டை நினைவுகூர்வதைத் தவிர்க்கமுடியவில்லை. வாளமீனிலும் மேற்கத்தியக் கருவிகளின் சேர்க்கை உண்டு என்றாலும் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துவதில்லை. இந்தப் பாட்டோடு ஒப்பிடுகையில் வாளமீனின் தாள கதி மிகவும் நிதானமாகவே இயங்கக்கூடியது என்றாலும் அது ஏற்படுத்திய தாக்கம், மனத்தில் நிற்கப்போகிற நாள்களின் எண்ணிக்கை, நாக்கமுக்கா உண்டாக்கிய தாக்கத்தைக் காட்டிலும், இது நெஞ்சில் நிற்கப்போகிற நாள்களைவிட அதிகம் என்று எனக்குப் படுகிறது.
ஒவ்வொரு இசையும் தனக்கான கருவிகளைத் தாமேதான் தீர்மானிக்கின்றன. எப்படி ஒவ்வொரு விஷயமும் தனக்கான எழுத்து மொழி நடையைத் தாமே தீர்மானிக்கிறதோ அப்படி. எல்லா பாடல்களும் இந்தளவு தாக்கத்தை உண்டாக்குவதில்லை. எல்லா பாடல்களிலும் எப்போதுமுள்ள குற்றம் குறைகள் இந்தளவு பேசச் சொல்லுவதில்லை. நாக்கமுக்கவின் மிக மோசமான இன்ஸ்ட்ருமெண்டேஷன் [வாத்தியக் கருவிகளின் சேர்க்கை] மற்றும் ஆர்கெஸ்டிரேஷன் [தேர்ந்தெடுத்த கருவிகளுக்கான இசைக்குறிப்புகளின் சேர்க்கை] குறித்துக் குறிப்பிடத் தோன்றியதன் காரணம், மிக அபூர்வமாகவே பூக்கும் இத்தகைய மண்ணின் அசல் இசை. ஏதோ ஒரு மரண வீட்டில் கேட்ட இசை என்று இப்படத்தின் இயக்குநர் குறிப்பிட்டிருந்ததை எங்கோ வாசித்த நினைவு. அந்த இசைக்கு மரணமற்ற ஒரு நிலையை வழங்க முயற்சி செய்திருக்கும் விஜய் ஆண்டனி தமது வழக்கமான மசாலா ஃபார்முலாவை இதற்கும் அளித்துவிட்டாரே என்கிற ஆற்றாமையின் விளைவே இது.
[பி.கு. ட்விட்டரில் யதேச்சையாக இப்பாடலைப் பற்றி ரோசா வசந்துடன் ஓரிரு வரிகள் பேசப்போக, வெங்கட்ரமணன் இணைந்துகொள்ள, இருவரும் ஊட்டிய ஆர்வத்தினால் இச்சிறு கட்டுரையை எழுதும்படி ஆனது. இசையைப் பற்றி எழுத்தில் விவரிப்பது மிகவும் சிக்கல் மிகுந்ததாகவும் சவாலாகவும் இருக்கிறது. ஓரளவு எளிமையாகவே சொல்ல முயற்சி செய்திருப்பதாக நினைக்கிறேன். யாருக்கேனும் ஏதாவது இடம் புரியவில்லையென்றால் தயவுசெய்து கேட்கவும். ப்ருகா சாத்தியமில்லாத கருவிகள் என்று நான் குறிப்பிடுவது வயலின் நீங்கலாக அனைத்து மேலைக் கருவிகளையும். மேண்டலின் ஸ்ரீனிவாஸின் வாசிப்பு மட்டும் இதில் விலக்கு. அவர் பிருகாவுக்குத் தன் வாத்தியத்தை நம்புவதில்லை. விரல்களை மட்டும்.]- நாக்கமுக்க – காதலன் : விஷுவல் ரீமிக்ஸ் – ரசிக்கலாம்.
அவசரமாக படித்து வீட்டு அவசரமாக எழுதுகிறேன்(க்ளாஸ் எடுக்கணும்). வெஸ்டர்ன் நாக்க முக்கவிற்கு நீங்கள் சொன்னது ஒத்து வருகிறது. சின்ன பாப்பா பாடிய versionsஐயும் கேட்டீர்களா?
ரோஸா,
கவனப்படுத்தியமைக்கு நன்றி. தொலைக்காட்சிகளில் – குறிப்பாக ‘காதலில் விழுந்தேன்’ தயாரிப்பாளர்களான சன் டிவியின் சானல்களில் எப்போதும் ஒளிபரப்பப்படுவதும், வானொலி அலைவரிசைகளில் இடைவிடாது ஒலிபரப்பப்படுவதும் நான் விவரித்திருக்கும் வர்ஷன் தான். நீங்கள் குறிப்பிடும் வர்ஷனையும் கேட்டேன். அதில் இரு பிழைகள் உள்ளன. முதலாவது [கொஞ்சம் மெனக்கெட்டு விசாரித்தபிறகே எழுதுகிறேன்.] மரண ஊர்வல சமயத்தில் பாடப்படும் இத்தகைய பாடல்களை ஒருபோதும் பெண்கள் பாடுவதில்லை. ஒரிஜினல் வர்ஷன் என்று சொல்லிக்கொள்ளும்போது எதற்காக இந்த சமரசம் தேவை என்று புரியவில்லை. இரண்டாவது பிழை, இந்தப் பாடலிலும் இடையிடையே திணிக்கப்பட்டிருக்கும் பாடலுக்குப் பொருந்தாத சில ‘ஆ.. ஊ’ குரல் ஒட்டுகள் மற்றும் சாத்தியமே இல்லாத சலங்கை சத்தம்.
பி.கு: நான் படம் பார்க்கவில்லை. இந்த வர்ஷன் படத்தில் இடம்பெறுகிறதா என்று தெரியாது.
இரண்டு குறிப்புகள்:
1. பறை என்பது துக்கம் தவிர, கிராமங்களில் வேறு பல சமூக நிகழ்வுகளுக்கும் பயன் படுத்தக் கூடியதுதான். இந்தப் பாடல் படத்தில் எந்த காட்சி அமைப்பில் வருகின்றது எனத் தெரியவில்லை. அதனால் ராகம் ஊடே வந்தால் சரியா தவறா என என்னால் தீர்மானமாக கூறமுடியவில்லை.
2. நாங்கள் பள்ளியில் படிக்கும்போது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் பாரதியின் “உலகத்து நாயகியே” பாட்டுக்கு பறைகளோடு (வேறு எந்த வாத்தியமும் இல்லாமல்) மாணவ மாணவியர் ஒரு குழு நடனம் ஆடினர். அதன் வேகமும், ஆவேசமும், களி உச்சமும் மிக அரிதானது.
அருள்
நாக்க முக்க பாடலைப்பற்றி இவ்வளவு பெரிய பதிவா.. படிக்கும் போதே மூச்சு முட்டிடுச்சு.. ப்பூ..
ஆனாலும் நல்ல அலசல்.. 🙂
நாக்குமுக்க பற்றி படித்த பின் எனக்கு நாக்கு தள்ளிப்போச்சு..மூக்கில் வேர்த்துடுச்சு..நாக்கு மூக்கா..
ரூமி
நல்ல கட்டுரை!
இந்தப்பாடல் அபூர்வ சகோதரர்களின் ‘அண்ணாத்த ஆடுறார்’ மெட்டை மறு உபயோகம் செய்ததாகத்தோன்றுகிறதல்லவா?
எதை போய் எதுல தேடுரதுன்னு ஒரு வரைமுறை இல்லயா சார் உங்களுக்கு. இந்த பாட்டுக்கு எதுக்கு கர்னாடக சங்கீதம் அவசியம்னு கேக்குறேன். தமிழ் நாட்டுல எல்லாரயும் ஆட வச்சிருக்கு இந்த பாட்டு. இதுல பிருகா இருந்தா என்ன இல்லாட்டி என்ன?
ஊரே பாராட்டும் ஒரு விஷயத்தைப் பற்றி எதிர்மறையாக எழுத ஒரு மனத்திடம் வேண்டியிருக்கிறது. இந்தப் பாடலை முதல் முதலாக கேட்ட கணத்திலிருந்து எப்போது கேட்கும் போதெல்லாம் அடிவயிற்றிலிருந்து ஒரு எரிச்சல் கிளம்புகிறது. கர்நாடக இசைக்கு தலையாட்டும் நபரல்ல நான். இசையைப் பற்றின அடிப்படை அறிவு கூட கிடையாது. என்றாலும் இந்தப்பாடல் எனக்குப் பிடி்க்கவில்லை. என் எட்டு வயது மகளுக்கு கூட மிகப்பிடித்திருக்கிறது. ‘எனக்குப் பிடிக்கவில்லை’ என்றால் முறைத்துப் பார்க்கிறாள். ‘அட ரசனையில்லாத ஜென்மமே’
எனக்குப் பிடித்த எளிமையான இசையில் முதலிடம் வகிப்பது சாவு மேளம். கேட்ட கணத்திலேயே எழுந்து ஆட வைக்கும் இசையது. நடனத்தின் மூலம் பரவச உச்சத்தை அடையும் என்றால் அது சாவு மேள இசையின் மூலம்தான் என்று நம்புகிறேன். சமீபத்தில் யுவன் சங்கர் ரா நாட்டார் இசையை நுட்பங்களின் மூலம் மழுங்கடிக்காமல் கூடுமான அளவிற்கு பச்சையாக அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் என் நினைக்கிறேன். “அங்கா துங்கா”வும் “ஊரோரம் புளியமரமும்” raw வாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது என் பாமர உணர்வு.
இசைக் கருவிகளின் ஆதிக்கமா, பாடல் வடிவமைத்திருப்பதில் பிழையா, பாடகரின் குரலா எதுவென்று தெரியவில்லை. இந்தப்பாடலை என்னால் ரசிக்கவே முடியவில்லை.
(அவசரத்தில் எழுதினது)
படிச்சு முடிக்கிறதுக்குள்ள நாக்கும், மூக்கும் வெளித்தள்ளிருச்சு.. இத்தனை விஷயத்துக்கும் ஒரே பதிவா..
எதுக்குங்க இந்த கொல வெறி? பாட்டையும் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது. அதுவும் குத்துப் பாட்ட. Ignorance is blissனு சும்மாவா சொன்னாங்க. கர்நாடக இசையே புரியாத சுத்த கர்நாடகம் நாங்கெல்லாம் வீட்ல சிண்டு சிறுசுங்க பெண்டு பொடிசுங்களோட சேந்து குத்து குத்துண்ணு குத்தியாச்சுல்ல.
ஒரு வேளை மாடு செத்தா மனுசன் தின்னா எனும் வரிகளைச் சொல்லும் பாடலில் கர்நாடக சங்கீதத்தையும் ஏத்தி ஏதோ சமூக சேதி சொல்றாங்கலோ என்னமோ.
A nice write-up on Naaka Mukka. Though a minor thing.
Mudhalvan audio CD credits V.Selvaganesh for Ghatam, so i guess it must be a real Ghatam in ‘Azhagaana Ratchasiye’ and won’t be a digitised sample. Selvaganesh, son of Ghatam-Vikku Vinayakram, is also the guy who has composed for ‘Vennila Kabadi Kuzhu’.
I think after his first few years of over-dependence on Keyboard, Rahman himself consciously moved away from it (not entirely though) and started including more acoustic arrangement in his songs.
நான் முதல்ல இந்தப் பாட்ட கேட்டது சன் டிவில ஆட்டம் ஆடுற நிகழ்ச்சியில. அப்போ அது புடிக்கலங்க, காரணம் அந்த அம்மா ஆடுன ஆட்டம். இப்போ என் பையன் குத்து குத்துன்னு குத்துறான். அப்படியே புடிச்சு போயிருச்சு.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து (நினைவு தெளிந்த அல்ல )நான் கேட்பவை பெரும்பாலும் குத்துப் பாடல்களே 🙂
கேட்டு முடியும்போ மனசு அருவி மாதிரி குதிக்கும், அது தான் குத்து பாட்டு. 🙂
//படிச்சு முடிக்கிறதுக்குள்ள நாக்கும், மூக்கும் வெளித்தள்ளிருச்சு.. இத்தனை விஷயத்துக்கும் ஒரே பதிவா..//
உ.த. அண்ணா! உங்க ஒவ்வொரு பதிவு படிக்கும்போதும் எங்களுக்கு நாக்கும், மூக்கும் மட்டுமல்ல குடலும், கும்பியும் கூட வெளியே தள்ளிடுது 🙁
பாரா, சென்னையில் சாவுக்கான பறையின் வீரியம் எந்த அளவிற்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, நான் பார்த்தவரையில் குறைவாகவே உள்ளது என்று தோன்றுகிறது. முழு வீரியத்துடனான சாவு மேளம் கேக்கணும்ன்னா கொஞ்சம் நம்ம ஊர் பக்கம் வாங்க.
//“அங்கா துங்கா”வும் “ஊரோரம் புளியமரமும்” raw வாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது என் பாமர உணர்வு.//
சுரேஷ், எனக்கும் இதே தோன்றியது. “நாக்கமுக்க” ஜெமினி படத்தில் வரும் “ஜெமினி ஜெமினி” போன்ற ஒரு Fast beat மட்டுமே. சுப்ரமணியபுரம் படத்தில் வரும் கோயில் திருவிழா பாடலில் கொஞ்சம் rawவான அடி இருப்பது போல தோன்றுகிறது.
Too much reading in the song. Just listen and enjoy. thats what common people like us do. Even Vijay Anthony may not aware of this much technical issues.
நாக்க மூக்கா ல இவ்ளோ விஷயம் இருக்கா ?
அதென்னவோ இசை ஞானம் இல்லாத எங்களைப் போன்றவர்களுக்கு அது ஒரு சாவு மேளம் சாங் போல மட்டுமே தெரிகிறது .இதே போல நீங்கள் வேறு சில பாடல்களையும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பதிவிடலாம் . விஷயம் தெரிந்தவர்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் விமர்ச்சிக்கலாமே !!!
Really this song irritates me. I don’t know the reason.
Pa.Ra has analyzed in a excellent way.
Good analytical review.
The reason for irritation comes from your social approach to ppl. Lower classes of society in Chennai create and love it, so we have to hate it. For, loving it s loving them. We must keep our distance.
In case u, too, r from that society, then, it may b self hatred.
I, too, don’t like the song – for 2 reasons: 1. I hate their culture; 2, the woman is ugly and her movements r bad in the TV prog.