மீள்வணக்கம்

நண்பர்களுக்கு வணக்கம். கொஞ்சகாலமாக இந்தப் பக்கம் வர இயலாமல் போனதற்கு என் பணியின் தன்மை காரணம். நேரத்தைத் துரத்தவேண்டிய நிர்ப்பந்தம். இணையத்திலிருந்துதான் விலகியிருந்தேனே தவிர, எழுத்திலிருந்தல்ல. இனி அவ்வப்போது வர இயலும் என்று நினைக்கிறேன். அதே வேலைப்பளுதான்; ஆயினும் இனி சற்றே ஒழுங்கு கடைப்பிடிக்க முடியுமென்று நினைக்கிறேன். பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட  சிரமமென்பது மறந்துவிடுகிறது.

ஒரு தமாஷ். இங்கே நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தளம் படு சுத்தமாக இருந்தது. ஓர் இடைவெளிக்குப் பிறகு இப்போது நிர்வாகப் பக்கத்துக்குச் சென்று பார்த்தால் எண்பதுக்கும் மேற்பட்ட ஸ்பாம் கமெண்ட்டுகள். பயன்பாடற்ற இடத்தில் பலான செயல்பாடென்பது மெய்யுலகில் மட்டுமல்ல; மெய்நிகருலகிலும்கூட என்பதை அறிந்தேன்.

இடைப்பட்ட காலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் திரும்பத் திரும்ப இரண்டு வினாக்கள் இடம்பெற்றவாறே இருந்தன. முதலாவது, என்னுடைய புத்தகங்கள் குறித்து. இன்னொரு பதிப்பக முயற்சி உண்டா என்பது குறித்து. இரண்டாவது வினா, தமிழ் பேப்பர் போல் ஓர் இணைய இதழை மீண்டும் ஏன் தொடங்கக்கூடாது என்பது குறித்து.

இரண்டு வினாக்களுக்குமே ஒரே பதில்தான். நான் தயாராகக் கொஞ்சம் அவகாசம் வேண்டியிருந்தது. இப்போது பதில் சொல்லுகிறேன்.

என்னுடைய ஐம்பது புத்தகங்களில் சுமார் நாற்பது இன்று அச்சில் இல்லை. அவை அனைத்தையும் விரைவில் மறு பதிப்பு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன். ஓரிரு மாதங்களில் அவை வெளிவரத் தொடங்கிவிடும். ஆனால் சொந்தப் பதிப்பகம் தொடங்குமளவு எனக்குத் திறன் கிடையாது. என்னால் என்ன முடியும் என்பதைக் காட்டிலும் எது முடியாது என்பதை மிகத் தெளிவாக அறிவேன். சென்னை புத்தகக் கண்காட்சி சமயம் என்னுடைய பெரும்பாலான புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று சொன்ன நண்பர்கள் அத்தனை பேருக்கும் இதைத்தான் சொன்னேன். வாசக சகாயமான விலையில், தரமான தயாரிப்பில், எப்போதும் பிரதி கிடைக்கக்கூடிய சாத்தியங்களுடன் என்னுடைய நூல்களைக் கொண்டு வரும் முயற்சியில் கிட்டத்தட்ட செயல்படு காண்டத்தின் அருகே வந்துவிட்டேன். மிக விரைவில் பதிப்பு நிறுவனம் குறித்த விவரங்களைத் தருகிறேன்.

இது தொடர்பாகப் பல்வேறு பதிப்பாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த நாள்களில் அவர்கள் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்ட ஒரு விஷயம் – தங்களுக்குப் புதிய எழுத்தாளர்களை ஏன் அறிமுகப்படுத்தக்கூடாது என்பது.

