தன்னைப் பற்றி இவ்வளவு அபாண்டமாக எழுதும் அளவுக்கு தான் செய்த தவறு குறித்து சாகரிகாவிடம் கேட்க விரும்புவதால் தன்னை அவளிடம் அழைத்துச் செல்ல முடியுமா? சூனியனிடம் பறி கொடுத்திருந்த தன் நிழலை மீட்டுத் தர முடியுமா? என்ற இரு கோரிக்கைகளை கோவிந்தசாமி சாகரிகாவின் தோழி ஷில்பாவிடம் வைக்கிறான். அவளோ, ”இரண்டில் ஒன்று” என்கிறாள். கோவிந்தசாமியோ ”இரண்டுமே” என்கிறான்! கடைசியில் ஷில்பாவே ஜெயிக்கிறாள்.
சாகரிகாவை சந்தித்தாலும் உங்களை அவள் அங்கீகரிக்கமாட்டாள் என சொல்லும் ஷில்பா சாகரிகா கூறி வரும் அபாண்டங்களைத் தடுக்க அவனுக்கு ஒரு யோசனை கூறுகிறாள். அவளின் யோசனையை ஏற்ற கோவிந்தசாமிக்கு நிகழ்ந்தது என்ன? என்பதே மீதி சுவராசியம். கோவிந்தசாமி வந்து போகும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வாசிக்கின்ற நம் மனதில் ஒரு சித்திரமாக அமர்ந்து கொள்கிறான். அவனை கடவுள் ரெம்பவே சோதிக்கிறார்!
தன் நிழலை வைத்து சூனியன் செய்த சதி தெரிய வந்ததும் கோவிந்தசாமி அழ ஆரம்பிக்கிறான். வேறு என்ன செய்ய முடியும்? அவனைக் காத்திருக்கச் சொல்லி விட்டு செல்லும் ஷில்பா ஏதேனும் தகவல் கொண்டு வந்தால் மட்டுமே கோவிந்தசாமியின் பரிதாபநிலை மாறக்கூடும். அதுவரையிலும் அவனைப் போல புதிய விரல் குறிகளை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அடுத்த அத்தியாயம் வரை காத்திருக்கலாம்.
”உனக்கு சாவே கிடையாது” எனத் தரப்படும் நம்பிக்கையும், அந்த நம்பிக்கை பொய்த்த பின் போடப்படும் ”ரிப்” குறித்தும் வாசித்துக் கடக்கையில் முகநூலைக் கடக்கும் உணர்வு மேலிடுகிறது.
காவல் படை சூனியன் உள்ளிட்ட வேறு சில சூனியன்களும் நீலநகருக்குள் இருப்பதை பா.ரா. கோடிகாட்டியிருக்கிறார். கோவிந்தசாமிக்காக ஷில்பா, அவனின் நிழலுக்காக சூனியன், சாகரிகா, பிற சூனியன்கள் என நீலநகரம் அடர்த்தியடைந்து வருகிறது. அதகளங்களை எதிர்பாக்கலாம் என்றே தோன்றுகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.