இருட்டறையில் எம்பெருமான், ஏசி காரில் தமன்னா

சென்னையின் நரக வெயிலிலிருந்து தப்பிக்க நினைத்து ஒரு நாலு நாள் பெங்களூர், மைசூர்ப் பக்கம் போக ஏற்பாடு செய்திருந்தேன். என் துரதிருஷ்டம், அங்கேயும் பட்டை காய்கிறது.

ஆனால் சென்னை அளவுக்கு மோசமில்லை என்றுதான் சொல்லவேண்டும். காலை, மாலை வேளைகளில் காற்று குளிர்ந்துவிடுகிறது. அபூர்வமாக ஒரு சில சொட்டுகள் மழையையும் கண்டேன். அந்தவரை ஆண்டவனுக்கு நன்றி.

பெங்களூர் எனக்குப் பிடிக்கவில்லை. எல்லா சாலைகளிலும் எப்போதும் டிராஃபிக் ஜாம். சென்னையிலாவது குறிப்பிட்ட இடத்தில் ஜாமாகும் என்று தெரிந்து செல்லலாம். பெங்களூரில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை போலிருக்கிறது. சிறு சந்துகள் தொடங்கி அகன்ற சாலைகள் வரை அங்கிங்கெனாதபடி எங்கும் வாகனங்கள் எப்போதும் நிற்கின்றன. எப்போதாவது நகர்கின்றன. யாராவது லீவுக்கு பெங்களூர் போ என்று இனிமேல் சொன்னால் பிரம்பை எடுத்துக்கொள்ளப் போகிறேன்.

ஆச்சரியமூட்டும் விதமாக மைசூர் அமைதியும் அற்புதமும் கலந்த நகரமாயிருக்கிறது. இத்தனைக்கும் வண்டி வண்டியாக டூரிஸ்டுகள் வந்து இறங்கியபடியே இருக்கிறார்கள். ஹோட்டல்களில் அறை காலி இல்லை என்று வாசலில் நின்றே கூவுகிறார்கள். பொழியும் மழை போலவே வருகிற கூட்டமெல்லாம் ஒரு சில நிமிடங்களில் எங்கு சென்று ஒதுங்குகிறது என்று தெரியாமலேயே நகருடன் கலந்துவிடுகிறது.

அரண்மனைகள், பூங்காவனங்கள், கோயில்கள், சிற்பங்கள், நினைவகங்கள் என்று மூலைக்கு மூலை பார்ப்பதற்கு இருக்கிற நகரம் மைசூர். கொஞ்சம் தள்ளி ஸ்ரீரங்கப்பட்டணம். இன்னும் கிராமத்து வாசனை மாறாத நகரம். புராதனமான ரங்கநாதப் பெருமாள் கோயிலுக்குச் சென்றேன்.

குப்பென்று அடிக்கும் வவ்வால் வாசனையில் தன் தொன்மத்தைப் பறைசாற்றும் ஆலயம். பிரம்மாண்டமான ஆலயம். வாழ்நாளில் ஒருமுறைகூட சுண்ணாம்பு பார்க்காத சுவர்களும் உடைந்த சிற்பங்களும் இருளோவென்று பயமுறுத்தும் தோற்றமும் ஒரு பிரச்னையில்லை என்றால் ரசிக்க நிறைய இருக்கிறது.

காவிரிக் கரையோரம் இருக்கும் நான்கு பெரும் ரங்கநாதர் ஆலயங்களுள் ஸ்ரீரங்கப்பட்டணம் ஒன்று. பெருமாளின் சயன கோலத்தை கன்னட ஜருகண்டி இல்லாமல் நின்று ரசிக்க வேண்டும். [நல்ல கூட்டம்.] எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டம்! திருவட்டார் ஆதிகேசவப் பெருமாளுக்கு அப்புறம், என்னை பிரமிப்பிலாழ்த்திய சயனப்பெருமாள் இவர்தான்.

ஆனால், அத்தனை டூரிஸ்டுகள் வந்து குவியும் கோயிலை சற்றேனும் நல்லபடியாக வைத்துக்கொள்ள வேணுமென்று ஏனோ நிர்வாகத்துக்குத் தோன்றவேயில்லை. சுமார் ஐந்நூறு பேர் க்யூவில் நின்றுகொண்டிருந்தார்கள். நல்ல வெயில் வேளை. ஸ்பெஷல் தரிசன டிக்கெட் எங்கே கிடைக்கும் என்று பலபேர் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். ம்ஹும். அப்படியொரு விஷயமே கிடையாதாம்.

கொளுத்துகிற வெயிலில், சற்றும் காற்றுக்கு வழியற்ற க்யூவில் வியர்த்து விறுவிறுக்க அத்தனை பேரையும் நிற்க வைப்பதைப் பெருமாளே அதர்மசேவை என்றுதான் சொல்லுவார்.

சேவித்துவிட்டு வெளியேறி திரிவேணி சங்கமத்துக்குப் போய் பரிசல் ஏறினேன். நெடுநாள் ஆசை. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் முதல் முறை முதல் மரியாதை பார்த்ததிலிருந்து.

ஜில்லென்று காவிரியில் பரிசலில் போவது பரம சுகம். பரிசல்காரப் பையன் நடுவே ரவுண்ட் அடித்தெல்லாம் காட்டினான். பம்பரம் மாதிரி பரிசல் நின்ற இடத்தில் சுழலும்போது ஜாலியாக இருக்கிறது. கைவசம் மாற்றுத்துணி எடுத்துச் செல்லாததால் இறங்கிக் குளிக்க முடியாமல் போய்விட்டது. பழகிய நீச்சல் நினைவிருக்கிறதா என்று பார்க்கக் கிடைத்த வாய்ப்பு போனதில் சற்று வருத்தமே.

முக்கியமாகச் சொல்லவேண்டியது பிருந்தாவன். இதை மாதிரி ஒரு அயோக்கியத்தனமான ஏமாற்றுவேலை இன்னொன்றில்லை. ராத்திரிதான் போகவேண்டும், விளக்கொளியில் தண்ணீரின் மாய நர்த்தனம் அது இதுவென்று ஏகத்துக்குக் கிளப்பிவிட்டிருந்தார்கள்.

சுமார் முப்பதாயிரம் பேருக்கு இம்மாதிரி கெட்ட அட்வைஸ் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. கால் வைக்க முடியாத கூட்டத்தில் முழி பிதுங்கி ஒருவழியாக அந்த நாட்டிய நீர் அரங்குக்குப் போனால் ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் ஜனம். க்யூ கட்டி உட்காரவைத்துவிட்டார்கள். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அந்த டான்ஸ் ஆரம்பமானது.

என்னத்தைச் சொல்ல? ஒரு நாலாந்தர தெலுங்கு சினிமா கனவுக் காட்சியில்கூட இதைவிடச் சிறந்த சீரியல் பல்ப் செட்டப் செய்திருப்பார்கள். ஒரு கன்னடப்பாட்டு, ஒரு ஹிந்திப்பாட்டு, ஒரு தெலுங்குப் பாட்டு. எல்லாம் டப்பாங்குத்து. பாட்டுக்கேற்ப தண்ணீர் பீய்ச்சியடித்து வண்ண விளக்குக் குழம்புடன் கரைந்து விழுகிறது.

இடையில் எழுந்து போகக்கூட முடியாமல் கூட்டத்தில் சிக்கி, நெரிபட்டு ஒருவழியாக அறைக்குப் போய்ச்சேர்வதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிட்டது.

கிருஷ்ணராஜ சாகருக்குப் போக நினைப்பவர்கள் ராத்திரி வேளையைத் தவிர்க்கவும். பகலில் சென்று பூங்காக்களை ரசித்தாலே போதும். இந்த டப்பாங்குத்து நாராசமாக உள்ளது.

திப்பு சுல்தான் அரண்மனை, உடையார் அரண்மனை என்று கால் வலிக்க நிறைய சுற்றிவிட்டு ஒருவழியாகச் சென்னை வந்து சேர்ந்தேன். மைசூர் மகாராஜா பற்றி முகில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான். அரண்மனையைப் பார்த்துவிட்டு வந்தபிறகு எனக்கும் ஒரு புத்தகம் எழுதும் ஆவல் வந்திருக்கிறது. ஆனால் நான் அந்தப் புத்தகத்தை எழுதினால் வினவுதான் வெளியிட வேண்டியிருக்கும்.

மைசூரில் எல்லா ஹோட்டல்களிலும் உணவு ருசியாக இருக்கிறது. அதிகக் காரமில்லாமல் ஒவ்வொரு பொருளும் தனது பிரத்தியேக ருசியை இழக்காமல் தனித்து ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, எம்.டி.ஆரில் சாப்பிட்ட ஒரு மதிய உணவு. பாரம்பரியக் கர்நாடக உணவு அது. விவரித்து எழுத இந்தப் பதிவில் இடமில்லை. முடிந்தால் தனியே.

நாலு நாளில் இரு நகரங்களிலுமாகச் சுமார் முன்னூறு கிலோ மீட்டர்கள் சுற்றியிருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கிறது. இந்த வருஷம் நிறைய சுற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

பி.கு: மைசூரில் சுறா பெரிய ஹிட் தெரியுமா? 4.30 மணிக்காட்சிக்கு மதியம் ஒரு மணியிலிருந்தே சாலையில் வரிசைகட்டி நிற்கிறது ஜனம். படம் சூப்பரோ, சொதப்பலோ. விஜய், சூர்யா என்றால் விடமாட்டார்களாம். இந்த வரிசையில் இப்போது கார்த்தியும் சேர்ந்துவிட்டதாக ஒரு டாக்ஸி டிரைவர் சொன்னார். காரணம் பையாவாம். தகவல் சொன்ன டிரைவர் தன் வண்டியின் டேஷ் போர்டில் தமன்னா படத்தைத்தான் வைத்திருந்தார் என்பதறிக.