கடந்த ஏழாண்டுகளில் கதையல்லாத, அறிவுத்துறைகள் சார்ந்த புத்தகங்கள் எழுதக்கூடிய சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்ய வாய்த்தது. எனது பணி மாற்றம் அல்லது துறை மாற்றம் இந்தச் செயல்பாட்டுக்கு இடையே ஒரு தேக்கத்தை உண்டாக்கியது. மீண்டும் அதனைச் செய்வதென்றால் அதற்கென ஒரு தனித்தளம் இல்லாமல் முடியாது. மருத்துவத் துறை போல, வழக்கறிஞர் துறை போல எழுத்தும் வாழ்நாள் முழுதும் நீளும் ஒரு ப்ராக்டிஸ்தான். ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிப்பது கடினமான பணி. ஆனால் தனிப்பட்ட முறையில் அது என் எழுத்துக்கு மேலும் மேலும் வலு சேர்க்கிற ஒரு செயல்பாடும்கூட. பரஸ்பர லாபம். தமிழ் பேப்பர் எடிட் செய்துகொண்டிருந்தபோது இதை மிகத் தெளிவாக அறிந்தேன்.

மீண்டும் அதனைத் தொடர்வதென்றால் இன்னொரு தளத்தை உருவாக்கித்தான் செய்யவேண்டியிருக்கிறது. எனவே, அதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் ஒரு புதிய மின் இதழைத் தொடங்க உத்தேசித்திருக்கிறேன். புதிய எழுத்தாளர்களின் பயிற்சித் தளமாக இது அமையும். அவர்கள் படித்துப் பயில உறுதுணையாக, தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் இதில் தொடர்ந்து எழுதவிருக்கிறார்கள்.

இந்தப் புதிய தளத்தில் அறிமுகமாகிற எழுத்தாளர்களுக்குப் புத்தக எழுத்துப் பயிற்சி – அவர்கள் விருப்பப்பட்டால் தனியே தருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இங்கு அறிமுகமாகிறவர்களுக்கான பிரசுர சாத்தியங்களும் ஒழுங்கான ராயல்டியும் விரிவான விளம்பர நடவடிக்கைகளும் கட்டாயம் உண்டு என்பது உள்ளுறை சங்கதி.

ஆனால் மீண்டும் சொல்கிறேன். நிறுவனம் எனதல்ல. நான் அதன் ஊழியனுமல்லன். ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கும் அக்கறை மிக்க பதிப்பாளருக்கும் இடையே நான் தொடங்கவிருக்கும் இம்மின்னிதழ் ஒரு பாலமாயிருக்கும். அவ்வளவே.

விரைவில் மேலும் விவரங்கள் வரும். தமிழ்ப் புத்தாண்டு முதல் சில புதிய சந்தோஷங்கள் சித்திக்கும்.

பிகு: இதனை வாசிக்கும் நண்பர்கள் இத்தகவலை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களிலும்
பரப்ப வேண்டுகிறேன். முன்போல் இணையத்தில் அதிகநேரம் என்னால் இருக்க முடியாததாலும் ட்விட்டர் தவிர வேறெங்கும் நான் செயல்படாததாலும் இதனைச் சொல்லவேண்டியிருக்கிறது. நல்லவற்றை ஊரறிய உரக்கச் சொல்வது ராமானுஜர் ஸ்டைல். இவ்விஷயத்தில் அதனைக் கடைப்பிடிப்போருக்கு எம்பெருமானார் திருவருள் சித்திக்கும் 😉

Share

15 comments

  • நல்ல முயற்சி நன்றி பாரா! 😉

  • //பயன்பாடற்ற இடத்தில் பலான செயல்பாடென்பது மெய்யுலகில் மட்டுமல்ல; மெய்நிகருலகிலும்கூட //

    🙂

    வாழ்த்துகள்….

  • sir, Welcome back…..
    Any new books ready for publishing?
    Awaiting yourreply
    With love,
    V.Rajasekar

  • பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட சிரமமென்பது மறந்துவிடுகிறது.

    அருமையான சிந்தனையினை டேக்கிக்கொண்டேன் 🙂

    வாழ்த்துகள் சார் 🙂

  • வாழ்த்துகள் சார்..!!ஆடிய காலும்,பாடிய வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க… 🙂

  • புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்

  • ஒவ்வொரு நாளும் இந்த தளத்திற்கு வந்து ஏமாந்தேன். இன்று இன்ப அதிர்ச்சியாய் மீள் பதிவை கண்டேன். தாங்கள் ஒரு வேளை தளத்தை கைவிட்டு விட்டீர்களோ என அஞ்சினேன். நல்லவேளை தொடர்ந்து தங்கள் எழுத்தால் எங்களை மகிழ்வியுங்கள்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி