என்ன செய்யப் போகிறாய்?

சுமார் பதினாறு, பதினேழு வருடங்களுக்கு முன்னர் மண்டபம் பகுதியில் [ராமநாதபுரம் மாவட்டம்] சில மீனவர்களைச் சந்தித்து பேட்டி கண்டேன். அந்தப் பேட்டி, மண்டபம் முகாமுக்கு அப்போது வந்துகொண்டிருந்த இலங்கை அகதி மக்கள் தொடர்பானது என்றபோதும் மீனவர்களின் வாழ்க்கை, தொழில் சார்ந்த சில விஷயங்களும் அதில் பேசப்பட்டன.

இப்போது பேசப்படுகிற மீனவர்களின் பிரச்னை அப்போதும் இருந்தது. பெயர் மறந்துவிட்டது என்றபோதும் நான் பேசிய மீனவர்களுள் ஒருவர் தமது தந்தையார் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டு கர்த்தர் அருளால் பிழைத்து, மேற்கொண்டு நான்காண்டு காலம் வாழ்ந்து, பின் மறைந்தார் என்று சொன்னது நினைவிருக்கிறது. அவரது தந்தையார் சுடப்பட்டது இன்றைக்குச் சுமார் இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னராக இருக்கக்கூடும்.

பிரச்னை புதிதல்ல. அன்று முதல் இன்றுவரை தென் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கு நேரும் அபாயங்கள், அதைத் தவிர்க்க அல்லது தடுக்க இந்திய அரசு வலுவான எந்த நடவடிக்கையையும் எடுக்காதிருப்பது, இழப்பு நேரும்போது செய்தியாவது, கொஞ்ச நாள் பேசிக்கொண்டிருந்துவிட்டு மறப்பது, மீண்டும் ஒரு மரணம் நேரிடும்போது பதறுவது வழக்கமாகிவிட்டது. மத்திய அரசின் கூட்டில் இருந்தால் தமிழக அரசு மௌனமாக ஒரு வேண்டுகோள் விடுக்கும். எதிராக இருந்தால் கொஞ்சம் கோபமாகப் பேசும். மற்றபடி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் நிதியுதவி, அன்னார் மனைவிக்கு அங்கன்வாடியில் ஆயா வேலை போன்றவை எப்போதும் நடப்பது. இம்முறை உயிரிழந்த மீனவர் ஒருவர் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தவர். ஜெயலலிதா ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த பின்பும் தமிழக அரசு அவரது மனைவிக்கு அங்கன்வாடி உத்தியோகம் வழங்கியிருப்பதுதான் ஒரே வித்தியாசம்.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ன? கச்சத் தீவை மீட்பது என்று ஜெயலலிதா அடிக்கடி அடிக்கும் ஜோக்கை மறந்துவிட்டு யோசிக்கலாம்.

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டுகிறார்கள். மீன்வளம் மிக்க பகுதி அப்பால் இருப்பதே காரணம். முக்கியமாக இறால் வகை அதிகம் கிடைக்கும் கடல்பகுதி இலங்கை எல்லைக்குள் இருக்கிறது என்று நான் முன்னர் சந்தித்த மீனவர் சொன்னது நினைவிருக்கிறது. கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் இந்த வளம் அதிகம் என்றும் அவர் சொன்னார். பிழைப்பு என்று வரும்போது சர்வதேச எல்லைக்கோடுகள் நினைவில் இருக்காது என்று அவர் சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. இது தமிழக மீனவர்கள் மட்டும் செய்வதல்ல. பாகிஸ்தான் மீனவர்கள் அரபிக் கடலில் இந்திய எல்லைக்குள் வந்து செல்வது அடிக்கடி நடப்பதே. ஜப்பானிய-தென் கொரிய எல்லையில், கம்போடிய-மலேசிய எல்லையில், மொசாம்பிக்-மடகாஸ்கர் கடற்பகுதியில், இன்னும் பல்வேறு சர்வதேசக் கடல் எல்லைகளில் மீனவர்கள், மீனுக்காக வரையறுத்த இடத்தைத் தாண்டிச் செல்வது எப்போதும் நடப்பதுதான் என்று கடற்படையில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர் அப்போது சொன்னார். ஆனால் எல்லை தாண்டி வரும் மீனவர்களை எச்சரிப்பதோடு பிற தேசங்களின் கடற்படை நிறுத்திக்கொள்வது வழக்கம். அவர்களும் எச்சரிக்கைக்குக் கட்டுப்பட்டுத் திரும்பிச் செல்வார்கள். இலங்கைப் படையின் எச்சரிக்கையே துப்பாக்கிச் சத்த வடிவில்தான் வரும் என்று அந்த நண்பர் குறிப்பிட்டார். [இந்தப் பேட்டி வெளியான கல்கி இதழைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் டைப் செய்து இங்கே தருகிறேன்.]

இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைத் தாக்குவதற்கான குறைந்தபட்சக் காரணமாக, அவ்வப்போது நடைபெறும் கடத்தலை முன்னர் சொல்வார்கள். இப்போது அதற்கான வாய்ப்பே இல்லாத நிலையில் இந்தத் தாக்குதல் நடவடிக்கை முற்றிலும் அயோக்கியத்தனமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. இந்திய அரசு மிக வலுவான கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். இந்தத் தொடர் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தச் சொல்லி வற்புறுத்த அல்லது மிரட்டியிருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் வாழைப்பழம் போல் ஒரு கருத்து வருவது எரிச்சலூட்டுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கூட்டணி உண்டா இல்லையா என்பதே தெரியாமல், இந்த விஷயத்தில் எப்படி ரியாக்ட் செய்வது என்று தமிழக முதல்வர் தவிப்பது புரிகிறது. இது அவர் மீதும் அவரது ஆட்சியின்மீதும் அழுத்தமான அவநம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதுகூட புரியாத அளவுக்கு அவரது குழப்பம் எல்லை கடந்திருப்பதையும் உணர முடிகிறது.

பல்லாண்டு காலமாக நீடித்துவரும் இந்தப் பிரச்னைக்கு இரு தேச அதிகாரிகள் மட்டத்திலான கலந்தாலோசிப்புக் கூட்டம் என்றாவது இதுவரை ஒன்று நடந்திருப்பதாகத் தெரியவில்லை. ‘நண்பர் ராஜபக்‌ஷே’வுடன் இன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவருக்கும் பிரதமராக அமர்ந்திருக்கும் ‘மிக நல்ல மனிதர்’ மன்மோகன் சிங்குக்கும் உள்ள நல்லுறவைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காவது உபயோகமாக ஒரு செயல் புரியலாம்.

அட, மக்கள் நலன் சார்ந்த அக்கறைகூட வேண்டாம். குறைந்தபட்சம் தமிழர்களின் வோட்டு சார்ந்த கவனம் கூடவா வேண்டாம்?

Share

6 comments

  • வாத்தியாரே, ‘ http://tl.gd/8e98db ‘ இதப்படிச்சா ‘ ஜெயலலிதா ஜோக்’ போலத் தெரியலையே. கொஞ்சம் விவரமா எழுதினா மிக்க பயன்.

  • Sri Lankar Ambassador in India should have been called by the External Affairs Ministry to lodge a protest on such continuous killing of Indian fishermen by Sri Lankan Navy. Re Kachatheevu, we cannot abrogate international treaties, whatever TN politicians say.

  • //இந்திய அரசு மிக வலுவான கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். இந்தத் தொடர் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தச் சொல்லி வற்புறுத்த அல்லது மிரட்டியிருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் வாழைப்பழம் போல் ஒரு கருத்து வருவது எரிச்சலூட்டுகிறது.//

    முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு முறை அரசின் நிலைப்பாடு குறித்துப் பேசுகையில் “We condemn every untoward incident with the strongest possible words, issue empty threats in raised voice and then go home and sleep peacefully. The issue and suffering of the affected is then forgotten.” என்றார். அவர் வாக்கு சத்தியம்.

    //பல்லாண்டு காலமாக நீடித்துவரும் இந்தப் பிரச்னைக்கு இரு தேச அதிகாரிகள் மட்டத்திலான கலந்தாலோசிப்புக் கூட்டம் என்றாவது இதுவரை ஒன்று நடந்திருப்பதாகத் தெரியவில்லை.//
    நடந்தது ஐயா! 2010 அக்டோபரா நவம்பரா நினைவில்லை. நம்ம நேவியும் ஸ்ரீலங்கா நேவியும் பேசினார்கள். Operational commanmders அளவிலான பேச்சுவார்த்தை. சுமுகமாக முடிந்ததாகவும் சொன்னார்கள். ஆனால், Admiralகள் யாரும் வாய் திறக்கவில்லை. அரசாங்க ரீதியான ஆணைகள் இல்லாமல் இரு படையினரும் modus operandi மாற்ற முடியாது. Political will is absent. அரசாள்வோருக்கு 176000 கோடியை எண்ணி முடிக்கவே நேரம் போதவில்லை, பாவம்!

  • What “J” said about katchatheevu may not be a joke from the strategic location of that island which should be with India’s control.Otherwise apart from political statements you can recall all similarities on srilankan’s issue with your kizhakku’s book by Anita Haksar on about Burma.
    As I earlier asked you,a book on Vietanam war’ld be interesting.It should start from the background of JFK’s assanination,that too at Texas!
    Anbutan
    Shrini

  • சும்மா கண்டனம் எல்லாம் வேஸ்ட்!
    அணு குண்டு வேடிச்சதுக்கு, இந்தியா மேல அமேரிக்கா பொருளாதார தடை விதிச்சா மாதிரி, இந்தியாவும் இலங்கை மேல பொருளாதார தடை விதிக்கணும்.
    இலங்கை தமிழர்கள் தவிர, சிங்களர்கள் அனைவரும் (ராஜ பக்சே உள்பட) யாரும் சொந்த காரணங்களுக்காகவோ வியாபார காரணங்களுக்காகவோ இந்தியா வருவதை தடை செய்ய வேண்டும் (பாகிஸ்தானுக்கு உள்ளது மாதிரி).
    இதையெல்லாம் பண்றத வுட்டுட்டு, இவரு இருபது வருசமா கடிதம் எழுதுறாரு. அவிங்க கண்டனம் தெரிவிக்கிராய்ங்க. தமிழக மீனவன் செத்துக்கிட்டு இருந்க்கான்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி