34வது சென்னை புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக இன்று முடிவடைந்தது. கடந்த 13 நாள்களில் வராத கூட்டமெல்லாம் இன்று வந்துசேர, வளாகம் மகத்தான மக்கள் வெள்ளத்தில் அழகாகக் காட்சியளித்தது. என் இடைவிடாத 13 நாள் பிரார்த்தனைக்கும் பலனாக இன்று வாசல் ஈட்டிக்காரக் கூட்டத்துக்கும் மக்கள் அதிகம் செவி சாய்க்கவில்லை.
காலை முதலே அனைத்துக் கடைகளிலும் நல்ல விற்பனை இருந்தது. இதுநாள் வரை தவற விட்டவர்களும், வாங்கவேண்டியவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு மொத்தமாக இன்று அள்ளிச் செல்ல வந்தவர்களும் குடுகுடு குடுகுடுவென்று குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ஒரு நல்ல மனிதர் கடைதோறும் ஏறி இறங்கி கேட்லாக் சேகரித்துக்கொண்டிருந்தார். முதலில் யாராவது விற்பனையாளராக இருக்கும் என்று நினைத்தேன். விசாரித்தபோது அவர் ஒரு நல்ல வாசகர்தான் என்று தெரிந்தது. புத்தகக் கண்காட்சியில் கேட்லாக்குகளைச் சேகரித்துக்கொண்டு சென்றுவிடுவாராம். பிறகு ஆற அமர நியூபுக்லேண்ட்ஸுக்குச் சென்று, தேர்ந்தெடுத்த ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்குவாராம். பத்து பர்செண்ட் தள்ளுபடி ஒரு பொருட்டில்லை; ஏனோ எனக்கு இங்கே கூட்டத்தில் வாங்கப் பிடிப்பதில்லை என்று சொன்னார்.
இன்று காலை நான் என் சொந்தக் கணக்குக்கு மிச்சமிருந்த சில புத்தகங்களை வாங்கினேன். கட்டக்கடைசி தினம் வரை இந்த கம்யூனிஸ்ட் கடைக்காரர்கள் மட்டும் க்ரெடிட் கார்ட் வாங்கவே மாட்டேன் என்று ஒரே பிடிவாதம். [சில சிறு பதிப்பாளர்கள்கூட ஜனதா க்ரெடிட் கார்ட் வசதிக்கு ஒப்புக்கொண்டார்கள்.] நவீன யுகத்தில் இப்படியெல்லாம் கன்சர்வேடிசம் காப்பாற்றி என்ன புரட்சி செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.
மதியத்துக்குப் பிறகு கிழக்கு அரங்கிலேயே பெரும்பாலும் இருந்தேன். மினிமேக்ஸ் சமையல் புத்தகங்களும் ப்ராடிஜி புத்தகங்களும் கொத்துக் கொத்தாகப் பறந்துகொண்டிருந்தன. இவற்றுடன் ஒப்பிட்டால் இன்று கிழக்கின் வேகம் சற்றுக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். ஆயினும் வாங்கியவர்களுள் பெரும்பாலும் பத்து சுஜாதா, ஐந்து வள்ளியப்பன், மூன்று ஜெயமோகன் என்று மொத்த மொத்தமாகத்தான் வாங்கினார்கள். எழுதி எடுத்து வந்து ஒவ்வொன்றாக அள்ளிப் போட்டு டிக் அடித்துச் சென்றவர்களே இன்று அதிகம். நின்று நிதானமாகத் தேடி வாங்கியவர்களெல்லாம் நேற்றோடு சரி.