Share

9 comments

  • //குறிப்பாக, எம்.டி.ஆரில் சாப்பிட்ட ஒரு மதிய உணவு. பாரம்பரியக் கர்நாடக உணவு அது. விவரித்து எழுத இந்தப் பதிவில் இடமில்லை. முடிந்தால் தனியே.//
    அய்யா.. சாமி.. அது என்ன எம்.டி.ஆரோ!  அதுவாவது நல்லாயிருக்கட்டும். உங்க ராசி வொர்க் அவுட் ஆகி, அதையும் நாசம் பண்ணிடாதீங்க! தனிப் பதிவெல்லாம் வேண்டாம். 🙂

  • நாந்தான் சொன்னேனே…!
     
    அப்புறம், எம்.டி.ஆர் பாவம். அவ்வளவுதான் சொல்வேன்.

  • புத்தகம் எழுதுங்க தாராளமாய் .. ஆனால் எங்குமே உணவருந்திய இட வல விவரங்கள் தேவை இல்லை .
    நான் இன்னொரு முறை போய் முயற்சித்து பார்க்கும் வரை .. 🙂  🙂

  • பாரா சார்.இந்த பதிவு அருமை.வருடந்தோரும் ஊட்டி கொடைகானலையும் அழித்து வரும் இந்த சமுகத்துக்கு உங்களின் பதிவு மிகச் சரி.இனியாவது திருந்தட்டும்!!!

  • Why you have not mentioned anything aboutRANGANA THITTU" an island on Cauvery on the way to Mysore from Bangalore; a very interesting place for visiting and not be a missed one;Dont miss to go there during your next visit;
    R.S. Mani

  • //காவிரிக் கரையோரம் இருக்கும் நான்கு பெரும் ரங்கநாதர் ஆலயங்களுள் ஸ்ரீரங்கப்பட்டணம் ஒன்று. பெருமாளின் சயன கோலத்தை கன்னட ஜருகண்டி இல்லாமல் நின்று ரசிக்க வேண்டும். [நல்ல கூட்டம்.] எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டம்! திருவட்டார் ஆதிகேசவப் பெருமாளுக்கு அப்புறம், என்னை பிரமிப்பிலாழ்த்திய சயனப்பெருமாள் இவர்தான்.//
    திருஇந்தளூர் (திருவிழந்தூர்) பரிமள ரங்கநாதரைப் பார்த்ததில்லையோ! அவரும் பள்ளிகொண்ட பெருமாள்தான். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் அல்லது வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு!

  • மைசூர் (மற்றும் ஸ்ரீரங்கப்பட்டிணம், பிருந்தாவன் கார்டன்ஸ் (கிருஷ்ணராஜசாகர் அணை)), கபினி அணை, ரங்கனதிட்டு, நிமிஷாம்பா கோயில் (ஸ்ரீரங்கப்பட்டிணம், காவிரிக் கரையில் உள்ளது) எல்லாம் நன்றாய் எஞ்சாய் செய்யவேண்டுமென்றால் ஜூலை 15 தேதிக்குப் பிறகு செல்லவேண்டும் காவிரியில் வெள்ளம் பெருக்க, கிருஷ்ணராஜசாகர் அணை திறப்பு அருகில் இருந்து பார்க்கவேண்டும்.. சூப்பர்! பள்ளி (கோடை / குளிர்கால) விடுமுறை நாட்களில் எல்லா இடங்களிலும் கூட்டம் அம்மும்.

  • கடைசி வரியில் தலைப்பை நியாயப்படுத்தி விட்ட அநியாயம் கண்டேன்!
    நாலு வருட முன்பு நானும் மைசூர் பக்கம் சென்றிருந்தேன். கபினி அணைப்பக்க காடுகள் அட்டகாசமாக இருக்கும். வன விலங்குகள் நிறைய இருப்பதாகச் சொன்னார்கள்.
    அடுத்த இந்திய விஜயத்தில் அங்கெல்லாம் மறு பிரசன்னமாவதாக இப்போதே முடிவெடுத்து விட்டேன்.
    மைசூர் ஹோட்டல்களில் மொத்த டேபிளின் அத்தனை ஆர்டரையும் சேர்த்துக்கொண்டு வந்து டேபிள் நடுவில் அப்படியே சாத்தி விட்டுப் போகின்ற சுவாரசியம் கவனிக்கவில்லையா?!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி