2009

இன்று வாங்கிய புத்தகங்கள்

இன்றைக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியின் நியாயமான முதல் நாள். மழை, டிராஃபிக் ஜாம், பேரணி, அரசியல்வாதிகள் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லாத வேலைநாள். மதியம் இரண்டு மணிக்குக் கண்காட்சி தொடங்கியது. பிரமாதமான கூட்டம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் முதல் நாளுக்கே உரிய நியாயமான நல்ல கூட்டம்.

நெரிசலற்ற தினம் என்பதால் இன்றைக்குப் பணி ரீதியில் அல்லாமல் என் சொந்த விருப்பத்துக்காகச் சுற்றுவது என்று முடிவு செய்து இரண்டே கால் மணி முதல் ஏழரை மணி வரை சுற்றினேன். அதற்குமேல் முடியவில்லை. சென்ற வருடம் அடிபட்ட கால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று திரும்ப வலித்ததால், நிறுத்திக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்துவிட்டேன். நண்பர் குரு அதே சமயம் அலைந்து முடித்து அங்கே வந்து சேர்ந்ததால், இருவரும் அமர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். வலைப்பதிவு எழுதும் நண்பர்கள் சிலர் எங்களுடன் கலந்துகொண்டார்கள். ஒன்பது மணிக்குப் புறப்பட்டு வீடு சேர்ந்து மொபைலை எடுத்துப் பார்த்தால் 96 ஹேப்பி நியூ இயர். 96 பேருக்கும் மானசீகத்தில் ஹேப்பி நியூ இயர் சொல்லிவிட்டு இதனை எழுதுகிறேன்.Read More »இன்று வாங்கிய புத்தகங்கள்

கலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்!

'நீங்கள் New Horizon Media Private Limited' என்ற பெயரில்தான் பபாசியில் உறுப்பினராகியிருக்கிறீர்கள். எனவே உங்கள் அரங்க முகப்பில் அந்தப் பெயரைத்தான் பலகையில் வைக்க முடியும். கிழக்கு பதிப்பகம் என்று திருத்த முடியாது.’

முந்தைய வருடங்களில் எல்லாம் அப்படித்தானே இருந்தது என்று பிரசன்னா குழுவினர் வாதாடிப் பார்த்து வெறுத்துப் போய்த் திரும்பியிருக்க, [‘முன்ன இருந்திருக்கலாம் சார். இப்ப புது கமிட்டி. புது ரூல். பேரை மாத்த முடியாது!’] சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்துக்குப் பெயர்ப்பலகை இல்லாத குறையை, தமிழக முதல்வர் கலைஞரின் தொடக்க விழாப் பேச்சு சுத்தமாகப் போக்கிவிட்டது.

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்து, பொதுமக்களைக் கண்காட்சி வளாகத்துக்குள் அனுமதித்த மறுகணமே, ‘எங்கே அந்த சென்னை வரலாறு புத்தகம் கிடைக்கும்? யார் வெளியிட்டிருக்கிறார்கள்?’ என்று கேட்டபடியே வர ஆரம்பித்துவிட்டார்கள். பெயர்ப்பலகையை மாற்றி வைத்து அலகிலா விளையாட்டு நிகழ்த்திய அமைப்பாளர்களே கிழக்குக்கு வழி சொல்ல வேண்டியதானது.

கலைஞருக்கு நன்றி. இத்தனைக்கும் அவர் குறிப்பிட்டது Madras Rediscovered ஆங்கில மூலப் புத்தகத்தை. அதற்குத்தான் சென்ற ஆண்டு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கப்பட்டபோது அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை நாங்கள் வெளியிட்டிருக்கவில்லை.

‘என் பெயரால் வழங்கப்படும் விருதினை நீங்கள் வழங்கிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தில் மிகக் கவனமாக என் பெயரை இருட்டடிப்பு செய்திருக்கிறார் ஆசிரியர். வரலாற்று நூலுக்கு விருது கொடுக்கும்போது, வரலாறு சரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்க மாட்டீர்களா?’ என்று பபாசி விருது கமிட்டியை ஒரு பிடி பிடித்தபடிதான் ஆரம்பித்தார்.Read More »கலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்!

மாவோயிஸ்ட்: நூல் அறிமுகம்

இந்த வருடம் நான் எழுத நினைத்த, எழுதிக்கொண்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, என்னைச் செலுத்தி, தன்னை எழுதிக்கொண்ட புத்தகம் மாவோயிஸ்ட். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது.

இன்றைய தேதியில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர்கள் அவர்கள். இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள். ஆனால், பரவலாக வெளியே தெரியாதிருந்தது. கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில், மாநில அரசுக்கு எதிராக இந்த இடது சாரி இயக்கமே யுத்தம் தொடங்கிய பிறகுதான் மாவோயிஸ்டுகளைப் பற்றி நாம் பரவலாகக் கேள்விப்படத் தொடங்கினோம்.

இந்தியாவில், வளர்ச்சியடையாத மாநிலங்களிலும், வளர்ச்சியடைந்த மாநிலங்களின் வளர்ச்சியுறாத பகுதிகளிலும் மட்டும்தான் மாவோயிஸ்டுகள் இருக்கிறார்கள், செயல்படுகிறார்கள். இதனை வேறு சொற்களில் கூறுவதென்றால், அரசாங்கங்களால் அலட்சியப்படுத்தப்படும் மக்கள் மத்தியில் மாவோயிஸ்டுகள் செல்வாக்குப் பெறுகிறார்கள். அவர்களுடைய செயல்பாட்டுக்கான தேவையும் வரவேற்பும் அந்தப் பகுதிகளில் கிடைக்கின்றன.

இந்தியா கிராமங்களால் வாழ்கிறது என்று வாய் வார்த்தைக்கு நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் கிராமப்புற மக்களுக்கான நலத்திட்டங்கள் பெருமளவில் அவர்களைச் சென்றடைவதில்லை என்பதுதான் உண்மை. எத்தனை அரசுகள் மாறினாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், எத்தனை நூறு வாக்குறுதிகள் வழங்கினாலும் நடைமுறையில் அவர்களது வாழ்வில் பெரிய மாறுதல்கள் எப்போதும் ஏற்படுவதில்லை.

ஒப்பீட்டளவில் தமிழகம், கேரளம், கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் கணிசமான அளவுக்குப் பலனளித்திருக்கின்றன. இங்கும் அதே அரசியல்வாதிகள், அதே ஊழல்கள், அதே செயலின்மை, அதே சுரண்டல்கள் உண்டென்றாலும் வட மாநிலங்களில் உள்ள அளவுக்கு மோசமான நிலைமை தெற்கே உண்டானதில்லை. குறுகிய காலம் தமிழகத்திலும் தீவிரம் கண்ட நக்சலைட் இயக்கம், தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் விரைவிலேயே இல்லாமல் போனதை இங்கே நினைவுகூரலாம்.

தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கங்கள் ஆட்சி புரிந்ததில் சாதித்த மிகப்பெரிய செயல் என்று இதனைத் தயங்காமல் சொல்லலாம். வோட்டுக்காகவாவது சாலைகள், குடிநீர், அடிப்படை சுகாதாரம், மின்சாரம், விவசாயக் கடன் உதவிகள், அவ்வப்போது தள்ளுபடி, இலவசத் திட்டங்கள் என்று என்னவாவது செய்து, மக்கள் முற்றிலும் கொதிப்படைந்து போகாமல் பார்த்துக்கொள்கின்றன நமது அரசுகள்.

வட மாநிலங்களில் பெரும்பாலும் இதெல்லாம் இல்லை என்பது முதல் விஷயம்.

உதாரணமாக, இரண்டாயிரமாவது வருடம் மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமான சத்தீஸ்கரை எடுத்துக்கொள்ளலாம். சத்தீஸ்கரி என்னும் பிராந்திய மொழி பேசும் மத்திய பிரதேசத்தின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பதினாறு மாவட்டங்கள் இணைந்து இந்த மாநிலம் உருவானது.

அநேகமாக இம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் எண்பத்தி ஐந்து சதவீதம் கிராமங்கள்தாம். இவற்றிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களைத் தலைநகர் ராய்பூரிலிருந்து சென்றடைவது என்பது சாத்தியமே இல்லை. முற்றிலும் சாலைகளே இல்லாத கிராமங்கள் மிகுதி. மின்சாரம் பார்க்காத கிராமங்கள் மிகுதி. அடர்ந்த கானகங்களும் வற்றாத நீர் ஆதாரங்களும் இருப்பதால் மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.Read More »மாவோயிஸ்ட்: நூல் அறிமுகம்

சுஜாதா கிழக்கில் உதிக்கிறார்

வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கிழக்கு பதிப்பகம், சுஜாதாவின் புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. சுஜாதாவின் புத்தகங்களின் வரிசையில் முதலில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் வெளியாகின்றன. * ஆஸ்டின் இல்லம் * தீண்டும் இன்பம் * நில்லுங்கள் ராஜாவே * மீண்டும் ஜீனோ * நிறமற்ற வானவில் தமிழ் வாசகர்களின் பெருவரவேற்பைப் பெற்ற இந்த ஐந்து நாவல்களையும்  சென்னை… Read More »சுஜாதா கிழக்கில் உதிக்கிறார்

ஒரு முக்கிய அறிவிப்பு

//அன்புள்ள பாரா!

உங்களின் சில கட்டுரைகள் வாசித்தது, யூடுயூபில் நீங்கள் பேசியதன் தொடர்ச்சியாக கிழக்குக்கு புத்தகம் எழுத விருப்பம் தெரிவித்துச் ஓரிரு மாதம் முன்னால் உங்களுக்கு மின்னஞ்சல் எழுதியிருந்தேன். என்னைப்போலவே பலர் புத்தகம் எழுதுவது பற்றின அடிப்படைகளைக் கேட்டிருப்பதால் பின்னர் விளக்குவதாக சொன்னீர்கள். மீண்டும் நினைவுப் படுத்தியபோது, கடிதமாக எழுதுவதைவிட நேரில் பேசுவது பலனளிக்கும் என்று சொல்லியிருந்தீர்கள். இம்மடல் மீண்டும் ஒரு நினைவூட்டல்! நேற்று பத்ரி அவர்களின் வலைப்பதிவினை வாசித்தபின்னர் எழுதத் தோன்றிற்று. புத்தக கண்காட்சியில் பிசியாக இருப்பீர்கள் என்று தெரியும். ஆயினும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். எப்போது அழைப்பீர்கள் என்று காத்திருக்கின்றேன்.

அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்,
சி.வி. பாலசுப்பிரமணியன்//

—-

மேற்கண்ட மின்னஞ்சல் எனக்கு நேற்று வந்தது. இந்த நண்பர் எனது இணையத்தளக் கட்டுரைகளை, பத்திரிகைத் தொடர்களை இடைவிடாது படித்துத் தொடர்ந்து கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பவர். கடந்த செப்டெம்பர் மாதம் உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பட்டறையில் கலந்துகொள்ள வந்திருந்த நண்பர்கள் சிலரும், நிகழ்ச்சிக்குப் பிறகு இதே விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்டார்கள்.

சிறுகதை, நாவல், கவிதைகள் எழுதுவது வேறு; புனைவல்லாத புத்தகம் – குறிப்பாக அரசியல், சரித்திரம், வாழ்க்கை வரலாறுகள் போன்றவை எழுதுவது என்பது முற்றிலும் வேறு. இதன் எழுத்து முறை, இலக்கணங்கள், அடிப்படைகள் படைப்பிலக்கியம் சார்ந்த முயற்சிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது. பத்து நிமிடம், அரை மணிப் பேச்சில் அதனை விளக்க முடியுமா என்று தெரியவில்லை. அல்லது ஒரு கட்டுரையில்.

கிழக்கு எடிட்டோரியலைச் சேர்ந்தவர்களுக்கு [கிழக்குக்கு எழுதும் சில வெளி எழுத்தாளர்களும் வருவார்கள்] ஆண்டுக்கொரு முறை Non Fiction Writing தொடர்பான நுணுக்கங்களைச் சொல்லித்தர ஒருநாள் வகுப்பு நடத்துவோம். இது வலைப்பதிவாளர்கள் சந்திப்பு போலவோ, உரையாடல் அமைப்பு நடத்திய பயிற்சி முகாம் போலவோ இருக்காது. எங்கள் அலுவலகத்திலேயே [பெரும்பாலும் என் அறையிலேயே] நடக்கும். பதிவுக் கட்டணமெல்லாம் கிடையாது. ஸ்கிரிப்ளிங் பேட், பால்பாயிண்ட் பேனா, சிறு பிரசுர அன்பளிப்புகள், பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் இதெல்லாம் கிடையாது. மதிய உணவுகூட அவரவர் வீட்டிலிருந்தே மோர்சாதம் எடுத்துவந்துவிடுவது சாலச்சிறந்தது. டீ, காப்பி மட்டும் கிடைக்கக்கூடும்.

ஆனால் இந்த முறைசாராப் பயிற்சி முகாம், புத்தகம் எழுதுவதற்கு உபயோகமாக இருப்பதாகக் கலந்துகொண்ட நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் புத்தகக் கண்காட்சி முடிந்த பிறகோ அல்லது நடந்துகொண்டிருக்கும்போதோ இது நடக்கும்.Read More »ஒரு முக்கிய அறிவிப்பு