மாலை ரோசா வஸந்த் வந்தார். மதியத்திலிருந்தே சுற்றிகொண்டிருப்பதாகச் சொன்னார். அரங்குக்கு உள்ளேயும் பிளாட்பாரக் கடைகளிலுமாக இரு தினங்களாக எக்கச்சக்கமாக வாங்கிச் சேர்த்திருக்கிறார். அவர் வாங்கிய புத்தகங்களைப் பற்றிக் கொஞ்சம் விசாரிக்க நினைத்திருந்தபோது யாரோ கூப்பிட, தொடர்ந்து உரையாட முடியாமல் போனது. இந்தப் பக்கம் எழுத்தாள இரட்டையர் சுபா வந்தார்கள். ஜெயமோகனின் உலோகத்தை வாங்கிக்கொண்டு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பேசியதில் பெரும்பகுதி சினிமா விஷயம். 26/11 பற்றிய புத்தகங்கள் குறித்து விசாரித்தார்கள். பெங்குயின் வெளியிட்டிருக்கும் ‘கஸாப்’ பற்றிச் சொல்லி அனுப்பினேன். சமீபத்தில் நான் விரும்பிப் படித்த புத்தகம் அது. பரபரவென்று ஓடுகிற மொழியும் சம்பவங்களும் சமகால சரித்திரம் எழுதுவோருக்கு மிகவும் பிடிக்கும்.
சில வலையுலக நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள், ஒரு சில சினிமாக்கார நண்பர்கள் என்று இன்று நிறைய சந்திப்புகள், சிறு உரையாடல்கள். இரவு எட்டு மணிவரை கண்காட்சியில் இருந்தேன். மிகவும் சோர்வாக இருந்தபடியால் புறப்பட்டுவிட்டேன். திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றதற்கு [முகலாயர்கள்] திருஷ்டி கழிப்பதற்காக, இன்று கண்காட்சியில் முகில் தன் மொபைலைத் தொலைத்தது 34வது சென்னை புத்தகக் காட்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக நிச்சயம் இருக்க முடியாது.
சில பொதுவான கவனிப்புகள்:
1. மக்கள் நிச்சயமாக நிறையவே புத்தகம் வாங்குகிறார்கள். விலை யாருக்கும் ஒரு பொருட்டாக இல்லை.
2. வரலாறு அதிகம் விரும்பப்படுகிறது. அதிகம் விற்கிறது. இந்தளவு வேறெந்தத் துறை சார்ந்தும் பிரமாதமான விசாரிப்புகள் இருப்பதாக எனக்குப் படவில்லை.
3. சமையல் புத்தகங்களுக்கான மார்க்கெட் அப்படியே இருக்கிறது. கொத்துக்கொத்தாக எடுத்துச் செல்கிறார்கள். மருத்துவத் துறையைப் பொறுத்தவரை கசமுசா சப்ஜெக்டுகளுக்கு நல்ல ரீடர்ஷிப் இருக்கிறது. அடுத்தபடியாக இதயம், இதய நோய் தொடர்பான புத்தகங்களுக்கு. இயற்கை உணவு, யோகா, தியானம் போன்ற சப்ஜெக்டுகளில் வருகிற புத்தகங்களுக்கும் கணிசமான வாசகர்கள் இருக்கிறார்கள்.
4. ரஜனீஷ் உள்பட சாமியார்களின் புத்தகங்களுக்குக் கொஞ்சம் ஆதரவு குறைந்திருப்பதுபோல் ஒரு தோற்றம் [எனக்கு] தென்பட்டது. முன்பே ஒரு சமயம் குறிப்பிட்டதுபோல, ஈழம் தொடர்பான புத்தகங்களின் விற்பனையும் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த சே குவேரா ஜுரம் மட்டும் ஏன் பல்லாண்டு காலமாக ஒரு துளியும் குறையவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
5. மொழி பெயர்ப்பு நூல்களில், அது வரலாறாக இருக்குமானால் நல்ல வரவேற்பு இருக்கிறது. மற்ற துறைகள் சார்ந்த மொழிபெயர்ப்புகள் அத்தனை வேகத்தில் விற்பதாகத் தெரியவில்லை.
6. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் நிறையப்பேர் ஐன்ஸ்டைன், நியூட்டன், எடிசன் போன்ற அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான புத்தகங்களை அதிகம் விசாரித்தார்கள். எண்பது ரூபாய்க்குக் கிடைத்த ரா. கணபதி எழுதிய விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நூலை [200 ரூபாய் மதிப்புள்ளது.] நான் பார்த்தவரை நிறையக் கல்லூரி மாணவர்களே வாங்கிச் சென்றார்கள். சில வருடங்களாக மாணவர்கள் மத்தியில் செங்கோலோச்சிக்கொண்டிருந்த அப்துல் கலாமின் புத்தகங்கள் இந்த ஆண்டு அத்தனை பரபரப்பு ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. விவேகானந்தர்தான் திரும்பவும் ஜெயிக்கத் தொடங்கியிருக்கிறார்.
7. இந்த ஆண்டு இலக்கிய பதிப்பு நிறுவனங்களில் நல்ல கூட்டம், நிறைய விற்பனை இரண்டையுமே காண முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. கவிதைகளும் நிறைய விற்பதாக ஹமீது சொன்னார். இதான் சாக்கு என்று ஏகப்பட்ட திடீர்க் கவிஞர்கள் உருவாகிவிடாதிருக்க எம்பெருமான் காத்தருள வேண்டும். நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுதி ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிகள் கண்காட்சியிலேயே விற்றுத் தீர்ந்தது ஒரு சரித்திர சாதனை. எந்த ஓர் இலக்கியவாதியின் புத்தகமும் இத்தனை வேகத்தில் இதுவரை விற்றதில்லை.
8. பெரும்பாலான பதிப்பு நிறுவனங்கள் ஏனோ இந்த ஆண்டு கண்காட்சிக்கென புதிய புத்தகங்கள் கொண்டுவரவில்லை. கடந்த ஆண்டு நிகழ்ந்த கட்டுக்கடங்காத பேப்பர் விலை உயர்வு காரணமாயிருக்கலாம். கிழக்கு, விகடன், உயிர்மை என்று சில கடைகளில்தான் குறிப்பிடத் தகுந்த அளவு புதிய புத்தகங்களைக் காண முடிந்தது. பல பதிப்பகங்கள் அதிகபட்சம் பத்து அல்லது பன்னிரண்டு புதிய புத்தகங்களோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9. என் தனிப்பட்ட சந்தோஷம், புத்தகக் கண்காட்சிக்கென்று கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பரில் நாங்கள் திட்டமிட்டு உழைத்துக் கொண்டுவந்த அத்தனை புத்தகங்களும் சொல்லி சொல்லி ஹிட் அடித்தன. கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எங்கள் புதிய ஹிட் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம்.
10. இந்த ஆண்டுப் பணிகளை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தொடங்குவதற்கான ஆரம்ப உத்வேகத்தை இந்தக் கண்காட்சி வழங்கியிருக்கிறது.
அவ்வளவுதான். இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லவேண்டும். தமிழ் பேப்பரில் பத்ரியும் இட்லிவடையில் பிரசன்னாவும் இதே மாதிரி தினசரி எழுதாதிருந்தால் நான் இப்படி ஒழுங்கு மரியாதையாக தினமும் எழுதியிருப்பேனா என்பது சந்தேகம். அலைந்து திரிந்துவிட்டு அலுப்புடன் வீடு திரும்பி அதன்பின் உட்கார்ந்து எழுதுவது பேரிம்சை. துணைக்கு இரண்டு பேர் இருந்தபடியால்தான் இது சாத்தியமானது. ஒரு மானசீக உந்துதலாக அவர்களுடைய குறிப்புகள் இருந்ததைக் குறிப்பிடவேண்டும். பல எழுத்தாளர்கள், வாசகர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் இரவு பன்னிரண்டுக்குமேல் ஆனாலும் விழித்திருந்து தினமும் இதைப் படிப்பதைக் கண்காட்சியில் சந்தித்தபோது சொன்னதும் சந்தோஷமளித்தது.
இனி ஒருவாரம் நன்றாகப் படுத்துத் தூங்கி எழுந்து சாப்பிட்டு, திரும்பப் படுத்துத் தூங்கி எழுந்து சாப்பிட்டு…
தூக்கம் வருகிறது. குட் நைட்.
[…] http://writerpara.com/paper/?p=1954 […]
//இனி ஒருவாரம் நன்றாகப் படுத்துத் தூங்கி எழுந்து சாப்பிட்டு, திரும்பப் படுத்துத் தூங்கி எழுந்து சாப்பிட்டு//
வெற்றிகரமாக பரீட்சை முடித்த,ரிசல்ட் பெற்றதும் வரும் மகிழ்ச்சி + களைப்பினை போல! தொடர்ந்து தினசரி -நடுவில் விடுமுறை – எடுத்துக்கொண்டு தொடர்ந்து தகவல்களும் சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றியும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சாரே ! 🙂
இரு இட்லி என்று ஆர்டர் கொடுக்கிறாரோ ஹரன் என்று சந்தேகமெல்லாம் படாமல் சக்ஸஸ் என்றே நினைத்துக்கொண்டேன்! 🙂
குட் நைட்டு..!
Thx sir!
அருமையான coverageற்கு நன்றி.(13 முறை)
2012 க்கான சந்தைக்கான யோசனைகளையும் சொல்லி விடுங்கள்.
(suggestions for improvement)
’’நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுதி ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிகள் கண்காட்சியிலேயே விற்றுத் தீர்ந்தது ஒரு சரித்திர சாதனை. எந்த ஓர் இலக்கியவாதியின் புத்தகமும் இத்தனை வேகத்தில் இதுவரை விற்றதில்லை’’
தேகம் நாவல் பத்தாவது நாளிலேயே 1800 பிரதி விற்று அடுத்த பதிப்பும் வந்து அதுவும் விற்றுக்கொண்டிருக்கும் அற்புதமான தகவல் பொய் என்கிறீர்களா? மனுஷ்யபுத்திரன் லட்சரூபாய் ராயல்டிக்கு செக் எழுதிவிட்டார் என்கிறார்களே அதுவும் பொய் என்கிறீர்களா? விளைவுகளை ஏற்கத்தயாரா?
Great coverage PaRa. Enjoyed it to the hilt.
Rest eduthuttu fresh a vanthu thakkunga Sir !!!!
//suryanarayanan says:
January 18, 2011 at 8:40 AM
’’நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுதி ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிகள் கண்காட்சியிலேயே விற்றுத் தீர்ந்தது ஒரு சரித்திர சாதனை. எந்த ஓர் இலக்கியவாதியின் புத்தகமும் இத்தனை வேகத்தில் இதுவரை விற்றதில்லை’’
தேகம் நாவல் பத்தாவது நாளிலேயே 1800 பிரதி விற்று அடுத்த பதிப்பும் வந்து அதுவும் விற்றுக்கொண்டிருக்கும் அற்புதமான தகவல் பொய் என்கிறீர்களா? மனுஷ்யபுத்திரன் லட்சரூபாய் ராயல்டிக்கு செக் எழுதிவிட்டார் என்கிறார்களே அதுவும் பொய் என்கிறீர்களா? விளைவுகளை ஏற்கத்தயாரா?//
இன்னொரு கேள்வியை கேட்க மறந்துட்டீங்க சூர்யநாராயணன்… ”இல்லை சாருவை இலக்கியவாதியா ஏத்துக்கலையா?”
//இரு இட்லி என்று ஆர்டர் கொடுக்கிறாரோ ஹரன் என்று சந்தேகமெல்லாம் படாமல் சக்ஸஸ் என்றே நினைத்துக்கொண்டேன்! :)//
ஆயில் சார், வணக்கம் வெச்சிக்கிறேன். பாவம் நீங்க, டிவிட்டர்ல என்கிட்ட என்ன பாடு படப்போறீங்களோன்னு எனக்கே வருத்தமா இருக்குன்னா பாத்துக்கோங்க.
கடைசி நாளில் உங்களிடம் காஷ்மீர் புத்தகத்தில் கையெழுத்து வாங்கியது மிக்க மகிழ்ச்சி.
ஆயில் போன்ற வர்த்தக சம்பந்தமாண புத்தகங்களை உங்களிடமிருந்து எதிபர்கின்றேன்.
மிக்க அன்புடன், ரமேஷ்
Thank you Para for the wonderful coverage. I have been following up your blog on the Book-Fair coverage. You gave us the feeling of as if we were there in Book-Fair through-out last two weeks. Keep it up!
நடுவில் ஒரு நாள் லீவு விட்டுட்டீங்களே! இன்னும் ஒரு நாள் நல்லாத் தூங்கி………… அலுப்பு தீர்ந்து ஃப்ரெஷா வாங்க.
நாங்கதான் தினம்தினம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தோம்.
எனக்குத் தெரிஞ்சு………….. சந்தியாவில் 33 புத்தகங்கள் இந்த வருடப் புத்தகத் திருவிழாவுக்கு வந்துருக்கு.
Congratulations to you and team! Wish you more success !! BTW,”Nilamaellaam Ratham” was nice and informative – I was clueless about the Palestine issue earlier.
—-கவிதைகளும் நிறைய விற்பதாக ஹமீது சொன்னார்—-
For uyirmai,whatever that sold in fair was bonus only. There is a strong expectation that,the govt library order committee is waiting to amass the uyirmai kavidhai books 🙁
தொடர்ந்து (ஒரு நாள் தவிர) எழுதியதற்கு நன்றி பா.ரா சார். நீங்கள் பரிந்துரைத்த சில புத்தகங்கள் எனக்கு இந்த வருட வாங்க வேண்டிய புத்தக பட்டியல் போட மிகவும் உதவியது. அதில் பெரும்பாலான புத்தகங்களை வாங்கியும் விட்டேன்.
இந்த தடவை உங்களை சந்திக்க முடியாம போச்சு.. அடுத்த கண்காட்சியில கண்டிப்பா வந்து பாக்கிறேன்.
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
//ஹமீது சொன்னார்//
சாருவை ரொம்பத்தான் படிக்கின்றீர்கள் போல் உள்ளது
ரொம்ப ரிலீஜியசாக தினமும் படித்துக்கொண்டு வந்தேன்..என்னை போன்ற NRI துரதிர்ஷ்டவாசிகளுக்கு ஒரு சின்ன வடிகால். நல்ல கவரேஜ், நன்றி பா.ரா.
பை தி வே, நீங்க கேட்காட்டியும் சொல்வேன். மூணுல டாப்பு உங்களது தான். நாராயணா நாராயணா 🙂
ஒருவழியாக சிறப்பாக புத்தகக்காட்சியை முடித்துவைத்துவிட்டீர்கள். உங்களுடன் அளவளாவிய நாட்களும், நேரமும் சிறப்பு! நல்லா ஓய்வெடுத்துட்டு வாங்க! அடுத்த புத்தகக்கண்காட்சிக்கு ஒரு வருஷம்தான் இருக்கு!
Sir,
Very enjoyable and informative write up. Thanks.
உங்கள் எழுத்தை (புத்தகம், இணைய பதிவுகள்) நான்கு வருடங்கள் படித்து வருகிறேன், கண்காட்சியில் யாரை பார்க்காவிட்டாலும் உங்களிடம் கண்டிப்பாக பேச வேண்டும் என்று மிக ஆவலாக இருந்தேன்.
நீங்கள் லலிதா ராமிடம் ஒரு வியாழக்கிழமை பேசிக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். காஷ்மீர் புத்தகத்தில் உங்கள் கையொப்பம் வாங்கினேன். உங்களிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. புத்தகத்தை தந்து விட்டு தலை லேசாக ஆட்டி விட்டு திரும்பி லலிதா ராமிடம் பேச தொடங்கினீர்கள். ஏமாற்றமாக இருந்தது. நிறைய பேரிடம் பேசி பேசி நீங்கள் அலுத்து போயிருப்பீர்கள் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன்.
ஸ்ரீநி: வருந்துகிறேன். நீங்கள் தவறான நேரத்தில் வந்துவிட்டீர்கள். நான் ராமுடன் அவர் அடுத்து எழுதவேண்டியபுத்தகம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அதனால் டைவர்ட் ஆக விரும்பியிருக்க மாட்டேன். கண்டிப்பாக ஒருநாள் அலுவலகம் வாருங்கள்.
Soodiya poo sudarkka motham 2430 copies sold
For 2 whole days, that I visited the Book Fair, I was looking for a well written book on Tamil Grammar which would help me re-acquaint myself with Tamil. I could not find one. I stopped reading Tamil with 10 std. Although I am still able to read Tamil without much difficulty, writing is formidable. It has been so since school days. The school Tamil text books, which are now available in the Govt website, is not of much help. It was not of much help even while at school.
Would you be kind enough to tell me if there are such books from Kizhaku or other publishers? I even searched the whole catalogue available in the Kizhaku website.
I did not realise till now that Publishers are so forth coming and interactive. Or else I would asked this to one of the publishers in the fair! Thank you.
Cheers
S Vijayaraghavan
உங்களுக்காகவே இது..
http://naatkurippugal.wordpress.com/2011/01/18/cinema-books-popcorn/
பின்னூட்டங்களை படிக்க மறக்காதீர்.
கிழக்கு புதிய திசையில் பயணிக்கும் என நம்புகிறேன் – வாழ்த்துக்கள்.
பாரா வாழ்த்துக்கள். வினவுவின் வசவு வந்து விட்டது. லக்கி லுக் மூலமாக ஆள்வைத்து நீங்களே எழுதிக்கொண்டதாகச் பேச்சி இருக்கிறது. புத்தகம் பிச்சுக்கிட்டு போவுமே
One more important topic and must know topic is about “Vietnam War”.This might expose USA;also’ll bring in some common interests on JFS’s murder.
Will kizhakku publish ra.ki.rangarajan’s books.Don’t again give me vanathi,etc.
Anbutan
Shrini
Sorry it was JFK’s murder happened at Texas and L.Jhonson is from Texas who was V.P then!!!It was LJ who went wild with V War!
//பாரா வாழ்த்துக்கள். வினவுவின் வசவு வந்து விட்டது. லக்கி லுக் மூலமாக ஆள்வைத்து நீங்களே எழுதிக்கொண்டதாகச் பேச்சி இருக்கிறது. புத்தகம் பிச்சுக்கிட்டு போவுமே//
வினவில் பா.ரா.வின் புளுகுகள் அம்பலப்பட்டுள்ளன. பொறுப்புள்ள எழுத்தாளன் என்றால் தனது அண்டப் புளுகுகளுக்கு அவர் பதில் சொல்லலாமே?
http://www.vinavu.com/2011/01/19/pa-raghavan-kizhakku-rss/ லிங்க காணமல் போய்விட்டது. பின்னூட்டத்தை பிரசுரிக்கும் போது பாரா தொலைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். எனவே மீண்டும் கொடுக்கிறேன். (ஒரு வேளை பாராவின் தளத்தில் புரட்சிக்கு மட்டும் தடையோ?)
//வினவில் பா.ரா.வின் புளுகுகள் அம்பலப்பட்டுள்ளன. பொறுப்புள்ள எழுத்தாளன் என்றால் தனது அண்டப் புளுகுகளுக்கு அவர் பதில் சொல்லலாமே?//
காமடி பீசுகள் நாலு மொட்டை மாடி மேல நின்று கொண்டு தூரத்தில் தெரியும் நாலு கட்டு கட்டவுட்டுகளில் இருக்கும் உருவங்களை பார்த்து டேய் நான் உன்னை கொல்லபோறேன், உன்னை வெல்லப்போறேன் என்று தினமும் கத்துமாம்!! வேலை இல்லாத ஒரு பத்து அந்த தாஷையும் தினமும் பார்த்து அட என்னா வீரம் என்னா தீரம், அப்படி போடு, அடிச்சு போடு என்று வெறியோட பிதற்றுமாம்!!!
ஒவ்வொரு சமுதாயத்திலும் லூசுகளும் கிறுக்குகளும் இருக்கத்தான் செய்கிறது! அவைகளின் திறன்களும் ஆக்கங்களும் (!!) நன்றாக புலப்படுவதால், அந்த சமுதாயத்தின் கழிவு தேங்கும் பகுதியை தாண்டி அதுகளை யாரும் விடுவதில்லை! அவர்களும் கழிவின் மேல் எப்பொழுதும் மிதந்ததால், நல்ல வலுவான தரை மீது அவர்களின் கால்களும் பட்டதில்லை, பட்டாலும் சகதியின் சுகம் மறையாமல் இருக்க கழிவின் உயர்வு சொல்லலை கை விட்டதும் இல்லை!
கழிவை, நிவாரணி என்றும், கழிவானாலும் கவர்ந்தவர்கள் என்றும் காவடி தூக்கும் சிலர் கழிவை உள்ளே விட்டால் வரும் துக்கங்களை – அது சரித்திரத்தில் படம் பிடிக்கப்பட்டு எல்லோருக்கும் போட்டு காட்டிய பின்பும் – துளியும் நினைப்பவர்கள் அல்லர்!
மானுட எதிரிகளை புரட்சியாளர்கள் என்று, மனிதத்தன்மையினை காலால் மிதித்து கொளுத்தி போட்ட கொடிய வன்முறை வழிமுறைகளை புரட்சி என்றும், புரியாமல் பிதற்றுகின்ற, புண்ணியம் அதிலே என்று பாட்டுப்பாடும் மாவோ வழிவந்த பண்டாரங்களை நல்ல வேளை பெரும்பாலான இந்தியர்கள் சீரியசாக எடுத்து கொள்ளவில்லை! கழிவுகளை கருணையுடன் நோக்கும் மக்களானாலும், கழிவின் இருப்பிடம், நிரப்பிடம் எங்கள் மத்தியில் அல்ல என்று உணர்ந்தவர்கள் நம்மக்கள்! ஒரு கொடூர நகைச்சுவை கொடுக்கும் டைம் பாஸ் கூட்டமாகவே இவர்கள் கருதப்படுவதில் எந்த ஆச்சிரியமும் இல்லை!
இந்த அழகில், இந்த அறிவாளிகள் எழுதும் குப்பைக்கு பா ராகவன் அவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று ஒருவர் வந்து ஜல்லி அடிக்கிறார்!
சமுதாயம் ஒதிக்கி வைக்கும் மூர்கத்தனங்கள் சில சமயம் சாயம் ஒன்றை இட்டுக்கொண்டு சகலமும் நானே என்று அவதாரம் எடுக்கும்! அநேகமாக
எல்லா சமூகங்களும் இவைகள் மோசடி கூட்டங்கள் மட்டுமே என்று கண்டுகொண்டு ஓதிக்கிவைத்துவிடும்! அப்படி செய்யாத இடங்களில், அவை அந்த சமூகத்தையே முழுங்கும் அளவிற்கு அவை பெரிதாக வளர்ந்து விடும்!!! காமடி பீசுகள் கிடைத்ததை எல்லாம் கடிக்கும் பீசுகளாக மாறிவிடும்!
ஸ்டாலினிசம், மாவோவிசம், பால்பாட்டிசம் போன்ற கழிவுகளை உள்ளே விட்டதன் விளைவாக அந்த நாட்டில் உள்ள மக்கள் பட்ட துன்பங்கள் உலகில்
ஏறக்குறைய எல்லோருமே அறிந்ததுதான்! நல்லவர்கள் வேடம் போட்டு அழித்தல் மற்றும் கொலைசெய்வதில் முதல் இடம் பிடித்த இந்த சர்வாதிகார நாசக்காரர்கள், கழிவல்ல, நல்லவர்கள் என்று முதலில் பலராலும் நினக்கபட்டவர்கள்தான்! But slowly the revolution and these revolutiionaries devoured their own children என்பது போல, அந்த சமூகத்திற்கு மட்டும் அல்லாது, தங்களின் கூட்டத்தில் உள்ள பலருக்கு சாவு மணி அடித்தார்கள் இவர்கள்!
இப்பேற்பட்ட அயோக்கியர்களின் படத்தை தங்கள் மார்பில் தைத்துக்கொண்டு, ஆவர்கள் அமைத்த கொலைகார மனித விரோத அயோக்கிய ஆட்ச்சியை மறைத்து, அவர்களின் பெயராலேயே இந்த நாட்டில் இவர்கள் புரட்சி செய்யப்போகிறார்களாம், மக்களுக்காக புரட்சி செய்யப்போகிறார்களாம்!!! என்ன கொடுமை சாமி இது?????
இந்த கொடிய காமடி பீசுகள் முதலில் இவர்களின் கடவுளார்களான மாவோவும் ஸ்டாலினும் கொன்று குவித்த லட்சக்கணக்கானவர்களின் சமாதியில் நின்று மன்னிப்பு கேட்டுவிட்டு, தங்களின் கடவுலார்களின் படத்தை கிழித்து விட்டு பின்னர், இந்நாட்டின் மக்களின் நல்வாழ்வை பற்றி பேசட்டும், மற்றவரின் எழுத்துகளை பற்றி பேசட்டும், இவன் இப்படி இவன் அப்படி என்று கத்தட்டும்! அதை விட்டு, இவர்கள் மற்றவர்களின் எழுத்துகளை விமர்சிக்கலாம்!
அஜிநோமோட்டோவாம், இந்த இந்த அழுகின முட்டைகள் சொல்லுகிறது!!! புளுகுகள் அம்பலமாம் இந்த மாவோவின் புழுக்கை புலம்புகிறது!!
(உங்கள் தளத்திற்கு இப்பொழுதுதான் முதலில் வருகின்றேன். என் வந்தேன் என்றால் வினவு கூட்டம் யாரையாவது வசை பாடினால் அவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு! ஆதலால் யார் அந்த நல்லவர் என்று பார்க்கத்தான் வந்தேன்)
உங்கள் தனிப் பார்வைக்கு மட்டும்.
வணக்கம் திரு பா.ரா.
திரு. ரா.கிரிதரனின் பதிவைப் படித்து ,உங்களுடைய ‘பின்கதைச் சுருக்கம்’ வாங்கி வாசித்தேன். உங்களுக்கே உரித்தான சுவாரசியமான மொழி நடையில், நல்லதொரு அறிமுக நூல். நமக்கு பிடித்தமானவர்களின் மொழிநடையில், நமக்கு பிரியமானவர்களைப் பற்றியும், அவர்களின் படைப்புகள் பற்றியும் வாசிப்பது மகிழ்ச்சியான அனுபவம். அதில் குறிப்பிட்ட சில நாவல்களை வாசித்திருக்கிறேன். இதுவரை வாசிக்காத சிலவற்றை தேடி வாங்கி கொண்டிருக்கிறேன். திரு. சு.வேணுகோபால் அவர்களைப் பற்றிய கட்டுரையில், அவர் எழுதிக் கொண்டிருக்கும் நீண்டதொரு நாவலை பற்றிய குறிப்புகள் வருகிறது. அந்த நாவல் வெளி வந்து விட்டதா?
எப்போதோ ‘எனிஇந்தியன்.காம்’ இணைய தளத்தில் காற்றுக் கடவு’ என்ற தலைப்பில் சு.வேணுகோபால் எழுதியதாக பார்த்த நினைவு. ஆனால் அப்போது ‘பின்கதைச் சுருக்கத்தை’ நான் வாசித்திருக்கவில்லை. இப்போது அவர்களுடைய தளத்தில் எந்த விபரங்களும் இல்லை. தெரிந்த இடங்களில் விசாரித்து விட்டேன். யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்கு மேலதிக விபரங்கள் தெரிந்திருக்கலாம். முதலில் இந்த நாவல் வெளியாகி விட்டதா என்பதே தெரியவில்லை. ப்ளீஸ், இதைப் பற்றிய விபரங்கள் கிடைத்தால் எனக்கு தெரிவிக்க முடியுமா?
நன்றி.
சித்ரா
[…] ”புத்தகக் காட்சி” இரண்டு வாரங்களாக அமோகமாக நடந்தது. அன்றாடம் பகலில் கண் அசரும் […]
[…] ”புத்தகக் காட்சி” இரண்டு வாரங்களாக அமோகமாக நடந்தது. அன்றாடம் பகலில் கண் அசரும் […]